தமிழர்கள் ஏன் அடிமையானார்கள்? – பாகம் 1

வரலாறு

தனது வரலாற்றை மறந்த இனம் வளமுடன் வாழாது. தாய்மொழியைத் துறந்த இனம் அடிமைப்பட்டுப் போகும். உலகில் அடிமைப்பட்டுக் கிடக்கும் எந்த ஒரு இனத்தின் பின்னனியை ஆராய்ந்து பார்த்தாலும், நமக்கு இரண்டு தகவல்கள் நிச்சயம் கிடைக்கும். ஒன்று, அந்த இனத்தின் தாய்மொழி அழிக்கப்பட்டிருக்கும், இன்னொன்று அவர்களின் வரலாறு மறைக்கப்பட்டிருக்கும். அதன்பின்னர் அந்த இனம் மெல்லமெல்ல அடிமைத்தளையில் சிக்குண்டு சீரழிந்து போகும். இதுபோன்ற சீரழிவுகளைச் சந்தித்துக்  கொண்டிருக்கும் இனங்களில் ஒன்று தமிழினம். உலகின் பிற இனங்கள், விலங்குகளை வேட்டையாட கையில் கற்களைப் பிடித்தபோது, கையில் எழுத்தாணி பிடித்த தமிழினம், இன்று தாய்மொழிப் பற்றின்றி, வரலாற்றின் மீது அக்கறையின்றி, அடிமை சமூகம் போல மாறிப்போனது ஏன்? மூன்றுவேளை சோற்றுக்காக, முன்னோர்களின் பெருமைகளை அடகுவைத்தது ஏன்? குறுகிப்போன மலை உச்சியின் அடிவாரம் அகன்றிருப்பது போன்று, சுருங்கிப்போன தமிழினத்துக்கும் பரந்துபட்ட வரலாறு உண்டு. அந்த அகன்ற வரலாற்றின் பக்கங்களில் எங்கோ சில இடுக்குகளில் விதைக்கப்பட்ட அடிமைத்தனத்தின் விதைகளைத் தேடும் முயற்சிதான் இந்தக் கட்டுரை.

முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது வரலாற்றுக் கட்டுரையன்று. வரலாற்றின் பாதையில், தமிழர்களின் வீழ்ச்சிக்கான காரணங்களைத் தேடும் முயற்சி, ஆகையால் எந்தவொரு வரலாற்று நிகழ்வையும் ஆழமாக அலசுவது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல. மாறாக, ஒவ்வொரு வரலாற்று நிகழ்வும், தமிழர்களின் வாழ்வை எவ்வாறு பாதித்தது என்ற ஆராய்ச்சி நோக்கில் மட்டும் அணுகப்பட்டிருக்கிறது. கட்டுரையின் நீளம் கருதி, சில பாகங்களாகப் பிரித்து எழுதப்பட்டிருக்கிறது.

அடிமைத்தனத்தின் ஊற்றுக்கண்

வலிய விலங்கே காட்டை ஆளும். வலிய விலங்கின் முன் மற்ற விலங்குகளின் வாழ்க்கை கேள்விக்குறிதான். அது வாழ்வா, சாவா என்ற போராட்டம். ஆனால் அந்த விலங்குகளுக்கிடையே கூட அடிமைத்தனம் இல்லை. சார்ந்து வாழவும், சேர்ந்து வாழவும் தகுதியுடைய மனித இனம்தான் அடிமைகளை உருவாக்கியது. மனிதனின் முதல் அடிமை இன்னொரு மனிதன் என்று சொல்லமுடியாது. பலம் மிக்க காடுகளில், பலவீனமான உடலுடன், பலமான மூளையுடன் திரிந்த ஒரே விலங்கு  மனிதன்தான். மனிதனின் மூளைத்திறனைப் புரிந்து கொண்டதாலோ என்னவோ, நாய்கள் தானாகவே மனிதனை அண்டி வாழத்  துவங்கின. காலப்போக்கில், மனிதன் இந்த நாய்களை நமது வேலைகளுக்குப் பயன்படுத்தினால் என்ன என்று சிந்தித்தான். அன்று முதல் நாய்கள் மனிதனின் அடிமைகள் போல வேலை செய்யத் துவங்கின, அதன் பின், ஆடு, மாடு, கழுதை, குதிரை, யானை என்று பட்டியல் நீண்டது. அந்த விலங்குகள் எல்லாம் காட்டிலே வாழ்ந்திருந்தால் கூட தனது இனத்தில் சில உயிர்களை மட்டும்தான் இழந்திருக்கும். ஆனால் மனிதனிடம் அடைக்கலம் புகுந்தால் தன்னுயிரைக் காத்துக் கொள்ளலாம் என்று நம்பி, மனிதர்களுடன் ஒட்டிக்கொண்ட அந்த விலங்குகள் நாள்தோறும் மனிதனின் உணவுக்காக இலட்சக்கணக்கில் கொல்லப்படுகின்றன. மனிதனின் மூளை பலமடைந்து,  பகுத்தறிவு என்றைக்கு முளைத்ததோ, அன்றே அடிமைத்தனத்தின் சல்லிவேர்களும் முளைக்கத் துவங்கிவிட்டதென்று அர்த்தம். அதுவே அடிமைத்தனத்தின் ஊற்றுக்கண்.

நாம் உலக அதிசயங்கள் என்று எண்ணி வியக்கும் எகிப்து பிரமிடுகள், சீனப்பெருஞ்சுவர் போன்றவை எல்லாம் கட்டப்பட்டது அடிமைகளால்தான். உணவும், உறக்கமும் கூட மறுக்கப்பட்டு, ரத்தம் சிந்த அடிவாங்கி, மரண வேதனையில் உருவானவைதான் உலக அதிசயங்கள் பல. உலக அதிசயங்கள் மட்டுமல்ல, பெரும்பாலான கோயில்கள் கூட கட்டப்பட்டது அடிமைகளின் உழைப்பால்தான்.  உலகில் அடிமைத்தனம் இல்லாத நாடுகளே இல்லை என்று சொல்லுமளவுக்கு எங்கும் காற்றுப் போல பரவிக்கிடக்கிறது அடிமைத்தனம். இன்றும், அடிமை என்று அப்பட்டமாக சொல்லாமல், அடிமை வேலை செய்து கொண்டிருப்பவர்கள் பல கோடி பேர். அடிமை வாழ்க்கை ஒரு சமூகத்தை எந்த அளவுக்கு உருக்குலைக்கும் என்பதற்கு தமிழர்களே சாட்சி. தமிழர்கள் கொத்தடிமைகளாக, கைக்கூலிகளாக பல்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்றிருக்கிறார்கள். சங்க காலத்தில், கடல் வாணிகம் மூலம் உலகையே வலம் வந்த தமிழர்கள், சங்க காலத்துக்குப் பின் ஏன் அடிமைச்சமூகம் போல மாறிப்போனார்கள்? அதற்கான காரணங்களைப் பட்டியலிடுவதன் மூலம் நாம் ஏன் வீழ்ந்தோம் என்ற தெளிவு கிடைக்கும், அந்தத் தெளிவு பிறந்தால் நாம் மீண்டும் மறு எழுச்சி கொண்டு புதிய வரலாறு படைக்கலாம். முதலில், தமிழர்கள் புகழின் உச்சியில் இருந்த சங்க காலத்தில், நம்மிடையே அடிமைமுறை இருந்ததா என்று நிச்சயம் ஆராய வேண்டும். அதற்கான சான்றுகளை சங்க இலக்கிய நூல்களில்தான் தேடவேண்டும்.

சங்க இலக்கியங்களில் அடிமை முறை

சங்க காலத்தில் நம் முன்னோர்கள் நிலங்களை 5 வகையாகப் பிரித்தார்கள். இவற்றில், குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை  முதலிய நிலங்களில் வாழ்ந்த மக்கள், உணவுக்காக மிகவும் சிரமப்பட்டு உழைக்க வேண்டியிருந்தது. அவர்களுக்கு ஓய்வு என்பதே இல்லாமல் இருந்தது. ஆனால் மருதநிலம் செயற்கையாக உருவாக்கப்பட்ட நிலம். காட்டை அழித்து, தனக்குப் பிடித்த உணவுப்பொருட்களை மட்டும் மிகுதியாகப் பயிரிட்டு உண்டு வந்த மருத நிலத்தில்தான் ஓய்வு என்பதே உணரப்பட்டது. ஓய்வு சோம்பேறித்தனத்தை வளர்த்தது. சோம்பேறித்தனம்தான் அறிவியல் கண்டுபிடிப்புகளின் ஊற்றுக்கண். சோம்பேறித்தனம், கண்டுபிடிப்புகளுக்கு மட்டுமல்ல சில வக்கிரங்களுக்கும் வழிவகுத்தது. நிலத்தைச் சொந்தம் கொண்டாடியவன் முதலாளி ஆனான், அந்த நிலத்தில் வேலை செய்ய ஆள் தேடினான். அந்த முதலாளியை அண்டிப் பிழைக்க வந்த அந்த ஆள்தான் முதல் அடிமை என்று சொல்லலாம். மருதநிலம்தான் அடிமைத்தனத்தின் பிறப்பிடமாக இருக்க வேண்டும். ஓர் உண்மையை அறிந்துகொள்ளுங்கள்! தமிழில் ஆள் என்ற சொல்லே பெரும்பாலும் அடிமை என்ற பொருளில்தான் கையாளப்பட்டிருக்கிறது. நம்மிடம் அதிகமாக வேலைவாங்கும் ஒரு நபரைப் பார்த்து கோபத்துடன் “நான் என்ன நீ வைத்த ஆளா” என்று இன்றும் நாம் சொல்கிறோம். ஆள் என்பது அடிமைகளைக் குறித்த வார்த்தை என்பதற்கான சான்றுதான் அது. கி.பி.8ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட திவாகர நிகண்டு என்னும் நூல், அடிமை என்ற வார்த்தைக்கு பயன்படுத்தப்பட்ட பிற வார்த்தைகளைச் சொல்கிறது.

“ஆளும் தொழும்பும் அடிமையாகும்”

மருதநிலத்தில் முதலாளிகள் உருவானார்கள் என்று வைத்துக்கொண்டாலும், வேலை செய்ய வந்தவர்களை நாம் ஒட்டுமொத்தமாக அடிமைகள் என்று சொல்லிவிட முடியாது. மருதநிலம் அடிமைத்தனம் தோன்றிய இடமென்று சொல்லலாமே ஒழிய, அவர்கள் அனைவரும் அடிமைகளாகவே வாழ்ந்தார்கள் என்று சொல்வதற்கில்லை. மருதநிலத்தில், முதலாளியோ, தொழிலாளியோ, அவர்கள் வாழ்க்கை செழிப்பாகவே இருந்ததென்று சொல்லலாம். நமக்கு சங்க இலக்கியத்தில் சான்றுகள் வேண்டுமென்றால், தொல்காப்பியத்திலும், திருக்குறளிலும் தேடிப்பார்க்கலாம். தொல்காப்பியம், பொருளதிகாரத்தில், அகத்திணையியல் 25ம் பாடல், அடிமை என்ற பொருள்படும் வார்த்தையைப் பதிவு செய்கிறது. தொல்காப்பியத்தைத் தமிழின் பழமையான நூல் என்று கருத்தில் கொண்டால், அடிமைகள் குறித்துப் பதிவு செய்த முதல் நூல் தொல்காப்பியம் என்று சொல்லலாம்.


“அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினுங்
கடிவரை யிலபுறத் தென்மனார் புலவர்.” 

(தொல். பொருள். அகத்திணையியல் 25)

தொல்காப்பியத்தில் யார் யாரெல்லாம் அடிமைகளாக நடத்தப்பட்டனர் என்ற தெளிவு இல்லை, ஆனால் “அடியோர் என்று குறிப்பிடுவதால், அது ஆண், பெண்  இருவரையும் குறிக்கும் பொதுவான சொல் என்பது தெளிவாகிறது. அடியோர்களும், பிறர்க்கு ஏவல் தொழில் செய்வோரும் அகத்திணைக்கு உரியவர்களாக கருதப்படமாட்டார்கள் என்கிறது தொல்காப்பியம். இங்கு அடியோர் என்ற சொல் அடிமை என்ற பொருளின் கையாளப்பட்டிருக்கிறதா என்று உறுதியாகக் கூறமுடியவில்லை. ஆனால் சங்ககாலத்துக்குப் பின், அடியோர் அல்லது அடியார் என்ற சொல்லுக்கு அடிமை என்றுதான் பொருள்.

தொல்காப்பியத்திற்குக் காலத்தால் சற்றுப் பின்தங்கிய சங்க இலக்கியமான திருக்குறளில் அடிமை என்ற வார்த்தை நேரடியாகவேப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. குறள்  608ல் அடிமை என்ற சொல் வருகிறது. தொல்காப்பியத்தில் யார் அடிமைகளாக வாழ்ந்தனர் என்ற முடிவுக்கு வர முடியவில்லை. ஆனால் திருக்குறளில் நமக்கு அந்தத் தெளிவு கிடைக்கிறது. திருக்குறளில் ஒன்னார்க்கு அடிமை என்று குறிப்பிடப்படுகிறது. ஒன்னார் என்றால் பகைவர் என்று பொருள். பகைவருக்கு அடிமை எனும்போது, போர்க்களத்தில் கைது செய்யப்பட்ட எதிரிநாட்டு வீரர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டனர் என்ற தெளிவு கிடைக்கிறது.

“மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்.”
(குறள் எண்:608)

போரில் ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் கைதிகளாகக் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள். சங்க இலக்கியங்கள், போரில் கைதிகளாக அழைத்து வரப்பட்டப் பெண்களை, கொண்டி மகளிர் என்ற சொல்லால் குறிக்கிறது. கொண்டி மகளிர் என்ற சொல்லை, மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை, மணிமேகலை போன்ற பல சங்க இலக்கிய நூல்களில் காண முடிகிறது.

வானவ மகளிர் மான, கண்டோர்

நெஞ்சு நடுக்குறூஉக் கொண்டி மகளிர் (மதுரைக் காஞ்சி)

கொண்டி மகளிர், உண்துறை மூழ்கி,
அந்தி மாட்டிய நந்தா விளக்கின் (பட்டினப்பாலை)

பண்டேர் மொழியிற் பயன்பல வாங்கி
வண்டிற்றுறக்கும் கொண்டி மகளிர் (மணிமேகலை)

 

சங்க இலக்கியங்களைப் புரட்டிப் பார்த்தால், போர்க்கைதிகள் அடிமைகளாகக் கொண்டு வரப்பட்டதை அறிய முடிகிறது. போரில் கைதான ஆண்கள், குளம் வெட்டுதல், கோயில் கட்டுதல் போன்ற கடினமான வேலைகள் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டார்கள். போர்க்கைதிகளாக வந்த பெண்கள், கோயில்களில் விளக்கேற்றுதல், அரண்மனைப் பணியாட்கள் போன்ற வேலைகளுக்குப் பயன்படுத்தப்பட்டனர். தமிழகத்தில், சங்ககாலத்தில், வேறுவிதமான அடிமைமுறை இருந்ததாக வரலாற்று சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லை. சமகாலத்தில், பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தில் போர்க்கைதிகள் கூட நல்வாழக்கை வாழ்ந்தனர் என்று சொல்லலாம். பிற நாடுகளில் நிலவிய அடிமை முறைகளைக் கொஞ்சம் உற்றுநோக்கினால், தமிழகத்தின் சூழலைப் புரிந்துகொள்ள முடியும்.

ஹமுராபியும் ஆரியர்களும்

பாபிலோனை ஆண்ட ஹமுராபி (கி.மு 1810 – 1750) , தனது நாட்டு மக்களுக்கு நிறைய விதிகளை எழுதி வைத்தார். கி.மு.1754ம் ஆண்டு எழுதப்பட்ட, கிட்டத்தட்ட இரண்டரை மீட்டர் உயரமுள்ள அந்த கல்வெட்டில், 200க்கும் மேல் விதிகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. அதில் அடிமைகளைப் பற்றி நிறைய விதிகள் குறிப்பிடுகின்றன. அடிமைகள் பற்றி ஏதோ ஒருசில விதிகள் இருக்குமென்று உற்று நோக்கினால், ஏறத்தாழ 23 விதிகள் அடிமைகளைப் பற்றி பேசுகிறது. (விதி எண்கள் 15,  17, 18, 19, 20, 116, 118, 119, 175, 176, 205, 217, 219, 223, 226, 227, 231, 252, 278, 279, 280, 281, 282 ஆகியவற்றில் அடிமைகளைப் பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன) அவை ஒவ்வொன்றையும் நாம் பார்க்கப்போவதில்லை. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், விதி 15ன் படி, அடிமைகள் தப்பி ஓட முயற்சித்தால், அவர்களைக் கொன்று விட வேண்டும். விதி 282ன் படி, அடிமைகள் தங்கள் முதலாளியைப் பார்த்து, நீ என் முதலாளி இல்லை என்று சொன்னால், அடிமையின் காதுகளை வெட்டிவிட வேண்டும். இப்படி கொடூரமாக பல விதிகள், அடிமைகளைப் பற்றி விரிவாகக் கூறுகின்றன. கிட்டத்தட்ட ஹமுராபியின் காலத்தில்தான் ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தார்கள். ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தபின்தான் தமிழர்களின் வாழ்க்கை சீரழிந்தது என்பது ஒருபுறம் இருந்தாலும், அடிமைத்தனத்தை ஆரியர்கள் நெய் ஊற்றி வளர்த்தார்கள் என்பதும் மறுக்கமுடியாத உண்மை.

ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்ததும், அவர்களை எதிர்த்து நின்றது தமிழர்கள். ஏனென்றால், அன்று ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் பரவி வாழ்ந்தவர்கள் அனைவருமே தமிழர்கள்தான். ஆரியர்கள், ரிக் வேதத்தில், தாஸ், தஸ்யூ என்ற வார்த்தைகளால் தமிழர்களைத்தான் குறிப்பிடுகிறார்கள். ஆரியர்களின் மொழியில், தாஸ், தஸ்யூ என்றால் அடிமை என்று அர்த்தம். ரிக் வேதம் 2ம்  மண்டலம், 10ம் பாசுரம், பாடல்கள் 6, 7, 8, அடிமைகளைப் பற்றி கூறுகிறது. ரிக் வேதம் 5ம் மண்டலம், 34ம் பாசுரம், பாடல் 6, இன்னும் பல பாடல்கள் தாசர்கள் என்ற அடிமைகளைப் பற்றி குறிப்பிடுகிறது. அர்த்தசாஸ்திரம், 3ம் பாகம், 13ம் பகுதி அடிமைகளைப் பற்றி விரிவாக விளக்குகிறது. மனுஸ்மிருதி 8ம் பாகம், 415வது பாடல், 7 விதமான அடிமைகள் பற்றி குறிப்பிடுகிறது. எல்லாவற்றுக்கும் உச்சமாக நாரதஸ்மிருதி 15 விதமான அடிமைகளைப் பற்றி குறிப்பிடுகிறது. நாரதஸ்மிருதி 2ம் பாகம், 5ம் பகுதி அடிமைகளைப் பற்றி பக்கம் பக்கமாக விவரிக்கிறது.

மேலே குறிப்பிட்டது போல, ரிக் வேதம், அர்த்தசாஸ்திரம், மனுஸ்மிருதி, நாரதஸ்மிருதி, என்று பல நூல்களில் அடிமைகள் குறித்து எண்ணற்ற குறிப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. அவை எல்லாவற்றையும் தொகுத்துப் பார்த்தால் கிட்டத்தட்ட 13 வகையான அடிமை முறைகளை நம்மால் காண முடிகிறது.

  1. அடிமை வம்சத்தில் பிறந்தவர்
  2. சந்தையில் அடிமையாக வாங்கப்பட்டவர்
  3. அடிமைப்பெண்ணுக்கு பிறந்த குழந்தை
  4. போரில் பிணைக்கைதியாக அகப்பட்டவர்
  5. கொடுத்த வாக்குகளைக் காப்பாற்ற முடியாமல் போனவர்
  6. வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாதவர்
  7. குறிப்பிட்ட காலத்துக்கு அடிமையென்று தண்டனை அளிக்கப்பட்டவர்
  8. தன்னைத்தானே அடிமை என்று விற்றவர்
  9. துறவு வாழ்க்கையில் தவறிழைத்தவர்
  10. அடிமையாக இன்னொருவருக்கு பரிசாக வழங்கப்பட்டவர்
  11. அரசாங்க தேவைகளுக்கு அடிமையாக்கப்பட்டவர்
  12. அடிமைப்பெண்ணை காதலித்து மணம் முடித்தவர்
  13. துறவிகள் போன்றோர்க்கு உதவும் பொருட்டு அடிமையானவர்

13 வகை அடிமைகளில் தான் அடிமையாகப் போகிறோம் என்று தெரிந்ததுமே விரும்பி ஏற்றுக்கொண்டவர்கள் கடைசி இரண்டு பிரிவினர்தான். மற்ற அனைவருமே கட்டாயத்தின் பேரில்தான் அடிமை வாழ்க்கை நடத்தினார்கள். இது ஆரியர்களிடையே நிலவிய அடிமைமுறை. தமிழர்களிடையே புழக்கத்தில் இல்லாத இந்த அடிமைமுறைகள் அனைத்தும் பின்னாட்களில் ஆரியர்கள் வழியே தமிழர்களிடமும் பரவியது. ரோம், கிரேக்கம் போன்றன நாடுகளில் அடிமைகள் சந்தைகளில் ஆடுமாடுகளைப் போல விற்கப்பட்டார்கள். இவற்றோடு ஒப்பிடும்போது தமிழர்கள் வாழ்வு எவ்வளவு மேம்பட்டிருந்தது என்பதனை உணரலாம்.

தமிழகத்தில், சங்ககாலத்தில், பிற நாடுகளைப் போலவே மன்னர்களுக்கிடையே போர்கள் நடந்திருக்கலாம், ஆனால் பிற நாடுகள் அளவுக்கு கொடூரமான அடிமைத்தனம் இல்லை என்பது ஆணித்தரமான உண்மை. சங்க காலத்தில் போர்க்கைதிகள் கூட பிற நாடுகளைப் போல கொடுமைப்படுத்தப்படவில்லை. ஆனால் ஒட்டுமொத்தத் தமிழினமே அடிமைகளாக இருக்க வேண்டியவர்களென்று அன்றும் இன்றும் ஆசைப்படுபவர்கள் ஆரியர்கள். அதைத்தான் ரிக் வேதத்தில்  பாடி வைத்தார்கள். ரிக் வேதத்தில் ஒரு கருமமும் கிடையாது, அது தமிழர்கள் நாசமாய்ப் போக உதவுங்கள் கடவுள்களே என்று கெஞ்சுகிற பாடல்களின் தொகுப்பு, அவ்வளவுதான். அன்று ஆரியர்களின் மொழிக்கு எழுத்துரு கிடையாது. அவர்கள் வேதங்கள் அனைத்தும் பாடல்களாக மட்டுமே பாடப்பட்டன. தமிழில் இருந்துதான் அவர்கள் தங்கள் எழுத்துக்களை உருவாக்கிக் கொண்டார்கள். ஆரியர்களால், தமிழர்களை அடிமைகளாக ஆக்க முடியவில்லை, ஆனால் அடிமைகள் என்று பாடல்களில் பாடி மகிழ்ச்சியடைந்து கொண்டார்கள். ஆக, நம்மை அடிமையாக்கத் துடித்த முதல் அந்நிய இனம், ஆரிய இனம். இன்றுவரை அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆரியர்களின் சூழ்ச்சி

ஆரியர்கள் நுழையும்போதே சிந்துசமவெளி நாகரிகம் அழியும் தருவாயில் இருந்தது. சிந்துசமவெளியில் வாழ்ந்த தமிழர்கள் நாகரிகத்தின் உச்சியில் வாழ்ந்தவர்கள். அடுக்குமாடி வீடுகளும், மாடமாளிகைகளும் நிரம்பிய நகரங்களில் வாழ்ந்தவர்கள். அவர்களுக்குக் கல்வியறிவு இருந்தது, அதனால் சிந்திக்கும் ஆற்றல் இருந்தது, உழைக்கும் எண்ணம் இருந்தது. ஆனால், ஆரியர்கள் என்பது, ஆடுமாடுகள் மேய்க்கும் கூட்டம். அந்த ஆட்டுமந்தைகளுக்கு படிக்கத்தெரியாது, சிந்திக்கத் தெரியாது, உழைக்கும் எண்ணம் அறவே கிடையாது.  ஆனால் வேள்விகள் (யாகங்கள்) மட்டும் செய்யத்தெரியும், வேள்வித்தீயில் ஆடுமாடுகளை வெட்டிப்போட்டுத் தின்னத்தெரியும். மேலும் மாட்டுக்கறியைத் தின்றுவிட்டு சுராபானம் குடிக்கத்தெரியும். சுராபானம் என்றால் சாராயம், வேறொன்றுமில்லை. சுராபானம் அருந்தாத தமிழர்களை அசுரர்கள் என்று அழைத்தார்கள். ரிக் வேதத்தில், ஆடு மாடுகளை வெட்டி, வேள்வியில் போட்டு எப்படித் தின்ன வேண்டும், சுராபானம் எவ்வாறு தயாரிக்க வேண்டுமென்று பல பாடல்கள் விளக்குகின்றன.

ஆரியர்கள் தமிழர்களை இரண்டு விதமாகப் பிரித்துப் பார்த்தார்கள். வேள்விகளை ஆதரிப்பவர்கள், வேள்விகளை எதிர்ப்பவர்கள். வேள்விகளை ஆதரிக்கும் தமிழ் மன்னர்களிடம், ஆரியர்கள் அண்டிப் பிழைப்பு நடத்தினார்கள். வேள்விகள் மூலம் பல அற்புதங்களை நிகழ்த்த முடியுமென்று தமிழ் மன்னர்களை ஏமாற்றி நம்ப வைத்தார்கள். அந்த தமிழ் மன்னர்களை வைத்தே, வேள்விகளை நம்பாத பிற தமிழ் மன்னர்களையும், தமிழ் மக்களையும் விரட்டினார்கள். இதற்கான சான்றுகளை ராமாயணம், மகாபாரதம் முழுவதும் காணமுடியும். கூர்ந்து நோக்கினால், யாரெல்லாம் வேள்விகளைத் தடை செய்தார்களோ அவர்களை அரக்கர்கள் என்று சித்தரித்து, தமிழ் மன்னர்களை வைத்தே அவர்களைக் கொலை செய்தார்கள். ராமன், கண்ணன் (கிருஷ்ணன்) போன்ற தமிழ் மன்னர்களை வைத்தே நரகாசுரன், இரண்யாட்சன், சூரபத்மன் போன்ற மாபெரும் தமிழ் மன்னர்களை அழித்தார்கள். பெண்ணென்று கூட பார்க்காமல், தாடகையை ராமனின் துணையோடு எப்படிக் கொன்றார்கள் என்று ராமாயணம் விளக்குகிறது. ராமன், கண்ணன் போன்ற மன்னர்கள் ஒருவேளை கற்பனை கதாபாத்திரங்களாக இருக்கலாம், ஆனால் அவர்களைப் போன்று வேள்விகளை ஆதரித்து, ஆரிய அடிமைகளாக மாறிப்போன தமிழ் மன்னர்கள் பலர் வாழ்ந்தார்கள் என்பது உண்மை.

ஆரியர்கள் கொன்றொழித்த தமிழர்கள் அனைவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை, அவர்கள் அனைவருமே வேள்விகளை எதிர்த்தவர்கள். ஆரியர்களின் வேள்வி என்னும் சூழ்ச்சியை நம்பி, ஏமாந்து போன தமிழர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தங்கள் இன்னுயிரை ஈந்தவர்கள்தான், நரகாசுரன், இரண்யாட்சன், சூரபத்மன் போன்ற பல தமிழர்கள். ஆரியர்கள் சொன்ன பொய்களை நம்பி, நாம் இன்றும் அவர்களை அரக்கர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். இன்றும் வேள்விக்கு மயங்கி ஆரியர்களை தூக்கி வைத்துக் கொண்டாடும் அனைத்துத் தமிழர்களும் வெட்கித் தலைகுனிய வேண்டும். ஏனென்றால், நமது நிலத்தை, முன்னோர்களை, பெருமைகளை எல்லாம் அழித்தது அந்த வேள்வித்தீதான்.  ஆரியர்கள், தமிழ் மன்னர்களை வைத்தே தமிழர்களை அழித்தது தொடர்கதையானது. ஆரியர்களுக்கும், அவர்களின் வேள்விகளுக்கும் அடிமையாகிப் போன தமிழ் மன்னர்கள் மற்றும் தமிழ்மக்களைத் தவிர்த்து, பிற தமிழர்கள் தென்னிந்தியாவை நோக்கிப் புலம்பெயர்ந்தார்கள்.

களப்பிரர்களும், பல்லவர்களும்

ஆரியர்களின் சூழ்ச்சியால் நாம் நிலத்தை இழந்தோம். ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் வாழ்ந்த தமிழினம், தென்னிந்தியா அளவுக்கு சுருங்கிப் போனது. வடமொழிக் கலப்பால், தமிழில் இருந்து பல கிளைமொழிகள் பிறந்தன. வடமொழி என்றதும் சமஸ்கிருதம் என்று எண்ணிவிட வேண்டாம். சமஸ்கிருதம் ஒரு மொழியே கிடையாது. அது குறித்து வேறொரு கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். புதுமொழிகளின் பிறப்பு, இனத்தைச் சுருக்கியது. தமிழில் இருந்து பிரிந்து போன பிற மொழிகளைப் பேசுகிற இனங்கள், தமிழர்களுக்கு அந்நியர்களாகிப் போனார்கள். தமிழர்கள், அந்நியர்களுடன் சண்டையிட்டதை விட தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டது அதிகம். இது அந்நியர்களின் நுழைவதற்கேற்ற சூழலை உருவாக்கிக் கொடுத்தது. தமிழகத்திற்கு அந்நியர்களின் படையெடுப்பு என்பது கரிகாற்சோழனின் தந்தை இளஞ்செட்சென்னியின் காலத்திலிருந்தே புதிதல்ல, ஆண்டுக்கணக்கில் சொல்ல வேண்டுமானால், ஏறத்தாழ 2300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழக்கமான ஒன்றுதான். இளஞ்செட்சென்னியின்  காலத்தில், மௌரியர்கள் தமிழகத்தை வீழ்த்த எண்ணினார்கள், ஆனால் அவர்களின் எண்ணம் ஈடேறவில்லை. வடஇந்திய வரலாற்றைப் படித்தால், மௌரியர்களின் ஆட்சி தெற்கே கர்நாடகம் வரை பரவியிருந்தது என்று மட்டும் சொல்வார்கள். அவர்கள் ஏன் தமிழ்நாட்டுக்குள் நுழையவில்லை என்ற வரலாற்றுச் செய்தியை அவர்கள் பதிவுசெய்ய மாட்டார்கள். அப்போது தமிழர்களை எவராலும் நெருங்க முடியவில்லை என்பதுதான் உண்மை. அசோகரின் தந்தை பிந்துசாரர், தமிழ் மன்னர்களிடம் தோற்றோடிய பிறகு, அசோகர் தமிழர்களைப்  பகைத்துக்கொள்ள விரும்பவில்லை. கடைச்சங்கம் கி.பி. 3ம் நூற்றாண்டில் முடிந்தது. கடைச்சங்க காலத்தில், தமிழகத்தின் நிலவிய குழப்பமான அரசியல் நிலவரம், தமிழர்கள் அல்லாதவர்கள் தமிழகத்துக்குள் கால்பதிக்க வித்திட்டது.

கி.பி.மூன்றாம் நூற்றாண்டில், பல்லவர்கள், களப்பிரர்கள் ஆகிய இரு அந்நிய இனத்தவர்கள் தமிழகத்தில் நுழைந்து ஆட்சி செய்யத் துவங்கினார்கள். குறிப்பாக சாதவாகனர்களின் வீழ்ச்சிக்குப் பின்புதான் பல்லவர்களும், களப்பிரர்களும் தமிழகத்துக்குள் நுழைகிறார்கள். பல்லவர்கள், சாதவாகனர்களிடம் படைத்தலைவர்களாக இருந்தார்கள் என்றும், சாதவாகனர்கள் நாட்டின் எல்லையில் வசித்த பழங்குடியினர்தான் களப்பிரர்கள் என்றும் சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.  சரியாக சாதவாகனர்களின் வீழ்ச்சிக்குப் பிறகுதான் இவர்கள் இருவரும், தமிழகத்தின் மீது படையெடுத்து வந்திருக்கிறார்கள். ஆகையால் பல்லவர்கள், களப்பிரர்கள் இருவருமே சாதவாகனப் பேரரசோடு தொடர்புடையவர்கள் என்று கருத வாய்ப்புள்ளது. இரும்புக்கோட்டையாக இருந்த தமிழகத்துக்குள் அந்நியர்கள் நுழைந்ததற்கு முதன்மையான காரணம், தமிழகத்தில் நிலவிய குழப்பமான அரசியல் சூழலும், ஒற்றுமையின்மையும்தான்.

தமிழர்கள் எப்போதுமே தங்களுக்குள்ளாகவே சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். தமிழர்களுக்கென்று ஒரு பொது எதிரி இல்லாமல் இருந்தது. இந்த குழப்பச் சூழலைப் பயன்படுத்தி கி.பி.250ம் ஆண்டுவாக்கில், பல்லவர்களும், களப்பிரர்களும் தமிழகத்துக்குள் நுழைந்து ஆட்சிபுரியத் துவங்கினர். களப்பிரர்களில், அச்சுதக் களப்பாளன் என்ற மன்னன், மூவேந்தர்களையும் வென்று ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஆட்சி செய்திருக்கிறான். மூவேந்தர்களையும் வென்றதன் அடையாளமாக, தனது கொடியில் மீன், வில், புலி என்ற மூவேந்தர்களின் மூன்று சின்னங்களையும் பொறித்திருக்கிறான். கி.பி.575ம் ஆண்டில் கடுங்கோன் பாண்டியன் களப்பிரர்களை வெற்றிகொண்டான், அத்தோடு களப்பிரர் ஆட்சி முடிவுக்கு வந்தது. களப்பிரர் ஆட்சி முடிவுக்கு வந்த செய்தியை வேள்விக்குடி செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது. வேள்விக்குடி செப்பேட்டில் கீழ்க்கண்ட தகவல் காணப்படுகிறது. வேள்விக்குடி செப்பேடுகள் கிடைத்த பின்புதான் களப்பிரர் குறித்த ஆராய்ச்சித் துவங்கியது.

“களப்பிரன் என்னும் கலியரசன் கைக்கொண்டதனை
இறக்கியபின் படுகடன் முளைத்த பருதிபோல்
பாண்டியாதிராசன் வெளிப்பட்டு
விடுகதிர் அவிரொளி விலக வீற்றிருந்து
வேலை சூழ்ந்த வியலிடத்துக்
கோவும் குறும்பும் பாவுடன் முருக்கிச்
செங்கோல் ஓச்சி வெண்குடை நீழல்
தங்கொளி நிறைந்த தரணிமங்கையைப்
பிறர்பால் உரிமை திறவிதின்நீக்கித்
தன்பால் உரிமை நன்கனம் அமைத்த
மானம்போர்த்த தானை வேந்தன்
ஒடுங்கா மன்னர் ஒளிநகரழித்த
கடுங்கோன் என்னும் கதிர்வேல் தென்னன்”

வீழ்ச்சிக்குப் பின், களப்பிரர்கள் ஆங்காங்கே குறுநில மன்னர்களாகவும், படைத்தலைவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். களப்பிரர்கள் ஆட்சி அந்நியர்கள் ஆட்சி என்றாலும், அவர்கள் தமிழ் மொழிக்கு எதிரானவர்களாக இல்லை. களப்பிரர் ஆட்சியில்தான் பதினெண்கீழ்கணக்கில் பல நூல்கள் எழுதப்பட்டன. மேலும் களப்பிரர்கள், பாண்டியர்கள் பிராமணர்களுக்கு பிரம்மதேயமாகக் கொடுத்த நிலங்கள் அனைத்தையும் பிடுங்கிக்கொண்டதால், களப்பிரர் ஆட்சி தமிழத்தின் இருண்டகாலம் என்று பொய்ப்பரப்புரை செய்யப்படுவதாக வரலாற்றாய்வாளர்கள் கூறுகிறார்கள். களப்பிரர்கள் ஆட்சி 6ம் நூற்றாண்டில் முடிவுக்கு வந்தது. ஆனால் பல்லவர்கள் கிட்டத்தட்ட 7 நூற்றாண்டுகள் தமிழகத்தை ஆண்டிருக்கிறார்கள்.  பல்லவர்கள் தொண்டைமண்டலத்திலிருந்து ஆட்சி செய்தார்கள். தொண்டைமண்டலம் என்றால் இன்றைய சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிவையற்றை உள்ளடக்கிய பகுதி. பல்லவர்கள் பிராகிருத மொழியில்தான் கல்வெட்டுகள் எழுதினார்கள். பல்லவர்கள் தமிழர்கள் இல்லையென்றாலும், பிற்காலப் பல்லவர்கள் சிலர் தமிழ் பற்றுள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள். சோழர்கள் 9ம் நூற்றாண்டில் தலையெடுத்தப் பின், பல்லவர்கள் ஆட்சி ஒடுங்கிப்போனது. 9ம் நூற்றாண்டு முதல் 12ம் நூற்றாண்டு வரை சோழர்கள் வலுவாக இருந்தார்கள். ஆனால் ஒட்டுமொத்தத் தமிழர் வரலாற்றில், தமிழர்கள் வேறொரு அந்நிய இனத்தின் ஆட்சியின் கீழ் வாழ்ந்தார்கள் என்றால் அது களப்பிரர்கள் மற்றும் பல்லவர்கள் ஆட்சியில்தான். அது தமிழர்களின் வீழ்ச்சிக்கு ஒரு துவக்கப்புள்ளி என்றே சொல்லலாம்.

சோழர்கள் ஆட்சி ஏன் முடிவுக்கு வந்தது? மாலிக் காபூர் தமிழகத்தில் ஏன் கால் வைத்தான்? நாயக்கர்கள் ஆட்சி தமிழகத்தில் எவ்வாறு ஏற்பட்டது? சரபோஜி மன்னர்கள் ஏன் தமிழ்நாட்டுக்குள் நுழைந்தார்கள்? வெள்ளைக்காரர்கள் நுழைவுக்குப் பின் பஞ்சங்கள் தலைவிரித்தாடியது? உலகில் எங்கோ ஒரு மூலையில் ஓர் இனத்தின் அடிமைமுறை ஒழிக்கப்பட்டது, தமிழர்கள் அடிமையானதற்கு அடித்தளமிட்டது என்பதை நம்ப முடிகிறதா! ஆச்சர்யமூட்டக்கூடிய வரலாற்று உண்மை அது. இவை அனைத்தையும் அடுத்த பாகத்தில் காணலாம்.இவை அனைத்தையும் ஆராய்ந்து முடித்ததும், தமிழர்களின் வீழ்ச்சிக்கான ஒட்டுமொத்த காரணங்களையும் அறிந்துகொள்ள முடியுமென்று நம்புகிறேன்.

உதவிய நூல்களும் இணையதளங்களும்

  1. தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் கே.கே.பிள்ளை
  2. http://www.ushistory.org/civ/4c.asp
  3. http://encyclopedia.jrank.org/AUD_BAI/BABYLONIAN_LAW.html
  4. https://www.biography.com/people/hammurabi-9327033
  5. https://en.wikipedia.org/wiki/Slavery_in_India
  6. https://en.wikisource.org/wiki/The_Rig_Veda/Mandala_2/Hymn_20
  7. https://mm-gold.azureedge.net/Articles/avijit/slavery_hinduism.html
  8. http://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/113757/7/07_chapter%202.pdf
  9. https://en.wikisource.org/wiki/Arthashastra/Book_III
  10. https://www.wisdomlib.org/hinduism/book/manusmriti-with-the-commentary-of-medhatithi/d/doc201350.html
  11. https://archive.org/stream/naradiyadharmasa021669mbp#page/n93/mode/2up/search/slave
  12. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/slave-trade-was-practised-with-proper-sale-agreements/article17534843.ece
  13. http://rajaramchinnasamy.com/?p=575
  14. http://rajeendra007.blogspot.com/2014/03/blog-post_4.html
  15. https://en.wikipedia.org/wiki/Slavery_Abolition_Act_1833
  16. https://www.vikatan.com/news/coverstory/52644.html
  17. http://www.tamilvu.org/ta/library-lA474-html-lA474p01-152337

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அண்மைக்கால வலைப்பதிவுகள்
தொடர்புடைய வலைப்பதிவுகள்
Index