தண்ணீருக்குள் கரைந்திருக்கும் அரசியல்

நீர் மூலம்

ரிஷிமூலம், நதிமூலம் இரண்டும் கேட்கக் கூடாதென்று சொல்வார்கள். வேறு வழியில்லை நாம் இப்போது கேட்டுதான் ஆகவேண்டும். நமது பூமியை செயற்கைக்கோளிலிருந்து பார்த்தால் பூமியில் எங்கும் நீர் நிறைந்திருப்பது போலதான் தோன்றும். அது உண்மைதான். ஆனால் அது கடல் நீர், அள்ளிப்பருகினால் வாய் ஓரங்கட்டும். கடல் நீரையும் சேர்த்து நமது பூமியில் உள்ள மொத்த நீரின் அளவை விஞ்ஞானிகள் விஜயகாந்த் போல புள்ளிவிவரமாக பிரித்து மேய்ந்திருக்கிறார்கள். அந்த புள்ளிவிவரத்தை சற்று பார்க்கலாம்.

நமது பூமிப்பந்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் நீரில் 96.5 % கடல் நீர்தான். அது நமக்கு குடிக்க உதவாது. இன்னும் 1% அமில நீர். அதையும் நாம் பயன்படுத்த முடியாது. இந்த புள்ளிவிபரத்தைக் கேட்டதும் பாதிபேருக்கு புரையேறியிருக்கும். இன்னும் கேட்டால் சற்று மயக்கம் வந்தாலும் ஆச்சரியமில்லை. கடல்தண்ணீர் போக மீதியிருக்கும் 2.5% தான் நாம் பயன்பாட்டுக்குத் தகுந்த நல்ல நீர். இப்போது நாம் நல்ல நீரை மட்டும் கணக்கில் கொள்வோம். 100% நல்ல நீரில் 69% அண்டார்டிகா போன்ற பகுதிகளில் உறைந்து கிடக்கிறது, 30% நிலத்தடியில் இருக்கிறது, 1% தான் ஆறு, ஏரி, குளம், குட்டைகளில் இருக்கிறது.

இந்தப் புள்ளிவிவரங்களைக் கேட்டால் சாப்பிடப் பின் கைகழுவவே கொஞ்சம் கூச்சமாக இருக்கும். நாம் அன்றாட வாழ்வில் செலவழிக்கும் நீர் மிக அதிகம். குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில். நம் நாட்டில் நிறையபேர் தண்ணீர்க்  குழாயைத் திறந்துவிட்ட பின்புதான் பல் துலக்கவேத் தொடங்குவார்கள். தண்ணீர் இல்லாமல் இந்த பூமி வாழாது. தண்ணீருக்காகத்தான் மூன்றாம் உலகப்போரே துவங்கலாம் என்று விஞ்ஞானிகள் ஜோசியம் சொல்கிறார்கள். இந்தத் தண்ணீருக்குள் கரைந்து கிடக்கும் உலக அரசியலைப் பற்றிய ஆராய்ச்சிதான் இந்தக் கட்டுரை.

படிகத் தண்ணீர்

படிகம் (Crystal) என்றால் என்னவென்று பாடமெடுக்கப் போவதில்லை. படிகம் என்றால், கல், கண்ணாடி போன்று கெட்டியான பொருள். அவ்வளவு தெரிந்திருந்தாலே போதுமானது. நீர் பொதுவாக மூன்று நிலைகளில் இருக்குமென்று படித்திருப்போம். திரவமாக, பனிக்கட்டியாக, நீராவியாக. அவ்வளவுதான் நமக்குத் தெரிந்தது. ஆனால் சில அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு நான்காவது ஒரு நிலையில் தெரிந்தது. நீர் படிக வடிவில் பூமியில் இருக்கிறது என்பதை அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

980x-e1496995644708

அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தைச் (Northwestern University) சேர்ந்த ஸ்டீவென் ஜேக்கப்சென் (Steven Jacobsen) என்பவரது தலைமையிலான குழு, பூமிக்கடியில் சுமார் 700 கிலோமீட்டர் ஆழத்தில் நீர் படிக வடிவில் உறைந்து கிடக்கிறதென்பதைக் கண்டறிந்தார்கள். இது 2014ம் ஆண்டுவாக்கில் கண்டுபிடிக்கப்பட்டது. நாம் இதுவரை பூமியைத் தோண்டிய அதிக ஆழம் 10 கிலோமீட்டர். தண்ணீர் கடல் அளவுக்கு படிக வடிவில் பூமிக்கடியில் கொட்டிக்கிடந்தாலும் அதை எடுக்கும் தொழில்நுட்பம் நம்மிடம் தற்போது இல்லை. ஒருவேளை எதிர்காலத்தில் வரலாம். ஆனால் நமது வாழ்நாளில் சாத்தியமா என்று தெரியவில்லை. ஆக தற்போதைக்கு ஆறு, குளங்களில் கிடைக்கும் தண்ணீரும், பூமிக்கு சற்று ஆழத்தில் கிடைக்கும் நிலத்தடி நீரையும் நம்பிதான் நம் வாழ்க்கை.

தண்ணீருக்குள் கண்ணாமூச்சி

படிகத் தண்ணீரை நம் வாழ்நாளில் காண்பது கடினம் என்பது உறுதி. நாம் ஏற்கனவே பார்த்தபடி, நம்மிடம் இருக்கும் 2.5% நல்லநீர் தான் நம் தலைமுறையின் நீராதாரம். அதைப் பயன்படுத்தும் முறையில்தான் நமது அடுத்தத் தலைமுறையின் வாழ்வாதாரம் இருக்கிறது. தண்ணீர்ப் பயன்பாட்டைத் துல்லியமாக அளவிட சில வழிமுறைகள் கையாளப்படுகின்றன. அவை நீர்த்தடம் (Water Footprint) மற்றும் மறைநீர் (Virtual Water). 1993ம் ஆண்டுதான் மறைநீர் என்ற வார்த்தை சந்தைக்கு வந்தது. மறைநீர் என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தியவர் இங்கிலாந்தைச் சேர்ந்த டோனி ஆலன் (Tony Allan).  2002ம் ஆண்டு அர்ஜென் Y ஹொயெக்ஸ்ட்ரா (Arjen Y. Hoekstra) என்பவர் நீர்த்தடம் என்ற வார்த்தையை  அறிமுகப்படுத்தினார். இந்த இரண்டு வார்த்தைகளும் நீர் மேலாண்மையில் ஏற்படுத்திய மாற்றங்கள் ஏராளம்.

சமீபகாலமாக இந்தியா மற்றும் வளரும் நாடுகளில் அதிகரித்து வரும் மகிழ்வுந்து (Car) தயாரிப்பு நிறுவனங்கள், உணவுப்பொருள் ஏற்றுமதி ஆகியவற்றுக்குப் பின்னால் இருக்கும் கண்ணாமூச்சிதான் இந்த நீர்த்தடமும், மறைநீரும். கொஞ்சம் விரிவாகப் பார்த்தால் உண்மை விளங்கும். இந்த கண்ணாமூச்சியைப் பற்றிப் புரிந்துகொள்ளும் முன் மறைநீர் என்றால் என்ன? நீர்த்தடம் என்றால் என்ன?  இவற்றை எல்லாம் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் பார்க்கலாம்.

மறை நீர்(Virtual Water)

மறைநீர் விவரிக்க எளிதானது. ஒரு பொருளைத் தயாரிக்க ஆகும் நீரின் அளவுதான் மறைநீர். எளிமையான விளக்கம். ஆனால் ஒரு பொருளைத் தயாரிக்க ஆகும் செலவு நாட்டுக்கு நாடு வேறுபாடுமல்லவா. உதாரணமாக ஒரு கிலோ கோதுமை தயாரிக்க ஆகும் தண்ணீரின் சராசரி அளவு 1334 லிட்டர். இது சராசரிதான். உலகில் கோதுமை தயாரிக்கும் நாடுகளில் பயன்படுத்தப்படும் நீரின் அளவைக் கணக்கெடுத்து அதன் சராசரி அளவைக் கணக்கிடுவார்கள். அதுதான் 1334 லிட்டர். இந்தியாவில் ஒரு கிலோ கோதுமை அறுவடை செய்ய ஆகும் செலவு கிட்டத்தட்ட 1654 லிட்டர். இது சராசரியை விட அதிகம். அதே போல் ஒரு கிலோ அரிசி தயாரிக்க இந்தியாவில் நாம் செலவிடும் தண்ணீரின் அளவு 2850 லிட்டர். இதே போல் ஒவ்வொரு பொருளையும் தயாரிக்க ஆகும் செலவைக் கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள். ஒரு அதிர்ச்சித் தகவல். ஒரு மகிழ்வுந்து (Car) தயாரிக்க ஆகும் நீரின் அளவு 4 லட்சம் லிட்டர். மகிழ்வுந்தின் தாகம் மிகப்பெரியது.

ஒரு பொருளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மறைநீர் எங்கிருந்து கிடைக்கிறது என்பதை வைத்து நீரை 3 விதமாக பகுக்கிறார்கள்.

நீல மறைநீர்  (Blue Virtual Water)
பச்சை மறைநீர் (Green Virtual Water)
சாம்பல் மறைநீர் (Grey Virtual Water)

நீல மறைநீர் என்பது ஆறு, ஏரி, குளங்கள் மற்றும் நிலத்தடி நீர் போன்ற நீர்நிலைகளில் இருந்து நாம் பயன்படுத்திக் கொள்ளும் நீர். பச்சை மறைநீர் என்பது மழை நீரிலிருந்து நாம் பெரும் நீர். நாம் பயன்படுத்தி மாசுபட்ட நீரை சாம்பல் மறைநீர் என்று அழைக்கிறார்கள்.

நீர்த்தடம் (Water Footprint)

நீர்த்தடம் என்பது மறைநீரை விட இன்னும் ஆழமாக நீரின் பயன்பாட்டைக் கண்டறிய உதவுகிறது. மறைநீர் என்பது ஒரு பொருளைத் தயாரிக்க உதவும் நீரின் அளவைப் பற்றி மட்டும் விவரிக்கிறது. ஆனால் நீர்த்தடம் என்பது, அதை யார் பயன்படுத்துகிறார்கள் என்ற கோணத்தில் இன்னும் ஆழமாக நீரின் பயன்பாட்டை அறிய முயற்சிக்கிறது. தனி மனிதன் செலவழிக்கும் நீரின் அளவு, தொழிற்சாலைகள் பயன்படுத்தும் நீரின் அளவு போன்றவை முதல் ஒரு நாட்டின் நீர்ச்செலவு வரை பரந்து விரிந்த பார்வை கொண்டது நீர்த்தடம்.

தனி மனிதன் நீரின் அளவைக் கண்டறிவது எளிய செயல். ஆனால் ஒரு நாட்டின் நீர்ச்செலவைக் கணக்கிடுவது என்பது சற்று கடினம். இது போன்ற அளவீடுகள் நீர்த்தடம் மூலம் சாத்தியமாகிறது. உதாரணமாக நம் நாட்டில் நல்லநீர் கையிருப்பில், எவ்வளவு நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகிறது, எவ்வளவு நீர் கடலில் போய் கலக்கிறது என்பதை எல்லாம் கணக்கிட்டு நமது நாட்டின் நீர் கையிருப்பை துல்லியமாகக் கணக்கிட முடியும். உதாரணமாக ஆவியாகும் நீரின் அளவைக் குறைக்க முடியும், அவற்றில் நாம் முயன்ற தெர்மோகோல் போன்ற உத்திகள் போல உலகில் இதர நாடுகளில் வேறுசில உருப்படியான உத்திகள் நிறைய இருக்கின்றன. அதேபோல் கடலில் கலக்கும் நீரை அணைகள், தடுப்பணைகள் மூலம் தடுக்க முடியும். இது போல நமது கற்பனைக்கு அப்பாற்பட்ட பல வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றின் மூலம் ஒட்டுமொத்த உலகத்தின் நீரின் அளவையேக் கண்டறிய முடியும்.

மறைநீர், நீர்த்தடத்தின் பயன்பாடு

நமது நாட்டின் நீர் வளம் துல்லியமாகத்  தெரியும்போது அதனை இன்னும் சிறப்பாக பயன்படுத்த முடியும். எந்தெந்த இடங்களில் என்னென்ன பயிர் செய்யலாம், நீர்த்தேவைகளைப் பொறுத்து  தொழிற்சாலைகளை எங்கெங்கு  அமைக்கலாம் என்ற பரந்தபட்ட பார்வை அரசாங்கத்துக்குக் கிடைக்கும். மறைநீர், நீர்த்தடம் போன்ற கண்டுபிடிப்புகளுக்கு பின் நீரின் அளவு குறித்த பார்வையே மாறியிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். அவ்வளவு துல்லியமான அளவுமுறைகள் அவை.

Virtual Water

நாம் ஏற்கனவே பார்த்தபடி, ஒரு கிலோ கோதுமையை உற்பத்தி செய்ய நாம் கிட்டத்தட்ட 1654 லிட்டர் தண்ணீரை செலவழிக்கிறோம். நாம் ஒரு டன் (1000 Kilo) கோதுமையை ஏற்றுமதி செய்கிறோம் என்றால் கோதுமையோடு 16,54,000 லிட்டர் தண்ணீரையும் சேர்த்து ஏற்றுமதி செய்கிறோம் என்று அர்த்தம். 100 மகிழ்வுந்துகளை (Cars) ஏற்றுமதி செய்கிறோம் என்றால் அதனுடன் 4 கோடி லிட்டர் தண்ணீரும் நமக்கு செலவாகிறது. அதேபோல் இதே பொருட்களை இயக்குமதி செய்தால் நாம் அதே அளவு தண்ணீரை சேமித்திருக்கிறோம் என்று பொருள். மறைநீர், நீர்த்தடம் போன்ற வார்த்தைகள் சந்தைக்கு வந்தபின் அவை இறக்குமதி, ஏற்றுமதி சந்தைகளையேப் புரட்டிப் போட்டன.

தண்ணீர் அரசியல்

வளர்ந்த நாடுகள் மற்றும் நீர்ப் பற்றாக்குறை உள்ள நாடுகள் எல்லாம் மறைநீர், நீர்த்தடங்களை ஆய்வு செய்து, மறைநீர் அதிகம் செலவாகும் பொருட்களைப் பட்டியலிட்டு அவற்றில் எந்தெந்த பொருட்களை எல்லாம் இறக்குமதி செய்வது, உள்நாட்டில் நீர்வளத்தைப் பாதுகாக்க மறைநீர் அதிகம் செலவாகும் பொருட்களுக்கு தடைவிதிப்பது, மறைநீர் குறைவாகப் பயன்படும் பொருட்களை மட்டும் ஏற்றுமதி செய்வது என்று ஆராய்ந்து முடிவு செய்கின்றன.

latuffwell2015

சொந்த நாடான அமெரிக்காவிலே கடையை மூடிக் கிளம்புங்கள் என்று விரட்டிய Coca Cola, Pepsi போன்ற நிறுவனங்கள் ஏன் நமது ஊரில் கடைவிரிக்கின்றன? ஏன் வரிசைகட்டி அனைத்து மகிழ்வுந்து (Car) தொழிற்சாலைகளும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் தொழில் தொடங்குகின்றன? விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்தாலும், உணவுப்பொருள் ஏற்றுமதி மட்டும் ஏன் அதிகரிக்கிறது? இதுபோன்ற அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில்தான். தண்ணீர்.

வளர்ந்த நாடுகள், தங்கள் நாட்டின் நீர்வளத்தைக் காக்க வளரும் நாடுகளின் நீர்வளங்களைக் கொள்ளையடிக்கிறார்கள். இதுதான் அப்பட்டமான உண்மை. இது தண்ணீருக்குப் பின்னால் இருக்கும் மிகப்பெரிய அரசியல். உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா. Coca cola மற்றும் Pepsi நிறுவனங்கள் 1000 லிட்டர் தண்ணீருக்கு நமது அரசாங்கத்துக்கு கொடுக்கின்ற விலை வெறும் 37 ரூபாய் 50 காசுகள். ஆனால் அதே நீரை நம்மிடம் ஒரு லிட்டர் 20 ரூபாய் என்று விற்கிறார்கள். நமக்கே இந்த நிலை என்றால் நமது அடுத்தத் தலைமுறையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அவர்கள் நீருக்காகவே நாடுகடந்து போகும் நிலை ஏற்படும்.  நாம் வீறுகொண்ட எழ சற்று தாமதமானாலும் நம் நாட்டின் ஆறுகள் வற்றிப் போயிருக்கும். குடிக்க தண்ணீரில்லாமல் குடிநீரை இறக்குமதி செய்துகொண்டிருப்போம். தண்ணீரில் கரைந்திருக்கும் அரசியலைப் புரிந்துகொள்வோம். நல்லநீர் என்பது ஆடம்பரமல்ல அது அடிப்படைத் தேவை. அடுத்த தலைமுறையின் வாழ்வாதாரம். நீர்வளம் காப்போம்.

பின் குறிப்புகள்

1) http://www.dinamalar.com/news_detail.asp?id=886346

2) http://tamil.thehindu.com/opinion/reporter-page

3) https://en.wikipedia.org/wiki/Water_resources

4) https://www.usatoday.com/story/news/nation/2014/06/12/water-earth-reservoir-science-geology-magma-mantle/10368943/

5) https://www.newscientist.com/article/dn25723-massive-ocean-discovered-towards-earths-core/

6) http://www.thealternative.in/society/the-hidden-story-of-indias-virtual-water-deficit/

7) http://www.unesco.org/fileadmin/MULTIMEDIA/FIELD/Venice/pdf/special_events/bozza_scheda_DOW04_1.0.pdf

8) http://iopscience.iop.org/article/10.1088/1748-9326/aa625f

9) https://www.earthmagazine.org/article/virtual-water-tracking-unseen-water-goods-and-resources

10) https://www.gdrc.org/uem/footprints/water-footprint.html

11) http://www.sciencedirect.com/topics/agricultural-and-biological-sciences/virtual-water

12) https://en.wikipedia.org/wiki/Virtual_water 

13) http://www.visai.in/2014/09/16/do-we-have-a-sense/

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.