சமஸ்கிருதம் என்னும் பிச்சைப்பாத்திரம்

எழுத்துக்கள் இல்லாத மொழி

“பெற்ற தாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” என்றார் பாரதி. பெற்ற தாயுடன், தாய்மொழியையும் சேர்த்துக் கொள்ளலாம், தாய்மொழி என்பது அவ்வளவு சிறப்பு வாய்ந்தது. தற்போது இந்தியாவில் பலநூறு மொழிகள் வழக்கில் இருந்தாலும், சில நூற்றாண்டுகள் பின்னோக்கி சென்றால் அவற்றின் எண்ணிக்கை மளமளவென்று குறைந்துவிடும். 2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் கிடைத்த கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றில் காணக்கிடைக்கின்ற மொழிகள் மிகவும் குறைவு. அவற்றில் முதன்மையானவை தமிழ் மற்றும் பிராகிருதம் (Prakrit).

main-qimg-d67123e4c1b079f16ef4c23bca5efd5e-c

இதுவரை இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன. மறைக்கப்படுகின்ற உண்மை என்னவென்றால் அவற்றில் 60,000 கல்வெட்டுகளுக்கும் மேற்பட்டவை தமிழ் மொழி தொடர்பான கல்வெட்டுகள். அதில் வெறும் 5 சதவீதம் மட்டுமே பிறமொழி கல்வெட்டுகள். மற்றவை அனைத்தும் தமிழ் மொழியில் எழுதப்பட்டவை. இந்தியாவில், வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் பேசப்பட்ட மொழிகள் பெருவாரியாக மூன்று, அவை தமிழ், பிராகிருதம் மற்றும் பாளி. புத்தர் பேசியது பாளி மொழிதான். அகழ்வாராய்ச்சியில் பூமியின் மறுபக்கம் வரை தோண்டினாலும் சமஸ்கிருதம் தொடர்பாக, 2000 ஆண்டுகளுக்கு முந்தைய சான்றுகள் என்று ஒன்றுகூட கிடைக்கவில்லை. அப்படி ஒரு மொழி இருந்ததற்கான சான்றுகளும் இல்லை. சமஸ்கிருதம் தொடர்பாக கண்டறியப்பட்ட சான்றுகள் அனைத்துமே 1000 முதல் 1500 ஆண்டு கால வரலாற்று சான்றுகள். ஆனால் என்ன சான்றுகளை வைத்துக்கொண்டு சமஸ்கிருதத்துக்கு 5151ம் ஆண்டு விழா கூச்சப்படாமல் கொண்டாடுகிறார்கள் என்று புரியவில்லை. தமிழ் சங்க இலக்கியங்கள் 3000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை. நாம் 2000 ஆண்டுகள் வரையிலான வரலாற்றை ஆராய்வதன் நோக்கம் என்னவென்றால், சமஸ்கிருதம் என்ற மொழி உருவாகி 2000 ஆண்டுகள் கூட நிறைவடையவில்லை என்பதை எடுத்துக்காட்டும் விதமாகத்தான்.

நம் எண்ணத்தை பேச்சாகவும், வரிவடிவமாகவும் (எழுத்து) மாற்றும் வல்லமை கொண்ட மொழிதான் காலங்களைக் கடந்து நிலைத்து நிற்கும். பேச்சு, எழுத்து இரண்டையும் ஒருங்கே கொண்டதுதான் மொழி. உலகின் பல மொழிகளில் பேச்சு வழக்கு மட்டும் உண்டு, எழுத்து வடிவம் கிடையாது. நம் இந்தியாவிலே பல மொழிகளைக் கூற முடியும். கொங்கனி, சௌராஷ்டிரா போன்ற மொழிகளுக்கு எழுத்து வடிவம் கிடையாது. நாம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல், உலகின் செம்மொழிகளில் ஒன்றான சமஸ்கிருதத்துக்கு இன்றுவரை எழுத்து வடிவமே கிடையாது. “Kaalaila saaptiyaa” என்று நாம் குறுஞ்செய்தி அனுப்புவது போல் தேவநகரி, கிரந்தம் போன்ற எழுத்துக்களைக் கடன் வாங்கித்தான் சமஸ்கிருதத்தை இன்றுவரை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். சமஸ்கிருதம் தொடர்பான சிறு ஆய்வுதான் இந்தக் கட்டுரை. தமிழை அழித்து, சமஸ்கிருத்தை வளர்க்க நினைக்கும் ஒரு கூட்டத்தின் முகத்திரையைக் கிழிக்கும் முயற்சியும் கூட.

செம்மொழி என்னும் சதி

நாம் முன்பே பார்த்தபடி, தமிழ், பிராகிருதம், பாளி போன்ற மொழிகள்தான் 2000 ஆண்டுகளுக்கும் முன்பாக இந்தியா என்று இப்போது அழைக்கப்படும் நாவலந்தீவில் பேசப்பட்ட மொழிகள். அப்போது சமஸ்கிருதம் என்ற வார்த்தையே கிடையாது. பிராகிருத மொழியை மூலமாகக் கொண்டு வளர்ந்த மொழிதான் சமஸ்கிருதம். அது மொழிகளின் பெயர்களிலே தெளிவாக விளங்கும். பிராகிருதம் என்றால் இயற்கை என்று பொருள். அதாவது இயற்கையாக காலப்போக்கில் உருவான ஒரு மொழி. சமஸ்கிருதம் என்றால் மெருகேற்றப்பட்ட என்று பொருள். அதாவது இயற்கையாக தோன்றிய பிராகிருத மொழியை சற்று மெருகேற்றி சமஸ்கிருதம் உருவானது என்று அர்த்தம்.

பிராகிருத மொழியிலிருந்து வார்த்தைகளைக் கடன் வாங்கி அதை சற்று மாற்றி, புது வார்த்தைகளை உருவாக்கி, பின்பு அதையே புதுமொழி ஆக்கிவிட்டார்கள். மிகவும் எளிதான காரியம். ஆனால் எழுத்துக்களை உருவாக்க அவர்கள் மெனக்கெடவில்லை. அப்போது வழக்கத்தில் இருந்த சில எழுத்துக்களை உபயோகித்துத் தங்கள் மொழியை எழுதிக் கொண்டார்கள். ஆக, மொழியும் கடன் வாங்கப்பட்டது. எழுத்துக்களும் கடன் வாங்கப்பட்டது. இது ஒன்றும் பிழையில்லை. உலகில் இன்று வழக்கில் உள்ள மொழிகளில் 99% மொழிகள் இவ்வாறு கடன் வாங்கப்பட்ட மொழிகள்தான். ஆனால் நாம் மற்ற மொழிகளை விட்டுவிட்டு சமஸ்கிருதத்தை விமர்சிக்க வேண்டிய காரணம் என்ன. காரணம் இருக்கிறது.

உலகில் தற்போது கிட்டத்தட்ட 6000 மொழிகளுக்கு மேல் வழக்கில் இருக்கின்றன. இவற்றில் 7 மொழிகள் மட்டும்தான் செம்மொழிகள் (Classical Languages) என்று அழைக்கப்படுகின்றன. தமிழ், கிரீக் (Greek), லத்தீன் (Latin), மாண்டரின் (Mandarin), ஹீப்ரு (Hebrew), அரேபி (Arabic), சமஸ்கிருதம். உலக செம்மொழிகளின் பட்டியலில் சமஸ்கிருதம் சத்தமில்லாமல் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஒரு மொழியை செம்மொழி என்று குறிப்பிட சில தகுதிகளை வகுத்திருக்கிறார்கள்.

1) மிகப்பழமை வாய்ந்த மொழியாக இருக்கவேண்டும்.

2) மொழி தனித்தியங்கும் ஆற்றல் உடையதாக இருக்கவேண்டும்.

மேலும் பல தகுதிகள் இருக்கின்றன. இவை முதன்மைத் தகுதிகள். முதல் தகுதி, மிகப்பழமையான மொழியாக இருக்க வேண்டும். ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்பு சமஸ்கிருதம் என்ற சொல்லே இந்தியாவில் இல்லை என்று பார்த்தோம். ஆகவே அது தொன்மையான மொழி என்று ஏற்றுக்கொள்ள முடியாது. இரண்டாவதாக, மொழி தனித்தியங்கும் ஆற்றலுடையதாக இருக்கவேண்டும். சமஸ்கிருத மொழியே பிராகிருத மொழியிலிருந்து உருவானதென்று பார்த்தோம். மொழியும் கடன் வாங்கிய மொழி, எழுத்துக்களும் கடன் வாங்கப்பட்டது. ஆக, சமஸ்கிருத மொழி தனித்தியங்கும் ஆற்றலும் இல்லாதது, மேலும் பழமை வாய்ந்த மொழியும் இல்லை. பின்னர் எதன் அடிப்படையில் சமஸ்கிருதம் செம்மொழி பட்டியலில் சேர்க்கப்பட்டது. சொந்தமாக எழுத்துக்கள் கூட இல்லாத ஒரு மொழியை இந்தியாவின் மூத்த மொழி என்று ஒரு கூட்டம் கூச்சலிடுவது ஏனென்று விளங்கவில்லை. வாழும்போதே நடைபிணம் போல வாழ்ந்த சமஸ்கிருத மொழிக்கு இறந்து குழிதோண்டி புதைத்த பின்னும் பாலூற்றி, தேனூற்றி கொண்டாடப்படுவதன் பின்னணி என்ன. அதை நாம் ஆராய வேண்டும்.

பெஹிஸ்டன் கல்வெட்டு (Behistun Inscriptions)

கி.மு. 522 முதல் கி.மு. 486 வரை பாரசீகத்தை (Persia) ஆண்ட மன்னரின் பெயர் டேரியஸ் (Darius). பாரசீகம் என்றால் இன்றைய ஈரான். டேரியஸின் வரலாற்றை விவரிக்கும் கல்வெட்டுதான் பெஹிஸ்டன் கல்வெட்டு. ஈரானில், கெர்மன்ஷா மாநிலத்திலுள்ள பெஹிஸ்டன் மலையில் எழுதப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டுக்கும் நாம் விவாதிக்கும் தலைப்புக்கும் பெரிய தொடர்பு இருக்கிறதா இல்லையா என்பதை தொல்பொருள் ஆராய்ச்சியாளரோ,  வரலாற்று ஆய்வாளரோதான் கூற முடியும். நமக்கும் அந்தக் கல்வெட்டில் கூறப்பட்டுள்ள மன்னனுக்கும் எந்த வாய்க்கால் தகராறும் இல்லை. ஆனால் அதில் பயன்படுத்தப்பட்ட ஒரு வார்த்தை நமக்கு மிகவும் தேவையான வார்த்தை. அது ஆரியன் என்ற வார்த்தை. ஆம், அந்த கல்வெட்டில் ஆரியன் என்ற வார்த்தை காணப்படுகிறது. இது இரானிய மக்களைக் குறிக்கும் விதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆதிகாலத்தில் ஆரியன் என்ற வார்த்தைதான் மருவி பின்பு இரான் என்று மாறிவிட்டதா என்று தெரியவில்லை. அந்த ஆராய்ச்சியை நாம் தொல்பொருள் துறைக்கே விட்டுவிடலாம். நமது  இப்போதைய தேவை அந்த ஆரியன் என்ற வார்த்தை மட்டும்.

1024px-Bisotun_Iran_Relief_Achamenid_Period

ஆரியன் என்ற வார்த்தை, இந்தியாவைத் தாண்டிப் பயன்படுத்தப்பட்டதாக கண்டறியப்பட்ட மிகப்பழமையான கல்வெட்டென்றால் அது பெஹிஸ்டன் கல்வெட்டுதான். கி.மு. 6ம் நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்டது.  நாம் பெஹிஸ்டன் கல்வெட்டில் பார்த்தபடி ஆரியன் என்ற வார்த்தை இரானிய மக்களைக் குறிக்கிறது. அப்படியானால் இந்தியாவுக்குள் ஊடுருவிய ஆரியர்கள் என்பது இரானியர்களைத்தான் குறிக்கிறதா என்று எண்ணிவிட வேண்டாம். இந்தியாவில் இரானியர்கள் இன்றும் வாழ்கிறார்கள். அவர்கள் பார்சி (Parsi) என்று அழைக்கப்படுகிறார்கள். ஈரானுக்கு பாரசீகம் என்ற பெயர் உண்டென்பதை முன்பே பார்த்தோம். பாரசீகத்திலிருந்து வந்தவர்கள் என்பதால் அவர்கள் பார்சி என்று அழைக்கப்படுகிறார்கள். அப்படியானால் 4000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் ஊடுருவிய ஆரியர்கள் யார்?

தமிழ் இலக்கியங்களில் ஆரியர்கள்

இந்தியாவில் ராமாயணம், மகாபாரதம் போன்ற நூல்களிலும், தமிழில் சிலப்பதிகாரம், நற்றிணை,  குறுந்தொகை, பதிற்றுப்பத்து போன்ற நூல்களிலும் ஆரியன் என்ற வார்த்தை கையாளப்பட்டிருக்கிறது.

சிலப்பதிகாரத்தில் ஆரிய என்ற வார்த்தை இடம்பெற்றுள்ள பாடல் வரிகள்.

“வடவாரிய படை கடந்து

தென்தமிழ் நாடு ஒருங்கு காணப்

புரைதீர் கற்பின் தேவி தன்னுடன்

அரசு கட்டிலிற் றுஞ்சிய பாண்டியன்

நெடுஞ்செழியன்”

நற்றிணையில் ஆரியர் என்ற வார்த்தை இடம்பெற்றுள்ள பாடல் வரிகள்.

“ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்

பலருடன் கழிந்த ஒள்வாள் மலையனது”

பதிற்றுப்பத்தில் ஆரியர் என்ற வார்த்தை இடம்பெற்றுள்ள பாடல் வரிகள்.

“அமைவரல் அருவி இமையம்விற் பொறித்து

இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத்

தன்கோல் நிறீஇத் தகைசால் சிறப்பொடு

பேரிசை மரபின் ஆரியர் வணக்கி”

குறுந்தொகையில் ஆரியர் என்ற வார்த்தை இடம்பெற்றுள்ள பாடல் வரிகள்.

“ஆரியர்

கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி

வாகைவெண்நெற் றொலிக்கும்”

இவை மட்டுமல்ல, தமிழில் இன்னும் பல சங்கப்பாடல்களில் ஆரியர் என்ற வார்த்தையைக் காணமுடிகிறது. தமிழ் சங்கப்பாடல்களைப் பொறுத்தவரையில் ஆரியர் என்ற வார்த்தை பெரும்பாலும் வடஇந்தியர்களைக் குறிக்கிறது. ஆரியர்கள் என்பது தமிழர்களிடமிருந்து வேறுபட்ட இனம் என்பதை சங்கப்பாடல் மூலமாகவே உணரமுடியும். வடஇந்தியர்கள் மத்தியில் ஆரியர் என்ற வார்த்தை ராமாயணம், மகாபாரதம் போன்ற நூல்களில் இடம் பெற்றாலும், அது ஒரு இனத்தைக் குறிப்பது போல பயன்படுத்தப்படவில்லை. பிராகிருதம் மற்றும் சமஸ்கிருதத்தில் ஆரியன் என்ற வார்த்தை “மேன்மையான”, “உயர்வான” என்ற பொருள்படும்படி கையாளப்பட்டிருக்கிறது. அது ஒட்டுமொத்த இனத்தைக் குறிக்கும் வார்த்தைபோல் பயன்படுத்தப்படவில்லை. ஆடு, மாடுகளுடன் சேர்ந்து இந்தியாவுக்குள் ஊடுருவிய கும்பலுக்கு, தமிழர்கள் வைத்த பெயர்தான் ஆரியன். சரி அந்த ஆடு, மாடுகள் மேய்க்கும் கூட்டம் எங்கிருந்து வந்தது?

நிற்க. சமஸ்கிருதம் பற்றி ஆழமாக தோண்டிக்கொண்டிருக்கும்போது திடீரென்று எங்கிருந்து ஆரியர்கள் வந்தார்கள்? அவர்களைப் பற்றி நாம் ஏன் இவ்வளவு விரிவாக நீட்டி முழக்கி ஆராய வேண்டும்? காரணம் உண்டு. இந்தியாவில் தமிழ் தழைத்திருந்த நேரம், ஆரியர்கள் என்று நாம் அழைக்கும் புல்லுருவிகள் ஊடுருவிய பின்தான்,  தமிழுக்கு நடுவே களைப்பயிராக சமஸ்கிருதம் முளைக்கத் தொடங்கியது. சமஸ்கிருத ஆராய்ச்சியும், ஆரியர்கள் வரவும் பிரிக்க முடியாதது. அதனால் அவர்கள் பூர்வீகத்தைக் கிளறியே ஆகவேண்டியக் கட்டாயத்தில் இருக்கிறோம். அந்த வீகத்தைக் கொஞ்சம் பார்ப்போம்.

ஆரியர்கள் பூர்வீகம்

இந்தியாவில் ஊடுருவிய ஆரியர்கள், வடஐரோப்பாவிலிருந்து வந்தவர்கள் என்பது வரலாற்றாய்வாளர்கள் கருத்தாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக நார்டிக் பகுதியிலிருந்து (Nordic Region) வந்தவர்கள் என்றுதான் நம்பப்படுகிறது. நார்டிக் பகுதி என்பது இன்றைய டென்மார்க் (Denmark), பின்லாந்து (Finland), ஐஸ்லாந்து (Iceland), நார்வே (Norway), ஸ்வீடன் (Swedan) போன்ற நாடுகள் உள்ளடங்கிய பகுதிகளைக் குறிக்கும். இன்றும் சமஸ்கிருதத்துக்கும், நார்டிக் பகுதியில் பேசப்படும் மொழிகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்து ஏறத்தாழ 4000 ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்பது ஆய்வாளர்கள் கணிப்பு. ஒரு ஆட்டு மந்தை, அந்த மந்தையுடன் மந்தையாக ஆரியர்களும் வந்துவிட்டார்கள். இவ்வளவுதான் அந்த ஆரிய பூர்வீகம்.

பெஹிஸ்டன் கல்வெட்டில் பார்த்த ஆரியர்களுக்கும், இந்தியாவில் நுழைந்த ஆரியர்களுக்கும் தொடர்பில்லை என்பது தெளிவாக விளங்கும். இந்தியாவில் தமிழர்கள் மத்தியில் மட்டும் புழக்கத்தில் இருந்த ஆரியன் வார்த்தையை  உலகம் அறிந்ததில்லை. இந்தியாவுக்கு வெளியே கி.மு. 6ம் நூற்றாண்டில் பெஹிஸ்டன் கல்வெட்டில் மட்டும் ஆரியன் என்ற வார்த்தை காணப்பட்டது. அதிலிருந்து கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு மேல் ஆரியன் என்ற வார்த்தையை இந்தியாவைத் தவிர வெளிநாட்டவர் எவரும் சீண்டியதாகத் தெரியவில்லை. சும்மா இருந்த ஆரிய சங்கை 19ம் நூற்றாண்டில் ஒருவர் ஊதினார். அதன்பிறகு ஆரிய சங்கின் முழக்கம் இன்றுவரை அடங்கவில்லை. சங்கை ஊதியவர் ஜெர்மனி நாட்டை சேர்ந்தவர். அவரைத் தொடாமல் ஆரிய வரலாற்றை முடிக்க முடியாது.


பிரெய்ட்ரிக்
மேக்ஸ் முல்லர் (Friedrich Max Muller)

பிரெய்ட்ரிக் மேக்ஸ் முல்லர் (1823 முதல் 1900 வரை வாழ்ந்தவர்) ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர். அந்த ஆரிய சங்கை ஊதியவர் இவர்தான். செம்மொழிகளான லத்தீன், கிரீக், அரபி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளைக் கற்றவர். ஜெர்மனியில் பிரெய்ட்ரிக் ஷெல்லிங் (Friedrich Schelling) என்பவரது வேண்டுகோளுக்கிணங்க சில உபநிஷதங்களை மொழிபெயர்த்திருந்தார். ரிக் வேதம் தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரை எழுத, கிழக்கிந்திய கம்பெனி வைத்திருந்த சமஸ்கிருதம் தொடர்பான நூல்களில் குறிப்பெடுக்க இங்கிலாந்துக்கு வந்தவர் அங்கேயே பாய்விரித்துப் படுத்துவிட்டார். 1846ம் ஆண்டு இங்கிலாந்து வந்தவர் அதன்பிறகு தாய்நாட்டுக்குத் திரும்பவே இல்லை. இங்கிலாந்து வந்ததும் ரிக் வேதத்தையும் மொழிபெயர்த்தார்.  சமஸ்கிருதம், இந்துமதம் தொடர்பான ஆராய்ச்சிகளில் கடைசிவரை மூழ்கி அதற்காக கணிசமானப் பங்களிப்பை அளித்தார் என்பது உண்மை.

friedrich-max-muller-granger

மேக்ஸ் முல்லர் காலத்தில் இந்திய – ஐரோப்பிய மொழிகளிடையேயான ஒற்றுமை தீவிரமாக ஆராயப்பட்டது. இந்தியாவிலும், பெஹிஸ்டன் கல்வெட்டிலும் பயன்படுத்தப்பட்ட ஆரியன் என்ற வார்த்தையை வெற்றிகரமாக ஐரோப்பா கொண்டுபோய் சேர்த்த பெருமை மேக்ஸ் முல்லரைத்தான் சேரும். ஆரியன் என்ற வார்த்தையை ஒரு இனத்தின் அடையாளமாக மாற்றியது முல்லர்தான். முல்லர் தொடங்கி வைத்ததுதான் தாமதம், ஆரியன் என்ற வார்த்தைக்கு உரிமை கொண்டாட ஐரோப்பாவே திரண்டு வந்தது. ஐரோப்பியர்களில் பெரும்பாலானோர் தங்களை ஆரிய இனத்தை சேர்ந்தவர்கள் என்று நம்ப வைக்கப்பட்டார்கள். ஆரியர்கள்தான் ஆளப்பிறந்தவர்கள், மற்றவர்கள் அடிமைகளாக வாழப்பிறந்தவர்கள் என்று இறுமாப்பு  கொள்ளத்தொடங்கினார்கள். அந்த வரிசையில் ஆரிய விதையைத் தூவி விட்டுப் போன இன்னும் சிலரையும் பற்றி மேலாட்டமாகத் தெரிந்து கொள்ளவேண்டும்.

ஆரிய இனவாதத்துக்கு பலியான 60 லட்சம் உயிர்கள்

மேக்ஸ் முல்லர் ஆரிய இனம், ஆரிய ரத்தம், ஆரிய கிட்னி என்று ஆரியத்துக்கு புது சாயம் பூசிய பிறகு, வேறு பலரும் ஆரியத்தைக் குறித்து பக்கம் பக்கமாக எழுதித் தள்ளினார்கள். சிலர் ஆராய்ச்சி என்ற பெயரில் ஆரிய இனம்தான் உலகில் உயர்ந்த இனம் என்று புரளியைக் கிளப்பினார்கள். அப்படி ஆரியப் புரளியைக் கிளப்பியவர்களில் மேக்ஸ் முல்லருக்கு அடுத்ததாக முதன்மையானவர் என்றால் அது ஹெலினா பெட்ரோவ்னா பிளாவட்ஸ்கி (Helena Petrovna Blavatsky) அம்மையாராகத்தான் இருக்க வேண்டும். பிளாவட்ஸ்கி அன்றைய ரஷ்யக் குடியரசின் கீழ் இருந்த உக்ரைனில் (Ukraine) பிறந்தவர்.  1888ம் ஆண்டு தான் எழுதிய ரகசிய கோட்பாடு (The Secret Doctrine) என்ற நூலில் இனங்களின் வேர் (Root Race) என்ற கொள்கையை முன்வைக்கிறார். பூமி தோன்றியது முதல், வருங்காலம் வரைக்கும் மொத்தம் 7 வகையான இனங்களைப் பட்டியலிட்டுக் கூறுகிறார்.

h-p-blavatsky-and-henry-s-olcott-1888_edited

போலாரியன் (Polarian), ஹைப்பர்போரியன் (Hyperborean), லெமூரியன் (Lemurian), அட்லாண்டியன் (Atlantean), ஆரியன் (Aryan) ஆகிய 5 இனங்களை பிளாவட்ஸ்கி அறிமுகப்படுத்துகிறார். 6 மற்றும் 7வது இனங்கள் வருங்கால இனங்கள். அவற்றுக்கு பெயர் வைத்தாரா என்று தெரியவில்லை, ஆனால் இணையத்தளத்தில் அதற்கும் ஹோமோ ஸ்பிரிட்டாலிஸ் (Homo Spiritalis), சீல் (Seal) , ட்ரம்பெட் (Trumpet) என்றெல்லாம் பல பெயர்கள் கிடைக்கின்றன. மற்ற பெயர்களை விட்டுவிடலாம். பிளாவட்ஸ்கி வரிசையில் 5வது இனம்தான் ஆரிய இனம். தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இனம். ஆரிய இனத்தைப் போல இன்னும் பல இனங்கள் உண்டு  அதில் பல உட்பிரிவுகளும் உண்டு. ஆனால் பிளாவட்ஸ்கியைப் பொறுத்தவரை ஆரிய இனம்தான் உயர்ந்த இனம். மற்றவர்கள் ஆரியர்களுக்குக் கீழானவர்கள் என்பதுதான் அவர் கடைபிடித்த கொள்கை. 1875ம் ஆண்டு பிரம்ம ஞான சபை (Theosophical Society) பிளாவட்ஸ்கி மற்றும் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் (Henry Steel Olcott) மற்றும் சிலரால் உருவாக்கப்பட்டது. பிரம்ம ஞான சபையின் மந்திரச்சொல் என்னவென்றால் “உண்மையை விட உயர்ந்த மதம் வேறொன்றுமில்லை”. அவர்கள் சொல்லும் உண்மை என்னவென்றால், ஆரியன் ஆளப்பிறந்தவன். நாமெல்லாம் அடிமைகள். வேறொன்றுமில்லை.

societa_teosofica

பிரம்ம ஞான சபை தோற்றுவிக்கப்பட்ட அதே 1875ம் ஆண்டு இந்தியாவிலும் ஆரிய இனவாதத்தை தூக்கிப் பிடிக்கும் வகையில் “ஆரிய சமாஜம்” போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டது. அந்த அமைப்புகளும், நேரிடையாகவோ, மறைமுகமாகவோ ஆரிய இனவாதமே பேசின. ஆரிய சமாஜத்தை உருவாக்கியவர் தயானந்த சரஸ்வதி. இந்திதான் இந்தியாவின் மொழியாக இருக்கவேண்டுமென்று அப்போதே கூவியவர் தயானந்த சரஸ்வதி. சமஸ்கிருதத்தைத்தான் முதலில் பரப்பி வந்தார். பின்னர் என்ன நினைத்தாரோ, இந்தியைக் கையிலெடுத்து சமஸ்கிருதத்தை விட்டுவிட்டார். இது ஒட்டுமொத்த ஆரிய வரலாறு இல்லை. ஆரியன் என்ற சொல்லைப் பரவலாக்கிய சில முதன்மையான மனிதர்களைப் பற்றி மட்டும்தான் நாம் பார்த்தோம். 19ம் நூற்றாண்டில்தான் ஐரோப்பியர்கள் தங்களை ஆரியர்கள் என்று அழைத்துக்கொள்ளத் தொடங்கினார்கள் என்பது நிச்சயமான உண்மை. ஆரியன் என்ற சொல்லுக்குத்  தொடர்பே  இல்லாத ஐரோப்பியக் கூட்டம், தன்னை ஆரியன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு மற்ற இனத்தவரை அடிமைகள் போல கற்பனை செய்யத் துவங்கியது இந்த காலகட்டத்தில்தான். அந்த ஆரிய இறுமாப்பின் ஒட்டுமொத்த அடையாளமாக வாழ்ந்தவர் ஹிட்லர். ஹிட்லரும் ஜெர்மன் இன மக்களை ஆரிய இனம் என்று நம்பினார். அந்த நம்பிக்கை கிட்டத்தட்ட 60 இலட்சம் யூதர்களைக் காவு வாங்கியது. ஹிட்லர் கிளறிவிட்ட பின் ஆரியன் என்ற வார்த்தை ஒட்டுமொத்த உலகுக்கே போய் சேர்ந்தது.

ஆரிய மொழி செம்மொழி ஆனது 

இந்தியாவில் சிந்துசமவெளி வரை பரவி வாழ்ந்த தமிழர்கள், ஆரியர்கள் நுழைவுக்குப் பின்தான் தென்னிந்தியாவை நோக்கி நகர்ந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தியாவில் ஆரியர்கள் பேசிய மொழி சமஸ்கிருதம் என்று நம்பவைக்கப்பட்ட இங்கிலாந்து வெள்ளைக்காரக்  கூட்டம்தான் சமஸ்கிருதத்துக்கும், இதர ஐரோப்பிய மொழிகளுக்கும் இடையிலான ஒற்றுமையை ஆராய மேக்ஸ் முல்லர் போன்ற முல்லன்களையும், இன்னும் பல வில்லன்களையும் ஏவி விட்டிருந்தது. சமஸ்கிருதம் ஆரிய மொழியென்று நம்பவைக்கப்பட்டது. ஆரிய இனம், ஆரிய ரத்தம் வரிசையில் ஆரிய மொழியும் உயர்ந்த மொழியென்று நம்பவைக்க பொய்யான பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆரிய இனவாதத்தைத் தூக்கிப் பிடிக்கும் முயற்சியின் விளைவாகத்தான் சொந்தமாக எழுத்துக்கள் கூட இல்லாத சமஸ்கிருதம் செம்மொழி என்ற தகுதி பெற்றது.

Tamil-Brahmi-script

சமஸ்கிருதம்தான் இந்தியாவின் மூத்தமொழி என்று வெள்ளைக்காரன் வாயால் வடைசுட்டாகி விட்டது. ஆனால் சமஸ்கிருதத்துக்குப் போட்டியாக இந்தியாவில் மிக வலிமையாக, மிகத் தொன்மையாக தமிழ் இருக்கிறது. தமிழை எப்படி ஓரங்கட்டுவது என்று யோசித்தார்கள் இந்தியாவுக்குள் வாழும் ஆரியர்கள். நாம் வாழ்க்கையில் வெற்றிபெறக்  கடுமையாக உழைத்து முன்னேற வேண்டும். இது முதல் வழி. இரண்டாவது ஒரு குறுக்குவழி இருக்கிறது. நமது எதிரியை வளரவிடாமல் செய்வதுதான் இரண்டாவது வழி. தமிழின் பழமையை அழிக்க இந்த குறுக்கு வழிதான் கடைபிடிக்கப்பட்டது. சமஸ்கிருதம் பழமையான மொழி என்று கூவிக்கொண்டே தமிழின் பழமையை அழிக்கும் முயற்சிகள் கண்டறியப்பட்டன. அந்த சதிக்குப் பெயர் பிராமி.

பிராமி என்னும் கிருமி

இந்தியாவில் இதுவரை கண்டெடுத்த கல்வெட்டுகளில் பழமையானது என்றால் அது தமிழ் கல்வெட்டுக்கள்தான். ஆனால் அரசாங்க ஏடுகளில் தமிழ் எழுத்துக்கள் என்ற வார்த்தைக்கு பதிலாக தமிழ் பிராமி என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கும். அது என்ன பிராமி? அது மொழியா? இல்லை. பிராமி என்பது வெறும் எழுத்துக்களை மட்டுமே குறிக்கும். கி.மு. 238ல் அசோகர் தூண்களில் எழுதி வைத்துவிட்டுப் போன எழுத்துக்களுக்கு பிற்காலங்களில் பிராமி என்று பெயரிடப்பட்டது. தமிழ் கல்வெட்டுக்கள் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்படும் வரை அசோகர் கல்வெட்டுகளில் கண்டெடுக்கப்பட்ட எழுத்துக்கள்தான் இந்தியாவில் பழமையான எழுத்துக்கள் என்று நம்பப்பட்டது. ஆனால் ஆதிச்சநல்லூர், கொடுமணல், கீழடி, பொருந்தல் போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் கல்வெட்டுகள் அசோகர் காலத்துக்கும் முந்தியவை என்று நிரூபிக்கப்பட்டன.

பிராமி என்று பெயரிடப்பட்ட எழுத்துக்களுக்கும் முன்பே தமிழ் எழுத்துக்கள் வழக்கிலிருந்தது நிரூபிக்கப்பட்டது தெளிவாகிறது. ஆனால் இந்திய அரசுக்கு தமிழை இந்தியாவின் மூத்த மொழியாக ஏற்றுக்கொள்வதில் என்ன பிரச்னை என்று தெரியவில்லை. அவர்கள் தமிழ் எழுத்துக்களுக்கு தமிழ் பிராமி என்று பெயர் வைத்தார்கள். ஆக பிராமிதான் இந்திய எழுத்துக்களுக்கு மூலம் என்றும், தமிழ் எழுத்துக்கள் பிராமி எழுத்துக்களில் இருந்துதான் உருவாக்கப்பட்டது என்பது போன்ற பிம்பம் உருவாக்கப்பட்டது. தமிழ்பிராமி என்ற சொல்தான் இன்று வரை தமிழக அரசாங்கத்தால் கூட பயன்படுத்தப்படுகிறது என்பது தமிழுக்கு வந்த வேதனை.

Vatteluttu

தமிழ்நாட்டைத் தவிர்த்து வடநாட்டில் எழுதப்பட்ட நூல்களில் கூட தமிழ் எழுத்துக்களைப் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால், கி.மு. 3ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சமவயங்க சூத்ரா (Samavayanga Sutra), பண்ணவன சூத்ரா (Pannavana Sutra) போன்ற சமண மதம் தொடர்பான நூல்களில், அக்காலத்தில் வழக்கிலிருந்த எழுத்துக்களைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. அவற்றில், தமிழி என்று எழுத்துமுறை வழக்கிலிருந்ததாக அந்நூல்கள் குறிப்பிடுகின்றன. அந்த நூல் தமிழி என்றுதான் குறிப்பிடுகிறது, பிராமி என்ற சொல்லாடல் அந்நூல்களில் காணப்படவில்லை. இதிலிருந்து, தமிழுக்குப் பின்னால் பிராமி என்ற வார்த்தை வந்து சேர்ந்தது பிற்காலத்தில்தான் என்பது விளங்கும். இதற்குப் பின்னால் இருப்பது இந்திய அரசியல். தமிழின் பழமையை திட்டமிட்டு அழிக்க நினைக்கும் ஒரு கூட்டத்தின் சதி என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

பிச்சைப்பாத்திரம் 

இந்தியாவின் தொன்மையின் அடையாளமென்றால் தமிழ்தான். ஒட்டுமொத்த இந்தியாவின் மொழி என்றால், ஆரியர்கள் வருகைக்கும்  முன்பிருந்தே  தமிழ்தான். தமிழின் திரிபுகளாக இருந்த சில மொழிகளை சற்று வார்த்தை மாற்றம் செய்து உருவாக்கப்பட்ட மொழிதான் சமஸ்கிருதம். புரியும்படி சொல்வதானால், இன்று தமிழ்நாட்டில் பிராமணர்கள் பேசும் தமிழ் போன்றது என்று சொல்லலாம். இந்தியாவில் அன்றைய காலத்தில் வழக்கிலிருந்த தமிழ், பிராகிருதம், பாளி போன்ற மொழிகளின் கலவைதான் சமஸ்கிருதம். இறந்துவிட்டவர்களை நாம் பொதுவாக தெய்வநிலையை அடைந்துவிட்டார் என்று சொல்வதுண்டு. அந்த வகையில் இறந்து போன சமஸ்கிருதத்தை தெய்வமொழி என்று அழைக்கலாம். நமது ஆராய்ச்சியின் முடிவாக சொல்வதானால், சமஸ்கிருதம், பல  மொழிகளின் தயவில் வாழ்ந்த பிச்சைப்பாத்திரம்.

உதவிய நூல்களும் இணையதளங்களும்

 1. https://en.wikipedia.org/wiki/Early_Indian_epigraphy
 2. https://en.wikipedia.org/wiki/Tamil-Brahmi
 3. https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
 4. https://en.wikipedia.org/wiki/Samavayanga_Sutra
 5. http://www.thehindu.com/news/national/tamil-nadu/palani-excavation-triggers-fresh-debate/article2408091.ece
 6. http://www.thehindu.com/news/national/tamil-nadu/porunthal-excavations-prove-existence-of-indian-scripts-in-5th-century-bc-expert/article2538550.ece
 7. http://www.frontline.in/static/html/fl2720/stories/20101008272006400.htm
 8. http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2016/oct/09/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2578480.html
 9. https://en.wikipedia.org/wiki/Max_M%C3%BCller
 10. https://www.giffordlectures.org/lecturers/friedrich-max-m%C3%BCller
 11. https://www.ancient.eu/Aryan/
 12. https://en.wikipedia.org/wiki/Aryan_race
 13. https://en.wikipedia.org/wiki/Behistun_Inscription
 14. https://mathcs.clarku.edu/huxley/CE7/Aryan.html
 15. http://keetru.com/puthiyakaatru/jun07/muthumohan.php
Advertisement

2 Comments Add yours

 1. Sundar says:

  Excellent. Congrats

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.