எண்ணென்ப ஏனை எழுத்தென்ப – ஒன்று

எண்ணும் எழுத்தும்

எண்ணித் துணிக என்று வள்ளுவர் எண்ணத்தைப் பற்றிதான் சொல்லியிருக்கிறார். எண்ணத்துக்கும், எண்களுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் என்பது புரியவில்லை. ஆனால், கிராமத்துப் பக்கம், எத்தனைப் பொருட்கள் இருக்கின்றன என்பதை, எத்தனை எண்ணம் இருக்கிறதென்று கேட்பார்கள். நம் மனதில் உதிக்கும் எண்ணமே ஒரு கணக்குதானோ என்று தோன்றுகிறது. தமிழைப் பொதுவாக தமிழ் நெடுங்கணக்கு என்று சொல்வார்கள். அதனால்தானோ என்னவோ, மனதில் உதிக்கும் எண்ணம் என்ற வார்த்தைக்கும் கணித எண்ணுக்கும் இடையே இவ்வளவு வார்த்தை ஒற்றுமை.

நாம் எண்களைப் பற்றியும், அது தொடர்பான வார்த்தைகளைப் பற்றியும், அவற்றுள் ஒளிந்துகிடக்கும் தகவல்களையும் கண்டறிய விழைகிறோம். தகவல்களைக் கண்டறியும் முன் 2 திருக்குறளைப் படித்துவிட்டுத் துவங்கலாம்.

“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு”

“வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்”

முதல் குறள், நாம் அனைவரும் அறிந்தது. எண்ணையும், எழுத்தையும், இரண்டு கண்களுக்கு இணையாக வள்ளுவர் குறிப்பிடுகிறார். எண்ணை முதலில் குறிப்பிடுவதில் இருந்து அதன் முதன்மையை உணரலாம். இரண்டாம் குறள்,  சாமானியர் வாழ்க்கையில் கணிதம் எவ்வாறு வழக்கில் இருந்தது என்பதை எடுத்துரைக்கிறது. அதன் பொருள்;

“என் கண்களும் அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளி இழந்து அழகு கெட்டன; அவர் என்னைப் பிரிந்து போன நாள்களைச் சுவரில் குறித்துத் தொட்டு எண்ணுவதால் என் விரல்கள் தேய்ந்து விட்டன.” 

அதாவது, கணவன் பிரிந்து சென்ற நாட்களை எண்ணுவதற்காக, தினமும் சுவரில் கோடிட்டு, அதை நாள்தோறும் எண்ணி அவர் பிரிந்த நாட்களைக் கணக்கிட்ட ஒரு பெண்ணைப் பற்றிய குறள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு சாமானியத் தமிழ்ப் பெண்ணின் கணக்கு நமக்கு வியப்பளிக்கிறது. அந்தப் பெண்ணிலிருந்து, நாம் எண்ணையும் எழுத்தையும் துவங்குவோம்.

“க”  என்னும் நுட்பம்

ஒன்று, முதல், துவக்கம், ஒருமை, முதன்மை என்று பல வார்த்தைகள் இருந்தாலும் அவை மறைமுகமாக எண் ஒன்றைத்தான் குறிக்கின்றன. எண் ஒன்று கட்டாயம் சிறப்புமிக்கதாகத்தான் இருக்கவேண்டும். ஏனென்றால் அதுதான் துவக்கம். “எண்ணென்ப ஏனை எழுத்தென்ப” என்று வள்ளுவர் சொன்னது போல முதலில் ஒரு எண் மற்றும் ஒரு எழுத்தில் துவங்குவோம். அந்த எண், எழுத்து இரண்டுமே ஒன்றுதான்.

“க” என்ற எழுத்துதான் அது. அதாவது தமிழில், ஒன்று என்ற எண்ணைக் குறிக்க “க” என்ற எழுத்தைப் பயன்படுத்துவார்கள். மேலும் தமிழில் “க” என்ற எழுத்துக்கு இறைவன் என்று பொருள். “கட” என்ற சொல் அனைத்தையும் கடந்தவன் இறைவன் என்ற பொருளில் இறைவனின் பண்பைக் குறிக்கிறது. “கட” என்ற தமிழ் சொல்தான் “God” என்ற ஆங்கில வார்த்தையின் வேர்ச்சொல். “க” என்ற சொல் கடவுளைத்தான் குறித்தது என்பதற்கு அந்த எழுத்தே ஒரு சான்று. “க” என்ற எழுத்தை, மேலே தட்டையான கோடாக இல்லாமல் சற்று வளைவாக எழுதிப் பாருங்கள், அப்படியே சிவலிங்கம் போல் இருக்கும். “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற திருமூலரின் வாக்கிற்கு “க” என்ற எழுத்தே சிறந்த எடுத்துக்காட்டு.

ஹிந்தியில் “ஏக்” என்றால் “ஒன்று” என்று அர்த்தம், அதற்கும் “க” என்ற தமிழ்ச்சொல்தான் வேர்ச்சொல். சரி, தமிழில் “அ” தான் முதலெழுத்து. ஆனால் “க” என்ற எழுத்து, எண் ஒன்றைக் குறிக்க வேண்டிய தேவை என்ன? தமிழில் எழுத்துக்களை, உயிர், மெய், உயிர்மெய் என்று பிரிக்கிறார்கள். உயிர், மெய் இரண்டும் தனித்தனியே இருந்து பயனில்லை. இரண்டும் கலந்து உயிர்மெய் ஆகும்போதுதான் வார்த்தை பிறக்கிறது.

க் + அ = க.

“க” தமிழின் முதல் உயிர்மெய் எழுத்து. உயிரும், மெய்யும் கலந்த முதல் உயிர்மெய் எழுத்து, அதனால்தான்  “க” என்ற எழுத்துக்கு எண் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. எண் ஒன்று, முதல் உயிர்மெய், கடவுள் என்ற பொருள், கடவுளின் வடிவம், அத்தனையும் கலந்து உருவாக்கப்பட்ட ஒரு எழுத்து “க”. தமிழனின் அறிவு நுட்பத்தைப் பாருங்கள். ஒரு எழுத்தை வடிவமைத்ததில் கூட எத்தனை நுட்பம்.

எண் ஒன்றுக்குள் உலகம்

ஒன்று, உலகம் போன்ற தமிழ் வார்த்தைகளுக்கும், World என்ற ஆங்கில வார்த்தைக்கும் வேர்ச்சொல் ஒரே வார்த்தைதான் என்றால் நம்ப முடிகிறதா?  வாருங்கள் பார்க்கலாம். ஒன்று என்ற  வார்த்தையின் வேர்ச்சொல் “ஒல்கு”. அதுவே பின்னர் சற்று மருவி “ஒன்று” என்றானது. “ஒல்கு” என்ற வார்த்தைதான் “உல்கு” என்றாகி, பின்பு “உலகம்” என்றானது. ஆக, “ஒன்று”, “உலகம்” என்ற இரண்டு வார்த்தைகளுக்கும் வேர்ச்சொல்”ஒல்கு” என்ற சொல்.  “ஒல்கு” என்ற வார்த்தைதான் சற்று மருவி “ஒல்டு” என்றாகி பின்னர் “World” என்ற சொல்லானது. சிறு கவிதை எழுதினாலும், உலகை மையமாக வைத்து எழுத வேண்டுமென்று எடுத்துரைத்த தமிழனின் மொழியிலிருந்து “World” என்ற ஆங்கில வார்த்தை பிறந்ததில் ஆச்சர்யமில்லை. நாம் பேச்சுமொழியில் சொல்லும்போதே ஒன்று என்ற வார்த்தையை “ஒன்னு” என்றுதான் சொல்கிறோம். ஆகையால் “One” என்ற ஆங்கில வார்த்தையின் வேர்ச்சொல் தமிழ்தான் என்பதை விளக்கிச்சொல்ல வேண்டியதில்லை.

முதல் இரவு

நாம், முதல் இரவு என்ற சொல் ஏன் பயன்படுத்தப்படுகிறது என்று மட்டும்தான் விடைகாண இருக்கிறோம், ஆகையால் தலைப்பைப் பார்த்துப் பதற வேண்டாம். திருமணம் தொடர்பாக நடக்கும் ஒவ்வொரு சடங்குகளுமே மணமக்களுக்குப் புதிதுதான். முதல் கல்யாணம், முதல் நிச்சயதார்த்தம் என்று நாம் சொல்வதில்லை, ஆனால் திருமணம் முடிந்த முதல் நாள் இரவை மட்டும் முதல் இரவு என்று சொல்வதன் காரணம்? நமது மரபணுவுக்கு (Gene) கொடுக்கப்பட்ட ஒரே ஒரு தலையாய பணி, தரமான தலைமுறைகளை உருவாக்குவதுதான். அடுத்தத் தலைமுறைக்கான முதற்புள்ளி அந்த இரவில்தான் துவங்குகிறது. வருங்காலத் தலைமுறையை வரவேற்கும் விதத்தில்தான் அந்த இரவு முதலிரவு என்று அழைக்கப்படுகிறது.

ஒருவனுக்கு ஒருத்தி

முதல் இரவில் மட்டுமல்ல, வாழ்க்கை முழுவதும் நம்மைப் பின்தொடர்கிறது இந்த ஒன்று. அந்த ஒன்றை வாழ்க்கை நெறியாகவே வைத்தார்கள் நம் முன்னோர்கள். சங்ககாலத்தில் இருந்தே ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரம் தமிழர்களிடையே கடைபிடிக்கப்பட்டாலும், அந்த வரம்பை மீறும் ஆண்கள் நிறைய இருக்கவே செய்தனர். அவர்களை இடித்துரைக்கும் விதமாக சொல்லப்பட்ட வாசகம்தான் ஒருவனுக்கு ஒருத்தி என்பது. கூர்ந்து கவனியுங்கள், அது ஆண்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட அறிவுரை. கற்பு என்பது ஆண்களுக்கும் உண்டு என்பதை வலிமையாக உணர்த்தும் வாசகம் அது.

ஒன்றே குலம், ஒருவனே தேவன்

ஒட்டுமொத்த மனித இனத்தையே ஒரே இனமாக அணுகிய, அந்த ஒருமைப்பாட்டைக் கொண்ட பெருமை தமிழர்களையே சாரும். சாதி, மதம், இனம் என்ற பாகுபாடுகளைக் கடந்து, மனிதம் என்ற பரந்துபட்ட பார்வையை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே முன்வைத்த இனம் என்பது தமிழனுக்குப் பெருமையே. ஆயிரம் வடிவில் வணங்கினாலும் ஒருவன்தான் இறைவன் என்ற விசாலப்பார்வையும் தமிழனுக்கே உரித்தானது. உலகத்தையே நேசித்த நம் தமிழினத்தின் சிறப்பைச் சொல்லும் மேன்மையான வரிகள் “ஒன்றே குலம், ஒருவனே தேவன்”.

ஓரெழுத்து ஒரு மொழி

பிறப்பு முதல் இறப்பு வரை விரவிக்கிடக்கும் ஒன்று என்னும் ஒருமை, நம் மொழியிலும் கலந்து கிடக்க வேண்டுமல்லவா. ஒரு மொழியின் பழமையைப் புலப்படுத்தும் முதன்மையான தகவல், அந்த மொழியில் புதைந்து கிடக்கும் ஓரெழுத்துச் சொற்கள்தான். அந்த வகையில் தமிழ் மொழி, ஐம்பதுக்கும் மேற்பட்ட ஓரெழுத்து சொற்களைக் கொண்டுள்ளது. உதாரணத்துக்கு சில வார்த்தைகளையும், அதன் அர்த்தத்தையும் பார்க்கலாம்.

  • ஐ – நுட்பம், அழகு.
  • ஓ – சென்று தங்குதல், மதகு நீர் தங்கும் பலகை.
  • க – நெருப்பு, கடவுள்
  • கா – சோலை.
  • கு – பூமி.
  • கூ – கூப்பிடு.
  • கௌ – ‘கௌவு’ என்று ஏவுதல்.
  • சே – சிவப்பு.
  • சோ – மதில்.
  • து – உண் என்னும் ஏவல்.
  • நூ – எள்.
  • நே – நேசம்.
  • நை – நைதல்.
  • நொ – மென்மை.
  • நௌ – மரக்கலம், கப்பல்.
  • பே – அச்சம்.
  • மே – மேன்மை.
  • மோ – மொள்ளுதல்.
  • வீ – பறவை.

முதல் இடம்

பள்ளிகளில் தொடங்கி, ஒலிம்பிக் போட்டிகள் வரை முதல் இடத்தின் மதிப்பு, அதற்குண்டான மரியாதை எல்லாம் சொல்லித்  தெரிய வேண்டியதில்லை. ஒன்று என்ற எண்ணுக்கும், அது தொடர்பான வார்தைக்குமான முதன்மைத்துவம் தவிர்க்க முடியாததென்றாலும், நாம் பிற எண்களையும் அது தொடர்பான வார்த்தைகளையும் அதே முதன்மைத்துவதோடு அணுக இருக்கிறோம். காத்திருங்கள்.

உதவிய நூல்களும் இணையதளங்களும்

  1. வேர்ச்சொற் கட்டுரைகள, மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்
  2. தமிழர் சமயம். ம. சோ. விக்டர்
  3. http://www.tamilvu.org/ta/library-lA460-html-lA460ind-151295

4 Responses

  1. தங்களின் எழுதும் திறமை அடுத்த நிலைக்கு சென்று விட்டதை நிரூபித்தது இந்த ஆய்வு பதிவு..
    வாழ்த்துக்கள்.. எழுத்தாளர்களின் சிறப்பே தங்களது படைப்பில் வாசகர்களை மூழ்க செய்வதில்தான் இருக்கிறது.. அந்த உணர்வை இந்த பதிவின் மூலம் உணர முடிந்தது.. நல்ல மெருகேறிய பதிவு என்பதில் ஐயமில்லை.
    மொழிகளின் தோற்றம் என்பது எப்பொழுதுமே வியப்பில் ஆழ்த்தும் ஒன்று. ஒவ்வொரு மொழியிலும் இருக்கும் ஆயிரக்கணக்கான வார்த்தைகளின் கண்டுபிடிப்பும் சாதாரண மனித அறிவிலிருந்து தோன்றியதாக கருத முடியவில்லை. காலப்போக்கில் சில வார்த்தைகள் பயன்பாட்டின் சௌகரியம் என்ற பெயரில் மருவினாலும் மொழிகளின் ஆணிவேரையோ அதன் தன்மையையோ காலச்சக்கரத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
    இந்த நிலையில் காலம் காலமாக பயணப்பட்டு வரும் தமிழ் மொழியின் தோற்றமும், அது குறித்த ஆய்வும் தமிழன்பர்களுக்கு என்றுமே தீராத ஆவலைத்தூண்டும் விசயம். க வில் தொடங்கி இறை, பண்பாடு, கலாச்சாரம் என்ற விதத்தில் பயணித்திருப்பது பதிவின் சுவையை கூட்டுகிறது. ஒரு புதிய கோணத்திலான ஆய்வு கட்டுரையை படித்ததில் உண்மையிலேயே மகிழ்ச்சி.. இந்த கட்டுரையை நீளம் கருதி தொடர் பதிவாக எழுத முடிவு செய்தது நல்ல விசயம் என்றாலும் காத்திருப்பது தண்டனையே.. புதிய பரிமாணத்தில் தங்களது எழுத்து வெளிப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கும் ஒன்று.. வாழ்த்துக்கள் ராஜேஷ்..

  2. மிக அருமையான பதிவு!! 👌👍🙏

    வணக்கம் என்ற சொல்லின் வேர்ச்சொல்லைத் தேட ஆரம்பித்து இங்கு வந்து சேர்ந்தேன். வணக்கம் என்ற சொல்லைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இணையத்தில் கிடைத்த தகவல்கள் மனநிறைவை அளிப்பதாக இல்லை. உதவ முடியுமா?

    நன்றி.

    1. தங்கள் கருத்துக்களுக்கு நன்றி. வணக்கம் என்ற சொல்லுக்கு வளைதல் என்ற பொருளில்தான் அர்த்தம் வருகிறது. நாம் வணங்கும்போது, ஒருவரோடு இணக்கமாக இருக்கிறோம் என்பதை உணர்த்தவே வணங்குகிறோம். இணக்கமாக வளைதல் என்ற பொருளில் வணக்கம் என்ற சொல் உருவாகியிருக்கக் கூடும். ஆழமாக வேர்ச்சொல் கண்டறிய முடியவில்லை. ஏதேனும் கண்டறிந்தால் கட்டாயம் பகிர்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அண்மைக்கால வலைப்பதிவுகள்
தொடர்புடைய வலைப்பதிவுகள்
Index