பெற்றோர்களின் கவனத்திற்கு

குழந்தைகள் உலகம்

ஒரு குழந்தை பிறக்கும்போது அதனுடன் பெற்றோர்களும் பிறக்கிறார்கள் என்பதுதான் யதார்த்தமான உண்மை. குழந்தைக்கு எப்படி இந்த உலகம் புதிதோ, அதேபோல பெற்றோர்களுக்கும் குழந்தைகள் உலகம் என்பது புதிதுதான். வளரும் குழந்தைகள் எளிதாக நமது உலகுக்குள் அடியெடுத்து வைத்து அதற்குள் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். ஆனால் வளர்ந்துவிட்ட பல பெற்றோர்களால் குழந்தைகள் உலகத்துக்குள் அடியெடுத்து வைக்க முடியவில்லை. இந்த இரண்டு உலகங்களும் இணையும் இடத்தில்தான் தரமான தலைமுறைகள் உருவாக முடியும்.

குழந்தைகளின் உலகத்தைப் புரிந்துகொண்ட பெற்றோர்களிடம் வளரும் குழந்தை எதிர்காலத்தில் சிறந்தமுறையில் நம் சமுதாயத்தை எதிர்கொள்ளும் என்று கட்டாயம் சொல்ல முடியும். அந்த வகையில் குழந்தை வளர்ப்பு என்பதில் பெற்றோர்களுக்கான புரிதல் முதன்மையான இடத்தைப் பிடிக்கிறது. தகுதியான பெற்றோர்கள் என்பது அடுத்தத் தலைமறையின் அவசரத் தேவைகளில் ஒன்றாகிவிட்டது. இன்றைய பெற்றோர்களுக்கு வேண்டிய 3 முதன்மையான தகுதிகளைக் குறித்துப் பார்க்கலாம்.

மறுக்கப் பழகுங்கள் 

நாம் சிறுவயதில் பக்கோடா கேட்டாலே பத்துநாள் காத்திருக்க வேண்டும். அன்று நாம் கேட்டது உடனே கிடைக்காது. அழுது புலம்பினாலும் அம்மாவிடம் ஆறுதல் வார்த்தைகளைத் தவிர வேறு எதுவும் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது. அன்று நம்மில் பலர் அண்ணாமலை ரஜினி போல சபதம் எடுத்திருப்போம். எனக்கொரு மகனோ, மகளோ பிறக்கும்போது, கேட்டதை எல்லாம் நான் வாங்கித்தருவேன் என்று. உண்மையில் அந்த சபதங்கள் எல்லாம் இன்று நிறைவேறிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். இன்று எந்த வீட்டில் வேண்டுமானாலும் போய் பாருங்கள், எவ்வளவு விளையாட்டுப் பொருட்கள் இருக்கிறதென்று. அன்று சில விளையாட்டுப் பொருட்களை வைத்திருந்த நாம் ஒரு அளவுக்கு மேல் பிடிவாதம் செய்ததில்லை. கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்தும் இன்றைய குழந்தைகள் ஏன் இவ்வளவு பிடிவாதம் செய்கின்றன. கட்டாயம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

20 அல்லது 30 வருடங்களுக்கு முன்பு சிறுவர்கள் தற்கொலை என்பதை நம்மில் எத்தனை பேர் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இன்று ஆசிரியர் திட்டிவிட்டார் என்று தற்கொலை செய்யும் குழந்தைகள் எத்தனை பேர். இந்தியாவில் 2011ம் ஆண்டிலிருந்து 2015ம் ஆண்டு வரையிலான 5 வருடங்களில் மட்டும் 40,000 மாணவர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள் என்பது நம்மை அதிர்ச்சியில் உறைந்து போகச்செய்யும் செய்தி. சிறுசிறு தோல்விகள் கூட ஏன் இன்றைய குழந்தைகளை தற்கொலை செய்யுமளவுக்கு தூண்டுகிறது.

நம் தலைமுறைக்கு தோல்விகள் குழந்தைப் பருவத்திலிருந்தே துவங்கி விடுகின்றன. ஐஸ்கிரீம், சாக்லேட் எல்லாம் திருவிழா போன்ற நாட்களில் மட்டும்தான் கிடைக்கும் மற்றநாட்களில் கனவில் மட்டுமே சாத்தியம். இன்றைய தலைமுறை குழந்தைகள் தோல்வி என்றால் என்னவென்றே அறியாமல் வளர்கின்றார்கள். சிறுசிறு தோல்விகளுக்கெல்லாம் மனமுடைந்து போகிறார்கள். தோல்விகளைத் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லை. கேட்டது எல்லாம் கிடைக்கும், கேட்காமலே நிறைய கிடைக்கும் என்ற மனநிலையை சிறுவயதிலிருந்தே நாம்தான் ஊட்டி வளர்க்கிறோம். கேட்டது கிடைக்காதபோது அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆகையால் சிறுவயதில் இருந்தே மறுக்கப் பழகுங்கள்.  குழந்தைகள் துவக்கத்தில் அடம்பிடித்தாலும் போகப்போக புரிந்துகொள்வார்கள். தோல்விகள், மறுப்புகள், வலிகளும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. அதைத் தாங்கிக்கொள்ள குழந்தைகளைப் பழக்குவது பெற்றோராகிய நமது கடமை.

பயிர்ப்பு என்னும் பாலபாடம்

குழந்தைகளும் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள். பள்ளிகள் கூட பாதுகாப்பானதாக இல்லை. குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் பற்றிய புள்ளிவிபரங்களைப் பற்றி அறிந்தால் அதிர்ச்சியாக இருக்கும். அந்தப் புள்ளிவிபரங்கள் வலிமிக்கதாக இருந்தாலும் நமக்கு எச்சரிக்கை உணர்வைக் கொடுக்கிறது. தனக்கு நேர்ந்ததை சொல்லக்கூடத் தெரியாத பருவம் அது. இருந்தாலும் குழந்தைகளைக் காப்பாற்ற நாம்தான் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.

தமிழ் கலாச்சாரத்தில் பயிர்ப்பு என்பது பெண்களுக்கான குணங்களில் ஒன்று. பயிர்ப்பு என்றால் தவறானத் தொடுதலைப் புரிந்துகொள்ளுதல் என்று பொருள். இது இன்றைய காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, ஆண் குழந்தைகளும் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று. 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தவறான தொடுதல் என்றால் என்னவென்று புரியவையுங்கள். இது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைத் தவிர்க்க உதவும்.

இன்றைய தொழில்நுட்ப அறிவு

குழந்தைகள் எப்போதுமே மாற்றத்தை எளிதாக ஏற்றுக்கொள்வார்கள். மாறும் தொழில்நுட்பம் நமக்கு எரிச்சலூட்டும் வகையில் இருந்தாலும் அவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கத் தவறுவதில்லை. Whatsapp, Faceboook, Twitter போன்ற தொழில்நுட்பங்கள் நமக்கு கிலியூட்டும் விஷயமாக இருந்தாலும் சற்றுப் பொறுமையாக அதன் சாதக பாதகங்களை அறிந்துகொள்ள முயலுங்கள். இது குழந்தைகள் நீலத்திமிங்கலம் (Blue whale) போன்ற ஆபத்தான விளையாட்டுகளில் சிக்கிகொள்ளாமல் இருக்க உதவும்.  காலம் மாறும்போது நாமும் மாற்றிக்கொள்ள ஆயத்தமாகும்போது அடுத்தத் தலைமுறைக்கும் நமக்குமான இடைவெளி குறையும். அதுதான் அடுத்தத் தலைமுறை நம்மிடம் எதிர்பார்க்கும் மிகமுக்கியமான தகுதி.

உதவிய நூல்களும் வலைத்தளங்களும் 

1) http://www.indiaspend.com/special-reports/a-student-commits-suicide-every-hour-in-india-3-85917

2) https://www.hindustantimes.com/health-and-fitness/every-hour-one-student-commits-suicide-in-india/story-7UFFhSs6h1HNgrNO60FZ2O.html

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.