தொல்காப்பியத்தில் அறிவியல்

இலக்கணத்தையும் தாண்டி

தொல்காப்பியம் இலக்கண நூல் என்பது உலகத்தமிழர்கள் அனைவரும் அறிந்ததே. இலக்கணம் என்பதையும் தாண்டி வாழ்வியல், அறிவியல் போன்ற பல சமூக விதிகளைத் தொட்டிருக்கிறது என்பது ஆச்சர்யமான உண்மை. தொல்காப்பியம் காட்டும் அறிவியல் சிலவற்றை இங்கு கூற விரும்புகிறேன். அறிவியலுக்குள் நுழையும் முன்பு தொல்காப்பியம் குறித்து ஒரு சிறு முன்னுரை மட்டும். போரடிக்கும் முன் நிறுத்தி விடலாம். கவலை வேண்டாம்.

சுருக்கமாக விறு விறு தொல்காப்பியம்

தொல்காப்பியம் மொத்தம் 3 அதிகாரங்களைக் கொண்டது. அதிகாரம் என்றால் சர்வாதிகாரம் போல ஆட்டிப்படைப்பது போன்ற பொருள் அல்ல. அதிகாரம் என்றால் ஒரு நூலில் உட்பிரிவு. அவ்வளவுதான்.

எழுத்ததிகாரம்

சொல்லதிகாரம்

பொருளதிகாரம்

இவைதான் அந்த மூன்று அதிகாரங்கள். அதிகாரங்கள் மேலும் பல கூறுகளாகப் பகுக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு அதிகாரமும் 9 இயல்களைக் கொண்டது. இயல்களுக்குள் இன்னும் உட்பிரிவுகள் உண்டு. அதைப் பிறிதொரு தருணத்தில் பார்க்கலாம்.

தொல்காப்பியத்துக்கு பாயிரம் எழுதியவர் பனம்பரனார். பாயிரம் என்றால் முன்னுரை, முகவுரை போல அந்த நூலுக்கு ஒரு அறிமுக உரை. பொதுவாக  பாயிரம் எழுதுபவர்கள் நூலாசிரியரை நன்கு அறிந்தவராகவோ, உடன் பயின்றவராகவோ இருப்பார்கள். தொல்காப்பியம் நிலந்தரு திருவிற்பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் அவையில் அதங்கோட்டாசான் என்ற மாபெரும் அறிஞர் முன்னிலையில் அரங்கேற்றப்பெற்றது.

இயல்கள் என்று பாத்தோமல்லவா. அவற்றைக் கொஞ்சம் பார்க்கலாம். பெயர்கள் மட்டும்தான். எழுத்ததிகாரத்துக்குக் கீழ்வரும் இயல்களின் பெயர்கள் இதோ கீழே. நாம் படிக்க மறந்த சங்கதிகள் அல்லவா அதனால் உச்சரித்துப்பார்த்தால் வாய் கொஞ்சம் ஓரங்கட்டும். கவலை வேண்டாம். பொறுமையாகப் படித்தால் இலக்கணமும் இட்லிபோல் எளிதாக வாய்க்குப் பழகி விடும். எழுத்ததிகாரத்தில் மொத்தம் மொத்தம் 483 நூற்பாக்கள் இருக்கின்றன. நூற்பாக்கள் என்றால், நமக்குத் புரிந்த மொழியில் சொல்வதானால் பாட்டு அல்லது செய்யுள்.

நூல் மரபு

மொழி மரபு

பிறப்பியல்

புணரியல்

தொகைமரபு

உருபியல்

உயிர்மயங்கியல்

புள்ளிமயங்கியல்

குற்றியலுகரப்புணரியல்

சொல்லதிகாரத்துக்குக்  கீழ்வரும் இயல்களின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. சொல்லதிகாரத்தில் மொத்தம் எத்தனை நூற்பாக்கள் என்பதில் உரையாரிசிரியர்கள் பல்வேறு எண்ணிக்கைகள் முன்வைத்துள்ளனர். இளம்பூரணர் என்ற உரையாசிரியர் 456 நூற்பாக்கள் எனவும், சேனாவரையர், நச்சினார்க்கினியர் ஆகிய உரையாசிரியரகள் 463 நூற்பாக்கள் எனவும், தெய்வச்சிலையார் என்ற உரையாசிரியர் 453 நூற்பாக்கள் எனவும் தெரிவிக்கின்றனர். நாம் இப்போதைக்கு சொல்லதிகாரத்தை கரைத்துக் குடிக்கப்போவதில்லை. அதனால் எண்ணிக்கையைப் பற்றி அதிகம் கவலை கொள்ளவேண்டாம்.

கிளவியாக்கம் 

வேற்றுமை இயல் 

வேற்றுமை மயங்கியல் 

விளி மரபு 

பெயரியல் 

வினை இயல் 

இடையியல் 

உரியியல் 

எச்சவியல்  

பொருளதிகாரத்துக்குக் கீழ்வரும் இயல்களின் பெயர்களைக் கீழே காணலாம். பொருளதிகாரத்தில் மொத்தம் 656 நூற்பாக்கள் இருக்கின்றன.

அகத்திணையியல்

புறத்திணையியல்

களவியல்

கற்பியல்

பொருளியல்

மெய்ப்பாட்டியல்

உவமயியல்

செய்யுளியல்

மரபியல்

இந்த அறிமுகம் இப்போதைக்குப் போதும். தொல்காப்பியம் ஒரு கடல். அதை நாம் கொஞ்சம் கொஞ்சமாகக் கடக்கலாம். நாம் பார்க்கப்போகும் அறிவியல் பொருளதிகாரத்தில்தான் பொதிந்து கிடக்கிறது. கொஞ்சம் தோண்டிப் பார்க்கலாம்.

3000 ஆண்டுக்கு முன் அறிவியல் பேசிய இனம். 

நான் ஏற்கனவே சொன்னபடி, தொல்காப்பியம் இலக்கணம் என்ற அடையாளத்துக்கு மேல் அறிவியலையும் ஆராய்ந்திருக்கிறது. அதில் சிலவற்றைப் பார்க்கலாம்.

பொருளதிகாரத்தில் நூற்பா 577ல் உள்ள வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

“மக்கள் தாமே ஆறறி வுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”

மனிதன் ஆறறிவு கொண்டவன் என்பதை 3000 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்திருக்கிறார் என்றால் எவ்வளவு ஆச்சர்யம். மேலும் பொருளதிகாரம் நூற்பா 578ல்

“ஒருசார் விலங்கும் உளவென மொழிப” 

என்று எழுதியுள்ளார். இதன் பொருள், மனிதர்களைப் போலவே ஆறறிவு கொண்ட விலங்குகள், பறவைகளும் சில உண்டு. யானை,  குரங்கு, கிளி போன்றவைகளுக்கு ஆறறிவு என்று குறிப்பிடுகிறார். சரி ஆறறிவு என்ற குறிப்பை வைத்து நாம் தற்காலத்தில் வகைப்படுத்திய ஆறறிவைத்தான் குறிப்பிடுகிறார் என்று எப்படிச் சொல்வது. அதற்கும் நூற்பா இருக்கிறது. பொருளதிகாரம் நூற்பா 571 இதற்கான விடையைச் சொல்கிறது.

“ஓன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனோடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றோடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே” 

ஓரறிவு என்பது உடலால் அறிவது. அதாவது தொடு அறிவு. இரண்டறிவென்பது தொடு அறிவு மற்றும் நாவால் அறியப்படும் சுவை அறிவு. மூன்றறிவென்பது தொடு அறிவு, சுவை அறிவு மற்றும் மூக்கால் அறியப்படும் சுவாச அறிவு. நான்கறிவென்பது தொடு அறிவு, சுவை அறிவு, சுவாச அறிவு மற்றும் கண்ணால் அறியப்படும் பார்வை அறிவு. ஐந்தறிவென்பது தொடு அறிவு, சுவை அறிவு, சுவாச அறிவு, பார்வை அறிவு மற்றும் காதால் அறியப்படும் கேட்டல் அறிவு. மனதையும் சேர்த்து ஆறறிவென்கிறார். 3000 வருடங்களுக்கு முன் இந்த ஆராய்ச்சி என்பது சாதாரணமல்ல. மேலும் கவனிக்க வேண்டியது, தொல்காப்பியர் ஒவ்வொரு நூற்பாவின் முடிவிலும் மொழிப,  என்மனார் போன்ற வார்த்தைகளுடன் முடிக்கிறார். அதாவது முன்னோர்கள் சொன்னார்கள் என்று அர்த்தம். ஆக இந்தப் புரிதல் தொல்காப்பியர் காலத்துக்கும் முற்பட்டது என்று அறிந்து கொள்ளலாம்.

சரி இத்தோடு பாகுபாடு முடிந்ததா என்றால் இல்லை. எவையெல்லாம் ஓரறிவு, ஈரறிவு என்று எடுத்துக்காட்டுகளுடன் சொல்கிறார். பொருளதிகாரம் 572 முதல் 576 வரை கீழே காணலாம்.

“புல்லும் மரனும் ஓரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே” 

“நத்தும் முரளும் ஈரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”

“சிதலும் எறும்பும் மூவறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”

“நண்டும் தும்பியும் நான்கறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”

“மாவும் புள்ளும் ஐயறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”  

மரன் என்றால் மரம். புல், மரம்  போன்றவை ஓரறிவு உயிர்கள். நத்து என்றால் நத்தை, முரள் என்றால் கிளிஞ்சல். நத்தை, கிளிஞ்சள் போன்றவை ஈரறிவு உயிர்கள். சிதல் என்றால் கரையான். கரையான், எறும்பு போன்றவை மூன்றறிவு  உயிர்கள். நண்டு, தும்பி போன்றவை நான்கறிவு உயிர்கள். மா என்றால் விலங்குகள். புள் என்றால் பறவைகள். விலங்குகள், பறவைகள் எல்லாம் ஐந்தறிவு உயிர்கள். வியக்க வைக்கும் அறிவியல் அறிவு என்பது உள்ளங்கை நெல்லிக்கனி கூட அல்ல, உள்ளங்கை தர்பூசணி.

இந்த உலகம் ஐந்து வகை பூதங்களாகப் பிரிக்கப்படுகிறதென்று நமக்குத் தெரியும். இது இயற்கை அறிவு, வான் பற்றிய அறிவு இருந்தால்தான் இந்தப் பாகுபாடுகள் எல்லாம் சாத்தியம். தொல்காப்பியர் அவற்றையும் விட்டுவைக்கவில்லை. பொருளதிகாரம் 635 இவற்றை சொல்கிறது.

நிலம் தீ நீர் வளி விசும்பு ஐந்தும் 

கலந்த மயக்கம் ஆதலின்

இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாமைத் 

திரிவுஇல் சொல்லொடு தழாஅல் வேண்டும்

வளி என்றால் காற்று. விசும்பு என்றால் வானம். உலகம் என்பது இந்த ஐந்தும் கலந்தது என்கிறது இந்த நூற்பா. இது விஞ்ஞானத்தின் உச்சம் என்று தோன்றுகிறது. உலகில் மற்ற இடங்களில் மனித நாகரிகம் தழைக்கத் தொடங்கிய தருணத்தில் அறிவியலின் உச்சத்தில் வாழ்ந்தது தமிழினம். பெருமைப்பட்டுக் கொள்ளுங்கள்.

பின்குறிப்புகள்

1) http://www.valaitamil.com/tholkappiam-books-history_9004.html

2) https://archive.org/stream/orr-1113/orr-1113_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81#page/n23/mode/2up

3) http://anbuoviya.blogspot.in/2017/02/blog-post_40.html

4) http://www.ulakaththamizh.org/JOTSpdf/069047056.pdf

5) தொல்காப்பிய ஆராய்ச்சி  எழுதியவர்: இலக்குவனார்

4 Responses

  1. தொல்காப்பியம் எனும் காலத்தால் நிலைத்து நிற்கும் ஒன்றை பதிவிட்டதற்க்கு நன்றி…
    எப்பொழுதும் சலிக்காத ஒன்று உண்டு என்றால் அது நம் பண்டைய தமிழரின் வாழ்வியல் முறை குறித்து அறிய முயற்ச்சிப்பதே.. நடப்பு வாழ்வில் அதை நடைமுறைப்படுத்துவது அதிலும் இன்பம்..
    ஆம்.. ஒன்றை உறுதிப்படுத்துகிறேன்.. உலகின் மற்ற பகுதிகளில் நாகரீகம் தலையெடுக்க துவங்கிய காலகட்டத்தில் அதன் சிகரம் தொட்டிருந்தவன் தமிழன்..
    அனைத்து உயிர்களின் மேல் காதல் கொண்ட ஒருவனால் மட்டுமே அதை வகைப்படுத்தி காண்பிக்க இயலும்.
    இப்பிரபஞ்சம் ஐம்பூதங்களால் உருவாக்கப்பட்ட ஒன்று என்பதை உலகிற்கு வலியுறுத்தியது மட்டுமன்றி அதை கட்டுப்படுத்தும் ஆற்றலையும் அறிந்திருந்தான் என்பதை முழுமையாக புரிந்து கொள்வதே நமக்கு சவாலான ஒன்று.. மேலும் ஐம்பூதங்களின் தன்மையை அறிந்து அதை அன்றைய நடைமுறை வாழ்வில் புகுத்தி சாமானியனையும் அதை மேற்க்கொள்ள வைத்தது மனித சமுதாயத்தின் மேல் அவனுக்கிருந்த அறவற்ற காதலை காட்டுகிறது. அந்த நுட்பங்கள் அனைத்தயும் கடவுளை வழிபடும் முறையோடு ஒன்றினைத்தது அவனுடைய ஆகச்சிறந்த புத்திசாலித்தனம். ஓரறிவு முதல் ஆறறிவு வரை
    உயிரினங்களை வகைப்படுத்தியதோடு அவன் நின்று விடாமல் அவைகளின் தன்மையறிந்து விலங்குகள் மேலாண்மையின் உச்சத்தை தொட்டவன். உதாரணமாக அன்றைய காலத்தில் உலகின் மிகப்பெரிய உயிரினமான யானைகளை ஆட்டுக்குட்டியை போல் அடக்கி ஆண்டவன்.. யானைகளை போர்கள் வரை பயன்படுத்தி உலகின் புருவத்தை உயர்த்த செய்தவன். தோல்வியே காணாத அலெக்சாண்டரின் வெற்றிப்பயணத்திற்க்கு அழுத்தமாக முற்றுப்புள்ளி வைத்ததன் காரணம் யானைகளை போர்களில் பயன்படுத்த முடியம் என்பதை அவனுக்கு பாடமாக புகட்டப்பட்டதே இம்மண்ணில்தான். அவன் அதை அறிந்த கணத்தின் முன்னமே அத்திறமை இந்திய மண் முழுதும் பயிற்றுவிக்கப்பட்டிருந்தது தமிழனின் ஆளுமைத்திறத்திற்க்கு சிறிய உதாரணம் .
    தொல்காப்பியம் போன்ற நூல்கள் தமிழனின் சிறப்பை உணர்த்தும் ஒன்று என்றாலும் அன்றைய நூல்கள் அனைத்தும் இன்று நம்மிடத்தில் இல்லை.. அப்படியொரு வாய்ப்பு இருந்திருந்தால் உலக நாகரீகத்தின் ஆசான் எம்பாட்டன் என்று உரக்கச்சொல்லியிருக்கலாம்…
    இவ்வளவாவது மிஞ்சி இருக்கிறதே என்று ஆனந்தப்படுவதிலும் அதை அடுத்த தலைமுறையினர்க்கு கரையேற்றுவதிலும் நம் கடமை பொதிந்துள்ளது.. இப்பதிவின் மூலம் தங்களின் கடமை பூர்த்தியாவதாகவும் அதை வழிமொழிவதில் நானும் பங்கு பெற்று கொள்வதாக கர்வம் கொண்டு உரையை முடிக்கிறேன்.
    நன்றிகள் பல…
    வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்..

  2. தொல்காப்பியத்தில் அறிவியல் என்பது புதுமையான தலைப்பு.ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் தற்கால அரசியல் இலக்கியத்தை விட பழங்காலத்தில் வி பல மடங்கு உயர்ந்ததாகவும் ஆச்சர்யமாகவும் இருந்திருக்கிறது.ஆனால் உரை எழுதிய பலரில் பரிமேழலகர் முக்கியமானவர் என படித்திருக்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அண்மைக்கால வலைப்பதிவுகள்
தொடர்புடைய வலைப்பதிவுகள்
Index