தமிழர்களின் ஒற்றுமை

ஒற்றைப் புள்ளி

மனிதகுல வரலாற்றில் தமிழர்கள் ஒற்றுமையாக இருந்ததற்கான தடயங்கள் மிகக் குறைவு. இது தமிழர்களின் முகத்தில் ஓங்கி அறைவது போன்ற உணர்வென்றாலும், அதுதான் உண்மை. தமிழர்களை எப்போதும் பிரித்து வைக்க சாதிமதங்கள்  தன் பங்கைப் பெரிதாய் ஆற்றியிருக்கின்றன. இந்த கட்டுரையில் இரண்டு வரலாற்று சம்பந்தவங்களை அலசி அதன் பின்னணியில்,  எது தமிழர்களை இணைத்தது என்று ஆராய விழைகிறேன். இது போன்று தமிழர்கள் ஒன்றிணைந்த பிற தரவுகளை உற்றுநோக்கினாலும், தமிழர்களை இணைத்தது ஒரேயொரு புள்ளிதான் என்பது விளங்கும். அந்த ஒற்றைப் புள்ளியை  மையமிட்டுதான் இந்த கட்டுரை நகரப்போகிறது.

கட்டுரையில் குறிப்பிடப்படும் இரண்டு வரலாற்று சம்பவங்களில் ஒன்று ஒட்டுமொத்தத் தமிழகத்தையே ஒன்றிணைத்த வரலாறு. இன்னொன்று, தமிழகத்தின் ஒரு சிறு பகுதியை சில நாட்கள் மட்டும் ஒற்றுமையாக இருக்கச் செய்த வரலாறு. முதல் சம்பவம் சங்க காலத்தில் நடந்த மௌரியப் படையெடுப்பு, மற்றொன்று முதல் உலகப்போரின்போது ஒரு கப்பல் குண்டு வீசிய சம்பவம். அந்த இரண்டு சம்பவங்களின்போது நடந்தது என்ன, காண்போம்.

மௌரியப் படையெடுப்பு

மகத நாட்டை ஆண்ட சந்திரகுப்த மௌரியருக்கு தமிழகத்தில் கால் பதிக்க ஆசை. ஆனால் அது அவரது ஆட்சிக்காலத்தில் நிராசையாகவேப் போனது. கனவு நிறைவேறாத கோபமோ என்னவோ,  அவர் சமணத்துறவியாகி சரவணபெலகுலாவில் தனது கடைசி காலங்களைக் கழித்தார். தந்தையின் கனவை நிறைவேற்ற, மகன் பிந்துசாரன் பெரும்படையோடு தமிழ்நாட்டின் மீது படையெடுத்தான். பிந்துசாரரின் ஆட்சிக்காலம் கி.மு. 297 முதல் 273 வரையிலான 25 ஆண்டுகள். அவர், தான் ஆட்சிசெய்த காலத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றைய இந்தியாவின் தெற்குப் பகுதிகளை வீழ்த்துவதிலே குறியாக இருந்தார்.

கி.மு. 297ம் ஆண்டு, பிந்துசாரரின் மௌரியப்படை, வடுகர்களின் துணையோடு, தமிழ்நாட்டின் எல்லைகளைத் தாக்கத்துவங்கியது. பாழியைத் தலைநகராகக் கொண்டு,  துளுவ நாட்டை ஆண்ட நன்னனை மௌரியர்கள் வென்றனர். அதியமான் மரபினன் எழினி, பாண்டியர்களின் படைத்தளபதி மோகூர் நாட்டின் பழையன் மாறன், சோழநாட்டுத் படைத்தலைவன் அமுந்தூர் வேளிர் திதியன் ஆகியோர், மௌரியர்களை எதிர்த்து வீரத்துடன் போரிட்டனர். போரின் துவக்கத்தில் மௌரியர்கள் தனது முழுப் படைபலத்தையும் பயன்படுத்தவில்லை. தமிழ்நாட்டு படைத்தளபதிகளும், சிற்றரசர்களும் அளித்த சிறு சிறு வெற்றி தோல்விகள் பிந்துசாரரின் பொறுமையைக் குலைத்தன. அவர் தமிழகத்தை சற்றுக் குறைத்து எடைபோட்டு விட்டாரென்று நினைக்கிறேன்.சிறுசிறுப் படைகளை அனுப்பித் தமிழகத்தைக் கைப்பற்ற முடியாதென்பதை உணர்ந்தார் பிந்துசாரர். ஆகையால், தங்கள் தேர்ப்படை முதல் எல்லாப் படைகளையும் ஒன்றுதிரட்டி தமிழகத்தின் மீது படையெடுக்க முடிவு செய்தார். தங்கள் படைகளின் நுழைவை எளிதாக்குவதற்காக, வரும் வழியில் இருந்த மலைகலையெல்லாம் உடைத்து யுத்தத்துக்காக ஆண்டுக்கணக்கில் ஆயத்தமானார்கள்.

elephant-sikh_1511129i

தமிழகத்துக்கு நெருங்கிக்கொண்டிருக்கும் பெரும் ஆபத்து, சோழ நாட்டை ஆண்ட இளஞ்சேட்சென்னிக்குப் புரிந்தது. பாண்டிய அரசன், சேர அரசன் மற்றும் பல சிற்றரசர்களையும் ஒன்று திரட்டினார். மௌரியர்களிடமிருந்து தமிழகத்தைக் காக்க ஒட்டுமொத்தத் தமிழர்களும் ஒருங்கிணைந்து பெரும்படையாக நின்றார்கள். தமிழர்களின் வீரத்துக்கு முன் மௌரியப்படைகள் தாக்குப்பிடிக்க முடியவில்லை, மௌரியர்கள் தோற்றோடினார்கள். இந்த வரலாற்று சான்றுகள் புறநானூற்றுப் பாடல் 175, அகநானூற்றுப் பாடல் 69, 251, 281 ஆகியவற்றிலும் மேலும் பல சங்கப்பாடல்களிலும் காணக்கிடைக்கின்றன. ஏறத்தாழ 13 ஆண்டுகளாக நடந்த மௌரியப் படையெடுப்பின் காரணமாக மூவேந்தர்களும் ஒற்றுமையாக இருந்தார்கள். அவர்கள் ஒற்றுமையாக இருந்தது அதுவே முதலும் கடைசியும். ஒரு அந்நியப்படையெடுப்புதான் தமிழர்களை முதலில் ஒன்றிணைத்தது என்பது வரலாறு எடுத்துரைக்கும் சான்று. ஆனால் மௌரியப் படையெடுப்பு முடிந்தவுடன் பாண்டியர்கள் சதிசெய்து இளஞ்சேட்சென்னியைக் கொன்ற கேவலம் வரலாறு நமக்குச் சொல்லும் பாடம்.

எம்டன் கப்பலும் கூனிச்சம்பட்டு சாதிச்சண்டையும்

முதல் உலகப்போரின் போது 1914ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி, ஜெர்மனியைச் சேர்ந்த எஸ்.எம்.எஸ்.எம்டன் (SMS Emden) என்ற போர்க்கப்பல் சென்னையைத் தாக்கியது. தாக்குதலின் வீரியத்தைக் குறைக்க நகரம் முழுவதும் இருளில் மூழ்கடிக்கப்பட்டது, ஆனால் கலங்கரை விளக்கத்தின் விளக்குகளை அணைக்க மறந்து போனார்கள். எம்டன் கப்பல் சென்னை நகரில் குண்டுகளை வீசிச்சென்றது. மக்கள் சென்னை நகரை விட்டு வெகுதூரம் தப்பியோடினர், கப்பல் போய்விட்டது என்ற தகவல் அறிந்துதான் மீண்டும் நகருக்குள் வந்தார்கள்.

SMS_Emden_Wikimedia_Commons_Bundesarchiv_DVM_10_Bild-23-61-13

சென்னையில் குண்டுபோட்ட எம்டன், பாண்டிச்சேரி பக்கமும் போனது. பாண்டிச்சேரிக்குள் எம்டன் குண்டுவீசலாம் என்ற அச்சத்தில், மக்கள் அனைவரும், பாண்டிச்சேரியிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் கூனிச்சம்பட்டு என்ற ஊரில் தங்கியிருந்தார்கள். உயிர்பயத்தில், சாதிமதம் எல்லாம் மறந்து ஒற்றுமையாக இரண்டு நாட்கள் சமத்துவமாக வாழ்ந்தார்கள். எம்டன் போய்விட்டது என்ற செய்தி வந்ததும் சமத்துவம் செத்துப்போனது. இப்படி கீழ்சாதிக்காரன் கூட தங்கும் நிலைமை வந்துவிட்டதே என்று ஒரு கிழவி எம்டன் போடாத சாதிக்குண்டைத் தூக்கிப்போட, அங்கு கலவரம் மூண்டது, கலவரத்தில் சிலர் இறந்து போனார்கள், முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

எம்டன் குண்டு போட்ட சென்னையில் கூட இவ்வளவு சேதம் ஏற்படவில்லை. ஒரு வெளிநாட்டுக் கப்பல் கொடுத்த உயிர் பயம் இந்த மக்களிடையே சாதிமத பேதங்களை இரண்டு நாள் நீர்த்துப் போகச்செய்தது என்பது உண்மை. அதன்பிறகு நடந்த சம்பவங்களைப் பார்க்கும்போது, இதற்கு எம்டனே குண்டு போட்டிருக்கலாமென்று தோன்றுகிறதென்று பாரதிதாசன் எழுதினார். அவர் சொன்னது 100 சதவீதம் உண்மை. ஒருவேளை பாண்டிச்சேரியில் எம்டன் குண்டு போட்டிருந்தால் கூட இவ்வளவு இழப்பு வந்திருக்காது. இந்த சம்பவம் ஒன்றைத் தெளிவாக்குகிறது. உயிருக்கு அடுத்ததாக சாதிதான் பெரிது என்று அவர்கள் ஆழ்மனதில் எங்கோ பதிவாகிக் கிடக்கிறது.

அடகு வைத்தப்  பகுத்தறிவு

வரலாறு நெடுகப் பயணித்தாலும் தமிழர்கள் ஒற்றுமையாக வாழ்ந்த சம்பவங்களை விரல்விட்டு எண்ணி விடலாம். “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்ற வாக்கியம், தமிழர்களைத் தவிர்த்து பிற இனங்களுக்கு சொல்லப்பட்டதென்று தமிழர்கள் தவறாகப் புரிந்துகொண்டார்கள் என்றெண்ணுகிறேன். அயல்நாட்டுக்காரனைக் கூட பாகுபாடின்றி ஏற்றுக்கொள்ளும் தமிழனால் சொந்த நாட்டுக்காரனை அவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தமிழர்கள் மானங்கெட்டவர்கள் என்று சொன்னால் கிணற்றுக்குள் போட்டக்  கல்போல சிறுசத்தத்தோடு அடங்கிவிடும். ஆனால், அதே வார்த்தையை ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயரையோ, மதத்தின் பெயரையோ குறிப்ப்பிட்டுச் சொல்லிப்பாருங்கள், தமிழ்நாட்டில் சுனாமியே வரும். அந்த வார்த்தையைச் சொன்னவர் பாதுகாப்பாக வீடுபோய் சேரமுடியாது. இதுதான் இந்த மண்ணின் இன்றைய நிலை. தன் இனமே அழிந்தாலும் சாதியும், மதமும் வாழவேண்டுமென்ற கேவலமான மனநிலை.

தனது இனம் பல்லாயிரம் ஆண்டுகளாக தனது மரபணுவில் சேமித்து வைத்த பகுத்தறிவில் பாதியை அந்நியர்களிடம் அடகு வைத்துத் தமிழன் வாங்கி வந்த கடன்தான் சாதியும், மதமும். பகுத்தறிவைக் களைந்து சாதியையும், மதத்தையும் அறிவில் ஏற்றிய பின்னர் அங்கு ஒற்றுமைக்கு வேலையில்லாமல் போனது. எண்ணும் எழுத்தும் இரண்டு கண்களெனக் கருதிய சமூகத்தில் இன்று சாதியும், மதமுமே இரண்டு கண்களாகிப் போனது. சரி, சாதிமதப் பாகுபாடுகளைக் கழற்றியெறிந்து தமிழர்கள் ஒன்றிணைய வாய்ப்பிருக்கிறதா?

பொது எதிரி

அந்நியர்களல்லாமல் தமிழுக்கோ, தமிழ் கலாச்சாரத்துக்கோ பாதிப்பு என்று வரும்போது, தமிழர்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள், சல்லிக்கட்டுப் போராட்டங்கள் எல்லாம் நடத்தியிருக்கிறோம் என்று சிலர் எதிர்வாதம் செய்யலாம். இந்தப் போராட்டங்கள் அனைத்தையும் நடத்திய பெருமை மாணவர்களைப் போய் சேரும், அதனைத் தமிழர்களின் ஒற்றுமை என்று மார்தட்டிக்கொள்ள முடியாது. காவேரிப் பிரச்னை என்றால் அது தஞ்சாவூர் மக்கள் பிரச்னை. மீத்தேன் குழாய் பதித்தால், அது நெடுவாசல் பிரச்னை. ஸ்டெர்லைட்டால் சுற்றுப்புற மாசு என்றால், அது தூத்துக்குடி பிரச்னை. இதுதான் தமிழர்களின் மனநிலை. இவையெல்லாம் ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கான பிரச்னை என்ற எண்ணம் தமிழர்களிடம் கிடையாது.

தமிழ்நாட்டுக்குள், ஒரு சில பகுதிகளில் நடக்கும் பிரச்னைகள், தமிழகத்தின் பிற பகுதிகளில் வாழும் மக்களுக்கு வெறும் தொலைக்காட்சி செய்திகளாக மட்டும் சென்று சேர்கின்றன. தமிழன் ஒருவனுக்கு நேர்ந்த அவலம் இன்னொரு தமிழனுக்கு வெறும் செய்தியாகப் போய் சேரும் வரையில் தமிழர்கள் ஒன்றிணைய வாய்ப்பேயில்லை. வரலாற்றுக்குள் ஒரு பயணம் மேற்கொண்டால், இதற்கான விடை ஒன்று கிடைக்கிறது. அதுதான் நாம் தேடும் அந்த ஒற்றைப்புள்ளி. தன்னுடன் தொடர்பே இல்லாத பொது எதிரி என்று ஒருவன் முளைக்கும்போது மட்டும், சாதிமத பேதங்களை மறந்து சில நாட்களோ, சில மாதங்களோ ஒன்று கூடுவது தமிழரின் வழக்கம். வரலாற்றுப் பின்னணி நமக்குணர்த்தும் உண்மையும் அதுதான். நாம் ஒன்றிணைய ஒரு பொது எதிரி தேவைப்படுகிறதென்றால் அதை உருவாக்கினால் என்ன தவறு. அந்தப் பொது எதிரி தனிமனிதனாகவோ, ஒரு அரசாங்கமாகவோ இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. ஆனால் நாம் அனைவரும் ஒன்றிணையப் பொது எதிரி என்பது இன்றைய தேவை. அந்தப் பொது எதிரி யார் அல்லது எது என்பதை கண்டறியும் முடிவைத் தமிழர்கள் கரங்களிலேயே ஒப்படைக்க விரும்புகிறேன்.

ஆங்கிலப் புத்தாண்டின் கொண்டாட்டத்தோடு, தமிழ்நாட்டுக்கு வெளியே உங்கள் பொது எதிரியைத் தேடுங்கள். புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வாழ்க தமிழ்.

பின்னிணைப்புகள்

  1. http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/30317-remembering-a-german-ship-that-rocked-madras.html
  2. https://www.thehindu.com/news/cities/chennai/discovered-pictures-of-madras-after-emden-struck/article3804481.ece
  3. http://www.tamilsurangam.in/literatures/ettuthogai/agananooru/index.html

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.