யார்/எது கடவுள்?

கடவுள் இல்லை

யார் கடவுள்? என்ற கட்டுரையின் முதல் தலைப்பை கடவுள் இல்லை என்று தொடங்குவது சிறப்பாக இருக்குமென்று நினைக்கிறேன். இது ஒட்டுமொத்தமாக கடவுள் மறுப்பு என்ற நிலையில் இருந்து உதிர்ந்த சொல்லன்று. நான் இந்த உலகில் உள்ள மதங்கள் அனைத்தும் சுட்டிக்காட்டும்  கடவுளை கடவுள் என்று ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படி ஒருவர் இருப்பதாகவும் நம்பவில்லை. அதனால்தான் இந்த ஏடாகூடமான தலைப்பு. அப்படியானால் யார் கடவுள்? மீண்டும் அந்த விடையறியா சரித்திரக் கேள்வி நம் மீது கணையாகப் பாய்கிறது.

பொதுவாக எல்லா மதங்களும் மனிதனை கடவுள்தான் படைத்தார் என்று ஆணித்தரமாக நம்பின, டார்வின் குரங்கிலிருந்துதான் மனிதன் வந்தான் என்று நிரூபிக்கும் வரை. அப்படியானால் குரங்கைப் படைத்தது யார் என்று பின்னோக்கிப் போய்க்கொண்டே இருந்தால், முதலில் தோன்றிய கடல் பாசியில் வந்து நிற்கும். சுமார் 428 கோடி ஆண்டுகளுக்கு முன் நமது பூமியில் தோன்றிய முதல் உயிரினம் என்றால் கடல் பாசி தான். கொஞ்சம் அறிவியல் கலந்து சொல்ல வேண்டுமானால் “சயனோபாக்டீரியா (Cyanobacteria)”. அதுதான் அந்த கடல் பாசியின் அறிவியல் பெயர். முதலில் தோன்றிய பாசி முதல் இன்று வரை தோன்றிய உயிரினங்கள் வரை, படிப்படியாக நடந்த உயிரியல் மாற்றங்களை பொதுவாக பரிணாம வளர்ச்சி என்று அறிவியல் உலகம் அழைக்கிறது. பரிணாம வளர்ச்சி என்று உலகில் தோன்றிய முதல் உயிரினம் வரை சமீபத்தில் உருவான மனிதன் வரை விஞ்ஞானம் புட்டுப்புட்டு வைத்த பின்னர் ஆன்மீக உலகம் சற்று ஆடித்தான் போனது.

Darvin

அமீபா முதல் ஆழ்கடல் திமிங்கலம் வரை கடவுள்தான் படைத்தார் என்று நம்பிக்கொண்டிருந்த ஒரு கூட்டத்துக்கு, பரிணாம வளர்ச்சி என்ற பெயரில், டார்வின் வேட்டு வைத்தார் என்பது உண்மைதான். ஏனென்றால், அதற்கு முன்புவரை தசாவதாரம் என்று கடவுள் எடுத்த அவதாரங்களை சிலாகித்துக் கொண்டிருந்தவர்கள், கூர்மாவதாரம் என்பது கடலில்தான் முதல் உயிர் தோன்றியது என்பதைக் குறிக்கிறது என்று தங்களை டார்வினுக்கு முன்னோடியாக காட்டிக்கொள்ள முனைந்தார்கள். இதுவே அறிவியலுக்குக்  கிடைத்த மிகப்பெரிய வெற்றிதான். ஏனென்றால் மறைமுகமாக அவர்கள் டார்வினை ஏற்றுக்கொண்டார்கள் என்றுதான் அர்த்தம். அப்படியே டார்வினுக்கு முன்னரே நாங்கள்தான் பரிணாம வளர்ச்சியை உலகுக்கே அறிமுகப்படுத்தினோம் என்று மார்தட்டிக்கொண்டால், அந்த அறிவியல் உண்மைகளை ஏன் உலகுக்கு நிரூபிக்கக்கூடாது. அது உண்மையாக இருந்தால்தானே நிரூபிப்பதற்கு. டார்வின் மூடநம்பிக்கைகளை உடைத்தெறிந்ததும், அதுவரை ஆன்மீகவாதிகள் சொல்லிவைத்த கதைகள் மீது மக்களுக்கு அவநம்பிக்கை வராமல் காக்க, அவர்களுக்கு ஒரு அறிவியல் சாயம் தேவைப்பட்டது. அந்த சாயத்தையும் அவர்கள் டார்வினடமே வாங்கும் நிலை ஏற்பட்டது என்பது அறிவியல் வளர்ச்சியின் குறியீடு.

கடவுள் அதைப் படைத்தார், இதைப்படைத்தார் என்று பட்டியலிட்ட மதங்கள், அதன் பின்னால் இருக்கும் அறிவியல் உண்மைகள் புரிந்ததும், வாய் திறக்கவில்லை. ஆக, நமது கற்பனைக்கு அப்பாற்பட்ட எல்லாவற்றையும் கடவுள் படைத்தார் என்று எப்போதும் சொல்லி வந்திருக்கிறோம். நமது கற்பனைக்கு எட்டாதது பல அறிவியல் மேதைகளுக்கு எட்டி விடுகிறது, அங்கு கடவுள் காணாமல் போய் விடுகிறார். உண்மை வெட்ட வெளிச்சமானதும் அங்கு அறிவியலுக்கும், அறிவுக்கும்தான் வேலை, கடவுளுக்கு வேலை இல்லை. கடவுளுக்கு வேலையில்லை என்றாலும் நாம் இந்த கட்டுரையில் கடவுளை ஒட்டுமொத்தமாக மறுக்கப் போவதில்லை. நான் ஆன்மீகப் பாதையில் இறங்கி விட்டேனென்று எண்ண வேண்டாம். இந்த கட்டுரையில், நான் நம்பும் கடவுள் எது என்பதை எனது புரிதலின் வடிவில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதற்கும் இந்த உலகத்தில் வணங்கப்படும் கடவுள்களுக்கும் ஒரு தொடர்பும் இருக்காது என்பது நிச்சயம்.

இரண்டு கோணங்கள்

புரியாத புதிர்கள், அறிவியல் புகாத இடங்கள்,  எதிர்பாராத நிகழ்வுகள், நம் அறிவுக்கு எட்டாத தகவல்கள், நம்மால் இதற்கு மேல் ஒன்று செய்ய முடியாது என்ற மனநிலை இவற்றில்தான் இன்றும் கடவுள் வாழ்ந்து கொண்டிருக்கிறார். 100 ஆண்டுகளுக்கு முன் காலரா வந்தாலே மக்கள் இறந்து போனார்கள், காலரா குணமாக கோயிலுக்குப் போனார்கள், கடவுளைக் கும்பிட்டார்கள். இன்று காலரா ஏன் வருகிறது என்று புரிந்து கொண்டோம். அதற்கு மருந்தும் வந்துவிட்டது. இன்று காலரா வந்தால், யார் கோயிலுக்குப் போகிறார்கள், அம்மை வந்தால் யார் கோயிலுக்குப் போகிறார்கள். மருத்துவமனைக்குத்தான் போகிறார்கள். இப்போதும் கோயிலுக்குப்   போகிறார்கள், மருத்துவர்கள் கையை விரிக்கும்போது, இறந்த பின் சொர்க்கமா, நரகமா என்ற பயத்தில் போகிறார்கள். நாம் தெளிவடைந்த தகவல்களுக்குக் கடவுளைத் தேடுவதில்லை என்பதுதான் செய்தி.

கடவுள் யார்? எது? என்று இரண்டு கேள்விகளுக்குள் தொக்கி நிற்கும் ஒரு பதிலாக கடவுளை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. ஒருவரைக் குறிக்க ஏன் இரண்டு கேள்விகள்? கடவுளை உருவமாக வழிபடும் மதங்களும் சரி, உருவமில்லாமல் வழிபடும் மதங்களும் சரி, கடவுளை ஒரு உயிரோட்டமுள்ள ஒரு வடிவாகவேப் பார்க்கிறார்கள். கிட்டத்தட்ட இறப்பே இல்லாத ஒரு மனிதனைப் போல. கடவுளை ஒரு பொருளாகப் பார்க்கும் மதங்கள் எதுவும் இல்லை என்றே சொல்லலாம். அந்த வகையில், சில இலக்கணங்களையும், மரபுகளையும் மீறி கடவுள் ஏன் ஒரு பொருளாக இருக்கக் கூடாது? என்கிற பார்வையையும் சேர்த்தே நாம் ஆராய இருக்கிறோம்.

இரண்டு கேள்விகளுக்குள் வாழும் ஒரு விடையாக இருக்கிறார் கடவுள். அதேபோல், இரண்டு கோணங்களில் நாம் அணுக வேண்டியிருக்கிறது. இரண்டு கோணங்களைப் புரிந்து கொள்ள ஒரு சிறு கதை. ஒருவர் அவர் நண்பரைப் பார்த்து, தேவாங்கு என்று திட்டினார். அதற்கு அந்த நண்பர் பேசாமல் சென்றுவிட்டார். அவர் மீது கோபப்படவில்லை. ஒருமாதம் கழித்து இருவரும் தற்செயலாக சந்தித்தபோது, என்னை எப்படி நீ தேவாங்கு என்று சொல்லலாம் என்று நையப்புடைத்து விட்டார். அதற்கு ஏனப்பா, ஒரு மாதம் கழித்து வந்து அடிக்கிறாய் என்று கேட்டார். அதற்கு நண்பர் சொன்னார், நான் நேற்றுதான் தேவாங்கை நேரில் பார்த்தேனென்று. இங்கே தேவாங்கு ஒன்றுதான், ஆனால் அதை நேரில் பார்த்தவர் அனுபவம் வேறு, பார்க்காதவர் அனுபவம் வேறு. அதே போல் கடவுளை உணர்ந்தவர்கள் சொன்ன கடவுள் என்பது வேறு, உணராதவர்கள் சொன்ன கடவுள் வேறு. உணராதவரையில் அது கடவுள் இல்லை. அந்த வகையில், நாம் கடவுள் என்கிற தத்துவத்தை இரண்டு கோணங்களில் அணுக இருக்கிறோம்.

1) மனிதன் படைத்த கடவுள்
2) மனிதனைப் படைத்த கடவுள்

1) மனிதன் படைத்த கடவுள்

மனிதன் தன்னுடைய நோக்கங்கள் நிறைவேறவோ, தனது இனம் வாழவோ, தானாக பல கடவுளை உருவாக்கிக் கொண்டான். ஏன் அப்படி ஒரு கடவுள் தேவைப்பட்டார் என்று நாம் ஆராய இருக்கிறோம். அதே நேரம், தனது சுயநலத்துக்காக உருவாக்கிய அந்த கடவுள்கள் எல்லாம் கடவுள் என்பதையே உணராமல் உருவாக்கப்பட்டவை என்பதால் அதை மறுக்கவும் வேண்டும். ஆதிகாலம் தொட்டு இன்று வரை மனிதன் கடவுளைப் படைத்ததற்குப்  பல காரணங்கள் இருக்கலாம். நாம் அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு பட்டியலிடலாம்.

பயம்
இயற்கை
விசும்பு அல்லது வானம்
ஆன்மா

இவை ஒவ்வொன்றையும் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பயம்

மனித சமுதாயம் உருவாகிய போது, அந்த இனம் குரங்கை விட சற்று அறிவானது. அவ்வளவுதான். அது பகுத்தறிவு நம்முள் முளைக்கத் தொடங்கிய காலம். நம் முன்னோர் இயற்கையின் ஆற்றலைக் கண்டு அலறி ஓடிய காலம். காடு தீப்பிடித்து எரிந்தது, ஓடினான். மின்னல் வெட்டியது ஓடினான். மழை பெய்தது, ஓடினான். காட்டுக்குள் விதவிதமான சத்தங்கள் மிரட்டின, ஓடினான். ஓடினான் ஓடினான், பராசக்தியில் சிவாஜியின் தங்கை போல ஓடிக்கொண்டே இருந்தான். ஐயா சாமி என்னை விட்டு விடுங்கள் என்று, அம்மா காலில் விழும் அமைச்சர்கள் போல பணிந்தால் இயற்கை நம்மை ஒன்றும் செய்யாது என்று நம்பினார்கள். அந்த பயம்தான் முதல் கடவுள். கடவுள் மனிதனை உருவாக்கினாரா என்று புரியவில்லை. ஆனால் மனிதனுக்குள் இருக்கும் பயம்தான் முதலில் கடவுளை உருவாக்கியது. பயம்தான் பேயையும் உருவாக்கியது.

பயம் பேயானது. பயத்திலிருந்து காப்பாற்றுங்கள் என்ற வேண்டுதல் கடவுளானது. வேண்டுதல் பொய்யாகலாம். ஆனால் பயம் பொய்யில்லை. கடவுளைப் பார்த்தேன் என்று சொல்லிப் பாருங்கள், எத்தனை பேர் நம்புவார்கள்? ஆனால் பேயைப் பார்த்தேன் என்று சொல்லுங்கள் ஊரே நம்பும். கடவுள், பேய் என்ற இரண்டுமே ஒரு நூலின் இருமுனைகள்தான். இரண்டுக்குமே மூலாதாரம் பயம்தான். நமது குரங்கு தாத்தாவை மிரட்டிய பயம்தான் முதல் கடவுள், முதல் பேய். நாம் பேயை விட்டுவிடுவோம். ஏனென்றால் கடவுள் இல்லை என்று கூட நம்ப வைத்து விடலாம். பேய் இல்லை என்று நம்ப வைப்பது மிகவும் கடினம். அதனால் நாம் பாவப்பட்ட கடவுளைப் பற்றி மட்டும் பார்க்கலாம்.

இயற்கை

குகைகளுக்குள்ளே மனித இனத்துக்கு கிடைத்த கொஞ்ச நேர ஓய்வுதான் அவனை சிந்திக்க வைத்தது. சிந்திக்கத் துவங்கியவுடன் மூளையில் ப்ரீஃப்ரண்டல் கார்டெக்ஸ் (Prefrontal Cortex) வளர்ந்தது. மூளை வளர்ந்ததும் மனிதனின் சிந்தனை பகுத்தறிவை வளர்த்தது. மனிதர்கள் பகுத்தறிவைப் பயன்படுத்தி, தாங்கள்  பயந்து ஓடிய பொருட்களைப் பட்டியிலிட்டுப் பார்த்தார்கள். அவை, நிலம், நீர், நெருப்பு, காற்று, விசும்பு என்று ஐம்பூதங்களாக இருந்தன. விளைவு , ஐம்பூதங்களுக்கும் கடவுள்கள் முளைத்தார்கள். வாயு பகவான், வருண பகவான், சூரிய பகவான் என்று பார்த்த இடத்துக்கெல்லாம் ஒரு பகவான் முளைத்தார்.  இயற்கை வழிபாடு துவங்கிய போதே நடுகல், கடவுள் சிலைகள் என்று உருவ வழிபாடும் சேர்ந்தே துவங்கி விட்டது. என்னதான் இயற்கையைக் கடவுளாகப் பார்த்தாலும், ஐம்பூதங்களையும் உரசிப்பார்க்க மனிதன் தவறவில்லை.

3603538_1424381813460_4f8891ad_m

தோண்ட தோண்ட, நிலம் கைக்குள் வந்தது. தோணி கண்டுபிடித்ததும் நீர் கைக்குள் வந்தது. சிக்கி முக்கி கல்லைக் கொண்டு தீயை உருவாக்கியதும் நெருப்பு நம் முன் கைகட்டி நின்றது. சுவாசத்தை கவனிக்கத் துவங்கியதும் காற்றும் புரியத் துவங்கியது. நாம் ஐம்பூதங்களின் ஆற்றலை முழுமையாக உணர்ந்து கொண்டோம். அவற்றைக் கையாளக் கற்றுக்கொண்டோம். நிலம், நீர், நெருப்பு, காற்று போன்ற நான்கு பூதங்களும் நமது அறிவுக்கு எட்டியது. நமது அறிவுக்குப் புரிந்தபின் அவற்றை கடவுள் என்று ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பொதுவாக மனிதர்களுக்குக் கிடையாது. புரியும் முன் கடவுள், தெளிந்த பின் அதன் பெயர் இயற்கை. இதுதான் மனிதனின் கோட்பாடு. ஆனால், ஐம்பூதங்களில் விசும்பு என்னும் வானம் மட்டும் அவனுக்கு ஆச்சர்யமூட்டுவதாவே இருந்தது. அதை மட்டும் முழுதாக படிக்க முடியவில்லை.

விசும்பு

ஐம்பூதங்களின் கலவைதான் உடல் என்றாலும், உயிர் என்பது விசும்பின் ஆற்றல் என்று மனிதன் நம்பினான். இன்று வரை மனிதனை மிரட்டிக்கொண்டிருப்பது வானம்தான். அந்த எல்லையில்லா இடத்துக்குள்  நாம் ஆராய்ந்த தொலைவு என்று பார்த்தால் நாம் ஒரு புள்ளி கூட நகரவில்லை என்பதுதான் உண்மை. மனிதனின் அவிழ்க்க முடியாத மர்மங்கள் இன்றுவரை அந்த விசும்பினில்தான் புதைந்து கிடக்கிறது. வானத்தின் ஒரு துகள்தான் நமது உடலில் உயிராக தேங்கியிருக்கிறதென்பது அனைத்து மதங்களின் நம்பிக்கை. அதனால் ஆகாயமென்பது கடவுள்களின் கூடாரமாகவோ, அதுவே  கடவுளாகவோ பல மதங்களில் காணப்படுகிறது. எல்லையற்று இருப்பதால், கடவுள் வானத்தில்தான் எங்கோ இருக்கிறாரென்று விஞ்ஞானிகளுக்கு சவால் விடுவது ஆன்மீகவாதிகளுக்கு ஒரு வசதி கூட. அவர்கள் வானம் முழுவதும் தேடுவதென்பது இயலாத காரியம். ஆகையால் விஞ்ஞானிகளையும் மிரட்டும் வானம், ஆன்மீகவாதிகளுக்கு என்றுமே துணைநிற்கும் கூடாரம் என்பதில் சந்தேகமில்லை.

VBK-VENUS

ஆன்மா

மண்ணையும், விண்ணையும் அறிந்த  பின்தான் மனிதன் தன்னை உணர்ந்தான். பரிணாம வளர்ச்சியின் உச்சமே தன்னை அறிதல்தான். தன்னை அறிதலின் உச்சம் உயிரை அறிதல்தான். உயிரை அறிதலின் உச்சம் உற்றவனை அறிதல். அதாவது கடவுளை அறிதல். புத்த மதம் ஒன்றைத் தவிர, உலகில் உள்ள அனைத்து மதங்களும் ஆன்மாவை ஏற்றுக் கொள்கின்றன. ஆன்மா வேறு, கடவுள் வேறு என்று சில தத்துவங்கள் சொல்கின்றன. ஆன்மாவும், கடவுளும் ஒன்றுதான் என்று சில தத்துவங்கள் சொல்கின்றன. ஆன்மீகம் என்ற சொல்லே ஆன்மாவிலிருந்து பிறந்ததுதான். கடவுளின் ஒரு துளிதான் ஆன்மா. அதனால் ஆன்மாதான் கடவுளின் உறைவிடம் என்கின்றன மதங்கள்.

huitième initiation majeure, le saut dans l_infini

மனிதன் படைத்த கடவுள்களில் மனிதனே  விளங்கிக்  கொள்ள முடியாமல், முழுவதுமாக விளக்க முடியாமல் இருப்பது இரண்டு. ஒன்று விசும்பு, இன்னொன்று ஆன்மா. நாம் இந்த இரண்டையும் எளிதாக புறந்தள்ளி விட முடியாது. கண்ணுக்குத் தெரிவதில்லை என்றாலும் உயிரோடுதான் இருக்கிறோம் என்று நம்மால் உணர முடிகிறது. வசப்படவில்லை என்றாலும் வானம் கைகளுக்கு எட்டும் தொலைவில்தான் இருக்கிறது. மனிதனைப் படைத்த கடவுள் பற்றி பார்க்கும்போது இவை தானாக விளங்கும்.

மனிதன் படைத்த கடவுள் உண்மைதானா

பயம், இயற்கை எல்லாம் கடவுளாக பார்க்கப்பட்டாலும், அறிவியல் தெளிவு பிறக்கும்போது அதன் பின்னால் மறைந்திருக்கும் கடவுள் மறைந்து போகிறார். பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்று சொன்னதற்கே, கடவுளை அவமதித்து விட்டானென்று கலிலீயோ (Galileo) 8 ஆண்டுகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு, பலவகைகளில் துன்புறுத்தப்பட்டுக் கொல்லப்பட்டார். இது போன்ற மூட நம்பிக்கைகளில்தான் மனிதன் படைத்த கடவுள் வாழ்ந்து கொண்டிருந்தார். இன்று பூமி சூரியனை சுற்றுகிறதென்பது அறிவியல். பூமிதான் பிரபஞ்ச மையம் என்று மதவாதிகள் காதில் புளுகிவிட்டுப் போன அந்த கடவுளை இப்போது காணவில்லை.

அதிசயங்கள், அற்புதங்கள், அவதாரங்கள், அசரீரி எல்லாம் தொழில்நுட்பம் வளர்ந்த பின் எங்கும் நடந்ததாகத் தெரியவில்லை. CCTV போன்ற புகைப்படக்கருவிகள் வந்ததும் கடவுளுக்குக் கூச்சம் வந்துவிட்டதோ என்னவோ. கடவுள் பன்றி அவதாரம் எடுத்து பூமி உருண்டையை கடலுக்குள்ளே போய் தூக்கி வருவது, வாய்க்குள்ளே உலகம் தெரிவது, தேவ தூதர்கள் வானத்தில் பறந்து வருவது, கன்னி கர்ப்பமாவது, இதெல்லாம் அறிவியல் வளராத காலங்களில் மட்டும் நிகழந்ததாக சொல்லப்படுகிறது. இன்று ஏன் இது போன்ற அதிசயங்கள், ஆச்சர்யங்கள் எல்லாம் நடக்கவில்லை. அப்படி ஏதும் நடந்தால் தோலுரித்துக் காட்ட இப்போது அறிவியல் உபகரணங்கள் இருக்கின்றன. ஆனால் இறங்கி வர கடவுள்தான் ஆயத்தமாக இல்லை.

நம் மீது வைக்கப்படும் அடுத்த அறிவுப்பூர்வமான கேள்வி, படைப்பவன் இல்லாமல் பொருட்கள் எப்படி வந்திருக்கும்? அந்த கேள்வியை நாம் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் ஒரு கேள்வி, எல்லாவற்றுக்கும் படைப்பவன் வேண்டுமென்றால், கடவுளைப் படைத்தவன் யார்? எல்லாவற்றுக்கும் படைப்பவன் இருந்தேத் தீருமென்றால், கடவுளைப் படைக்கவும் யாராவது இருக்க வேண்டுமல்லவா? என்பது ஆன்மீகவாதிகளுக்கு ஒரு பதில் கேள்வி, பதில் தெரிந்தால் சொல்லவும். ஒருவேளை கடவுள் மட்டும் விதிவிலக்காக, யாரும் படைக்காமல் என்றுமே நிரந்தரமாக இருக்கிறார் என்று வைத்துக்கொண்டால், யாரும் படைக்காமல் இந்த பிரபஞ்சமும் நிரந்தரமாக என்றும் இருக்கிறதென்று ஏன் சொல்லக்கூடாது? அறிவியலால்  விடைகூற முடியாத கேள்விகள் நிறைய இருக்கின்றன. அதற்காக விடை தெரியாத கேள்விகளில் எல்லாம் இறைவன் இருக்கிறான் என்று எத்தனை காலம் மக்களை ஏமாற்றுவார்கள் இந்த மதவாதிகள்.

கடவுள்தான் அனைத்துக்கும் காரணம் என்றால், மிகப்பெரிய இயற்கைப் பேரழிவுகள், இனப்படுகொலைகள், கொலைகள், கொள்ளைகள், கற்பழிப்புகள் இவை எல்லாவற்றுக்கும் கடவுள்தான் காரணமாக இருக்க வேண்டுமல்லவா. கடவுளின் உறைவிடமான வழிபாட்டுத் தலங்களுக்கு வழிபட வந்த பக்தர்களே பல தருணங்களில் இறந்து போயிருக்கிறார்கள், அதற்கும் கடவுள்தான் காரணமா? இதையெல்லாம் ஏற்றுக்கொண்டால் கடவுள் வில்லனாகி விடுவார். உலகில் மதங்கள் என்ற அமைப்பே இல்லாமல் போய்விடும். அதனால் கடவுள் என்பவர், நல்ல செயல்களை மட்டுமே செய்பவராக காட்டப்பட வேண்டும் என்ற தேவை எழுந்தது. அதனால்  கடவுளுக்கு எதிராக  சாத்தான் என்ற கற்பனைக் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது. கடவுளே கற்பனை எனும்போது, கற்பனைக்கே எதிர் துருவம் என்ற ஒன்று இங்குதான் வாழ்கிறது சாத்தான் என்ற பெயரில். கடவுளை மறுக்க வேண்டுமானால், கடவுளைத்தான் மறுக்க வேண்டுமென்றில்லை. சாத்தானை மறுத்தாலே போதும், அதோடு சேர்ந்து கடவுளும் மறைந்து போவார்.

இப்படி மனிதன் படைத்த கடவுள் என்ற பிம்பத்தை உடைத்துக் கொண்டே வந்தால், கடவுள் மறுப்பாளர்கள் முன் தொக்கி நிற்கும் கடைசிக் கேள்வி இதுதான். நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறதென்பதை ஏற்றுக்கொள்கிறாயா? என்பதுதான். அந்த சக்தி என்னவென்று கொஞ்சம் பாப்போம். அந்த கடைசிக் கேள்விதான் நமது உண்மைக் கடவுளின் துவக்கம்.

2) மனிதனைப் படைத்த கடவுள்

இந்த பூமியில் வாழும் உயிர்களில் தன்னை உணர்ந்து, தன்னைப் படைத்தவனையும் உணரும் ஆற்றல் கொண்ட ஒரே உயிரினம் மனித இனம்தான். நாம் பூமியில் வாழும் உயிரினங்களை மட்டும் கணக்கில் கொள்ளலாம். இந்த பிரபஞ்சத்தில், பிற கோள்களில் உயிர்கள் வாழ்கிறதா என்கிற தகவல் நமக்கு இன்னும் தெரியவில்லை. அதனால் தற்போது பூமியோடு நிறுத்திக் கொள்வோம். பிரபஞ்சத்துக்கு சற்று நேரம் கழித்துப் போகலாம். இந்த பூமி முதல், ஒட்டுமொத்த அண்ட சராசங்களும் யாரும் படைத்ததனால் வந்ததா, அல்லது என்றுமே உள்ளதா, இது போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்குமானால் அதுதான் அண்ட சராசரங்கள் முதல் மனிதன் வரை படைத்தக் கடவுள் என்று ஏற்றுக்கொள்ளலாம்.

ஆன்மா என்பது விசும்பின் ஒரு துளி. அண்டத்தில் உள்ளது பிண்டத்தில். பிண்டத்தில் இருக்கும் ஆன்மாவைப் பார்த்து விட்டோம். இனி அண்டத்தில் இருக்கும் கடவுளைத் தேட வேண்டும். விசும்புக்குள் நுழைந்தால்தான் உயிரின் மூலத்தைக் கண்டறிய முடியும். விசும்புக்குள் நுழைய வேண்டிய தருணம் இது. ஒரு விண்வெளிப் பயணத்துக்கு ஆயத்தமாக இருங்கள். விண்வெளியைப் பற்றி ஆர்வம் இல்லாதவர்களுக்கு பல தகல்வல்கள் மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தலாம்.

அண்ட சராசரங்கள்

நமது பூமி எங்கிருந்து உண்டானது? சூரியன் வெடித்தபோது சிதறிய ஒரு சிறு கல்தான் பூமி. சூரியன்? சூரியன் பால்வழித்திரளின் (Milky way Galaxy) ஒரு அங்கம். சரி பால்வழித்திரள் எவ்வளவு பெரிது என்று தெரியுமா? அதற்கு முன் சூரிய ஒளி எவ்வளவு வேகத்தில் பயணிக்கும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். சூரிய ஒளி ஒரு நொடியில் 3 லட்சம் கிலோமீட்டர் தொலைவுக்கு சென்றுவிடும். சூரிய ஒளி ஒரு ஆண்டு பயணித்தால் எவ்வளவு தூரம் என்பதை கற்பனை செய்வது மிகக் கடினம். அதுதான் ஒரு ஒளியாண்டு. பால்வழித்திரள் எவ்வளவு பெரியதென்று பார்க்கும் முன்னதாக, நமது சூரியன் பால்வழித்திரளை சுற்றி வர எவ்வளவு ஆண்டுகள் ஆகுமென்று நினைக்கிறீர்கள். மிரள வேண்டாம். 25 கோடி ஆண்டுகள். ஆம், சூரியன் நமது பால்வழித்திரளை சுற்றி வர 25 கோடி ஆண்டுகள் ஆகும். பால்வழித்திரளில் நமது சூரியனைப் போல இன்னும் நிறைய விண்மீன்கள் இருக்கின்றன. எவ்வளவென்று தெரியுமா. 25,000 கோடி முதல் 40,000 கோடி விண்மீன்கள் இருக்கின்றன என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

Far galaxy

இன்னும் அதிர்ச்சிகள் முடியவில்லை. நாம் இன்னும் பால்வழித்திரள் எவ்வளவு பெரிதென்று பார்க்கவேயில்லை. சூரிய ஒளி, ஒரு ஆண்டு பயணிக்கும் தூரம் ஒரு ஒளியாண்டு என்று பார்த்தோம். அந்த சூரிய ஒளி 1 லட்சம் ஆண்டுகள் பயணித்தால்தான் நமது பால்வழித்திரளின் எல்லையை அடைய முடியும். ஒரு நொடியில் 3 லட்சம் கிலோமீட்டர்கள் பயணிக்கும் சூரிய ஒளி, 1 லட்சம் ஆண்டுகள் பயணித்தால், அதன் தொலைவை நம்மால் கற்பனை செய்ய முடிகிறதா. நமது பால்வழித்திரள் அவ்வளவு பெரியது. நீங்கள் அதிர்ச்சியின் எல்லையில் இருக்கலாம், ஆனால் உங்கள் எல்லை இன்னும் முடியவில்லை. நமது சூரியக்குடும்பம் இருக்கும் இந்த பால்வழித்திரள், ஒரு சிறிய அண்டம் (Galaxy). மன்னிக்கவும் நமது பால்வழித்திரள் சற்று சிறியதுதான். சிறியது என்று நாம் சொல்லும் பால்வழித்திரளின் அளவையே நம்மால் கற்பனை செய்ய முடியவில்லை. அப்படியானால் பெரியவை எவ்வளவு பெரிதாக இருக்கும்? மிரட்சியிலிருந்து மீள்வதற்குள் ஓட்டுமொத்த பேரண்டம் (Universe) எவ்வளவு பெரிதாக இருக்குமென்று பார்த்து விடலாம்.

இந்த பேரண்டத்தில் மொத்தமாக 10,000 கோடி முதல் 40,000 கோடி அண்டங்கள் (Galaxies) இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள். ஒரே ஒரு சிறிய பால்வழித்திரளைக் கடக்க சூரிய ஒளிக்கு ஒரு லட்சம் ஆண்டுகள் ஆகுமென்றால், 10,000 முதல் 40,000 கோடி அண்டங்களைக் கடக்க எத்தனை கோடி ஆண்டுகள் ஆகும். நாம் விஞ்ஞானத்தோடு வீம்பாக விளையாடி விட்டோம். அது புலிவாலைப் பிடித்த கதை. நாம் விட்டாலும் அது நம்மை விடாது. நாம் இந்த பேரண்டமும் எப்போது உருவானதென்று ஆராய வேண்டும். நாம் பெரிய அளவுக்கு மூளையைப் பயன்படுத்தத் தேவையில்லை. விஞ்ஞானிகள் ஏற்கனவே கண்டுபிடித்து சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள்.

கருந்துளை (Black Holes)

நாம் பார்த்த இந்த அண்ட சராசரங்களும் தோன்றி கிட்டத்தட்ட 1380 கோடி ஆண்டுகள் ஆகிறது. அப்படியானால் 1380 கோடி ஆண்டுகளுக்கு முன் என்ன இருந்தது? ஒரு கருந்துளை (Black Hole). கருந்துளை என்றால் ஏதோ சாதாரணமாக எண்ணி விடாதீர்கள். அந்த கருந்துளை வெடித்து சிதறியதால்தான் இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சமே தோன்றியது. அப்படியானால், அந்த கருந்துளைக்குள் அடங்கியிருந்த ஆற்றலை கற்பனை செய்து கொள்ளுங்கள். தீபாவளிக்கு வெடி வெடித்தது போல் அந்த கருந்துளை வெடித்து சிதறியதில்தான் நமது அண்டமும், நாமும் உருவாகியிருக்கிறோம். அது பெருவெடிப்புக் கொள்கை (Big-bang Theory) என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு அண்டத்தின் (Galaxy) மையத்திலும் கருந்துளைதான் இருக்கிறது. நமது பாலவழிதிரளின் மையத்திலும் கருந்துளைதான் இருக்கிறது. 40,000 கோடி சூரியன்களையும் இழுத்துப் பிடித்துக்கொண்டிருப்பது அதுதான். ஒட்டுமொத்த பிரபஞ்சத்திலும் விரவிக்கிடப்பது அதுதான். அந்த கருந்துளை இல்லையென்றால் இந்த பிரபஞ்சமே இல்லை.

A stellar-mass black hole in orbit with a companion star located about 6,000 light years from Earth.

இப்போது நமது பிரபஞ்சம் விரிவடைகிறது என்று சொல்கிறார்கள். அது ஒரு அளவுக்கு மேல் விரிவடையும்போது, ஒட்டுமொத்த பிரபஞ்சமும் மீண்டும் ஒரு புள்ளியில் இணைந்து ஒரு கருந்துளையாக மாறும். அது பெரு இணைப்புக் கொள்கை (Big-Crush Theory) என்று அழைக்கப்படுகிறது. அதன்பின் மீண்டும் எப்போது வெடிக்கும், வெடித்தால் மீண்டும் நம் பூமியில் இருப்பது போல உயிரினங்கள் தோன்றுமா என்றெல்லாம் யாரும் சொல்ல முடியாது. அது ஒரு இயற்கை நிகழ்வு. அவ்வளவுதான். இதற்கு முன்னர் பலமுறை இந்த பெருவெடிப்பு நிகழ்ந்திருக்கிறதா என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதுதான் கடவுள்

சரி, ஒரு கருந்துளை இருக்கட்டும், வெடிக்கட்டும். அதனால் என்ன என்று கேட்கிறீர்களா. அந்த கருந்துளைதான் கடவுள் என்று  நான் நம்புகிறேன். சூன்யம், பூஜ்ஜியத்துக்குள் ராஜ்ஜியம், உருவமில்லாத இறைவன், நான்கு பரிமாணங்களைக் கடந்த இறைவன், எல்லாம் வல்ல இறைவன், தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான், இப்படி கடவுளுக்கு நாம் கூறும் அனைத்து உவமைகளுக்கும் பொருத்தமாக இருக்கும் ஒன்றே ஒன்று  இந்த பிரபஞ்சத்தில் அந்த கருந்துளை மட்டும்தான். அந்த கருத்துளைக்கு அறிவியல் உலகம் வைத்திருக்கும் இன்னொரு பெயர் ஒருமை (Singularity). அந்த ஒருமையை யாரும் உருவாக்கவில்லை. அது என்றென்றும் இருக்கிறது. ஆனால் அந்த ஒன்றுமில்லாத ஒருமையில் இருந்துதான் அனைத்தும் வந்தது. பிரபஞ்சம் மீண்டும் ஒன்றாக இணையும்போது, நாம் வந்த இடத்துக்கு போய் விடுவோம். அதற்கு இன்னும் பலகோடி ஆண்டுகள் ஆகலாம், அதைப் பார்க்க நாம் இருக்க மாட்டோம்.

கடவுள் என்று ஒருவர் எங்கோ தங்க நாற்காலியில் அமர்ந்து கொண்டு உடம்பெல்லாம் தங்கமும் வைரமும் அணிந்து கொண்டு, நீங்கள் இறந்த பின், நீ சொர்க்கத்துக்கு போ, நீ நரகத்துக்கு போ, என்று சொல்லுவார் என்று நம்பிக்கொண்டிருந்தால் மன்னிக்கவும். அப்படி யாரும் இல்லை. கருந்துளை வெடித்தது, நாம் வந்தோம். அது ஒரு நாள் மீண்டும் இணையும் இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சமே அந்த கருந்துளைக்குள் ஒரு புள்ளியாக மாறிப்போகும். அவ்வளவுதான். இது இயற்கை. யார் கடவுள் என்ற கேள்வி இங்கு அர்த்தமற்றதாகிறது. எது கடவுள் என்ற கேள்விக்கு நான் முன்வைக்கும் விடை, கருந்துளை.

அதெப்படி ஒரு பொருளைக் கடவுளாக ஏற்றுக்கொள்ள முடியும். அது அவரவர் விருப்பம். உங்களை, நம்புங்கள் அல்லது ஏற்றுக் கொள்ளுங்கள் என்று நான் சொல்லவில்லை. அஷ்டாட்சரத்தை அறிந்தவுடன், அதை உலக மக்கள் அறியவேண்டுமென்று கோயில் கோபுரத்தின் மீது ஏறி நின்று ஊருக்கே உரக்க சொன்ன ராமானுஜர் போல எனக்குள் உணர்ந்த உண்மையை ஊருக்கு சொல்ல வேண்டுமென்ற ஒரு உந்துதல் எனை சொல்ல வேண்டுமென்று தூண்டியது. அதன் விளைவுதான் இந்த கட்டுரை. இதன்மூலம் கடவுள் என்ற பொருளின் மீது உங்களுக்கு ஒரு அறிவியல் பார்வை பிறக்குமானால் அதுவே இந்த கட்டுரையின் வெற்றி.

உதவிய நூல்களும்  இணையத்தளங்களும்

 1. https://science.howstuffworks.com/dictionary/astronomy-terms/before-big-bang.htm
 2. https://www.express.co.uk/news/science/720860/beginning-of-universe-scientists-discover-what-existed-before
 3. https://www.livescience.com/61914-stephen-hawking-neil-degrasse-tyson-beginning-of-time.html
 4. https://en.wikipedia.org/wiki/Cyanobacteria
Advertisement

4 Comments Add yours

 1. தங்களது படைப்பு வரிசையில் மற்றுமொறு அருமையான தொகுப்பு. கண்மூடித்தனமான கடவுள் மறுப்பு என்ற வரிசையில் நில்லாமல் கடவுள் தன்மையை தேடுதல் மனப்பான்மை என்ற தளத்தில் நின்று அத்துடன் அறிவியலின் துணையை சேர்த்திருப்பது பாராட்ட வேண்டிய விசயம்.
  கடவுள் விருப்பு, மறுப்பு என்பது தனிமனித உரிமை. அவரவர்களது பாணியிலான பயணத்தில் இந்த பதிவு கடவுள் மறுப்பாளர்களுக்கு நல்ல பரிசு..
  வாழ்த்துக்கள்.
  நாமிருக்கும் பேரண்டமோ, புவியோ, வாழும் உயிரனங்களோ அனைத்தின் மூலமும் அணுவிலிருந்துதான் தொடங்குகிறது. ஒருபக்கம் கலிலியோ வானிலை அறிவியலின் அரிச்சுவடியை கையில் எடுத்த நேரத்தில் இங்கு நமது
  சித்த பெருமக்கள் அந்த அறிவியலின்
  கரை கடந்து விட்டதையும், அதை பஞ்சாங்கம், சோதிடம் என்று வரையறுத்து வைத்ததயும் யாரும் மறுக்க இயலாது.
  பகவத் கீதையின் படைப்பு விதிமுறைகளை ஐன்ஸ்டீன் முதல் புகழ்பெற்ற விஞ்ஞானிகள் வரை அதிசயித்து சொல்லியிருப்பதை இவ்வறிவியல் உலகம் ஏற்றுக்கொண்டுதான் இருக்கிறது. இப்படி நவீன அறிவியலை விட ஆன்மீக உலகம் என்றும் முன்னோடியாகத்தான் திகழ்கிறது.
  எந்த ஒரு சாதனமும் இல்லாமல் சித்தர்களால் உடலியல் முதல் வானிலை அறிவியல் வரை எப்படி வரையறுக்க முடிந்தது என்று நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.
  போகர் முதல் புலிப்பாணி வரையிலான சித்தர்களின் மருத்துவ மற்றும் வானிலை அறிவியலின் கண்டுபிடிப்புகள் இன்றும் நவீன அறிவியலால் கடக்க முடியாத ஒன்று. அதற்கு உதாரணமாக அணுவின் ஆராய்ச்சியை சொல்லலாம்.
  அணுவின் தன்மையறிந்து அட்டமா சித்திகளை பெற்றதும், கூடு விட்டு கூடு பாய்ந்ததும் கட்டுக்கதை அல்ல. பின்னாளில் வந்த பௌத்த பிக்குகள் வரை இதை நன்கு உணர்ந்திருந்தார்கள்.
  உடலியலில் சிறந்து விளங்கி அதையே மூலாதாரமாக கொண்டு அவர்களது பௌத்த மதத்தை பரப்பியது தனிக்கதை.
  ஆனால் இன்றைய நவீன அறிவியலில் அணுவின் ஆராய்ச்சி முடிந்தபாடில்லை.
  முதலில் அணுவை பிளக்க முடியாது என்றவர்கள் அந்த நிலையை தாண்டி அணு மூலக்கூறுகளை ஆராய்தார்கள்.
  புரோட்டான், நியூட்ரான் என்ற நிலை தாண்டி அதிலுள்ள குவார்க்குகள் வரை வந்துவிட்டது குவாண்டம் இயற்பியல். அதில் அவர்களது அதிசயிக்கும் தகவல், இந்த அகண்ட பிரபஞ்சத்தில் நமது சூரிய குடும்பம் எவ்வளவு சிறிய தூசுயோ அதே போன்று ஒவ்வொரு அணுவையும் ஒரு பேரண்டமாக கொண்டால் அதன்
  உள்ளிருக்கும் குவார்க்குகளின் அளவு நமது சூரிய குடும்பத்தை போல் அளவில் சிறியது என்கிறார்கள். ஆனால் இதையேதான் அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது என்று என்றோ ஆன்மீக உலகில் அறிவித்துவிட்டார்கள்.
  ஆனால் இங்கு நான் உணர்த்த விரும்புவது, அந்த கண்டுபிடிப்பிற்கு எந்த சாதனம் உதவியது? இன்றைய செயற்கைக்கோள்களில் இருந்து பிரபஞ்சத்தை ஆராயும் அதிநவீன தொலைநோக்கிகள் கொண்ட அறிவியலால் கூட இன்னும் ஒரு பிரபஞ்சத்தின் வரையை, எல்லையை அறுதியிட்டு கூற முடியவில்லை. அனைத்தயும்
  அனுமானித்தே சொல்கிறது. அன்றைய சித்தர்களுக்கு அணுவின் தன்மையும், அகண்ட பேரண்டத்தின் மீதான புரிதலும் எவ்வாறு சாத்தியமாயிற்று?
  இந்த பதிவில் மனிதன் படைத்த கடவுள் பற்றிய விவாதத்தில், கண்மூடித்தனமான கடவுள் மறுப்பாளர்கள் உள்ளது போல் கண்மூடித்தனமான மதவாதிகள் என்றுமே உள்ளார்கள் என்பதை மறுக்க முடியாது. அவர்களின் பிதற்றல்களும், மதங்களின் பெயரால் செய்த பாதகங்களும் இந்த உலகம் பார்த்த ஒன்று. அவை விமர்சனத்திற்கு கூட தகுதியற்றவை என்பது எனது நிலைப்பாடு. ஆனால் அத்தகைய மதவாதிகளுக்கும், மத, இன உணர்வு என்ற நிலை கடந்த மகான்களுக்கும் காத தூரம். இங்கு நாம் முன்னிருத்துவது எல்லாம் அந்த மகான்கள் உணர்ந்து, தெளிந்து உலகிற்கும் தெரிவித்து விட்டுப்போன ஆன்மீக உயர்வுகளைப்பற்றியே…
  கடவுள் மறுப்பு கொள்கை என்ற தளத்தில் நின்று பார்க்கும் பொழுது உலகில் நடைபெறும் அனைத்து இயற்கை சீற்றங்கள், பேரழிவுகள் மற்றும் எதிர் மறையான நிகழ்வுகள் அனைத்தும் கடவுள் தன்மையில் குற்றம் காண மட்டுமே உதவுகிறது என்றும் அந்த குற்றம் காணுதல் என்ற நிலையை தாண்டி, கடவுள் என்ற ஒருவர் இல்லையென்ற முடிவிற்கு வந்துவிட்ட பிறது, உலகில் நடக்கும் அத்தகைய நிகழ்வுகளுக்கு என்ன காரணம் இருக்கும் என்று ஆய்ந்து தெளிந்து காரணம் சொல்லும் நிலையை பற்றி சிந்திக்க வேண்டும். ஆனால் உண்மையில் அனைத்து நிகழ்வுகளும்,தான் இல்லை என்று சொல்லும் கடவுளின் மேல் குற்றம் சொல்லதல் என்ற நிலையோடு நின்று விடுவது வேதனை அளிக்கும் நிலை.
  ஒரு கடவுள் மறுப்பாளர், கடவுள் என்ற சொல்லை, தன்மையை உபயோகிக்காமல் நடக்கும் நிகழ்வுகளுக்கு யார் காரணம் என்று சிந்தித்தால் விடை கை மேல் கனியாக இருக்கும்.
  அடுத்ததாக மனிதனை படைத்த கடவுள் படைத்த மனிதன் என்ற தலைப்பில் தான் உண்மையான விவாதம் தொடங்குகிறது என்று எண்ணுகிறேன்.
  முதலில் நமது பால்வழித்திரள்.. அதில் தூசியிலும் தூசி நமது சூரிய குடும்பம். சூரியனில் இருந்து சூரிய ஒளி புவியை வந்தடைய ஆகும் நேரம் 8 1/4 நிமிடங்கள். அந்த ஒளி வேகத்தில் சென்றால் நமது பால்வழித்திரளை குறுக்காக கடக்க ஆகும் காலம் நூறாயிரம் ஒளி ஆண்டுகள். இந்த பால்வழித்திரளின் மையத்தில் இருப்பதுதான் நமது பால்வழித்திரளுக்கான கருத்துளை. அதுமட்டுமல்ல ஒரே அண்டம் அதாவது Universe என்று சொல்வதே தவறு இதுபோன்ற கோடிக்கணக்கான அண்டங்கள் உள்ளது. அதாவது Multiverse என்கிறது குவாண்டம் இயற்பியல். ஒவ்வொரு அண்டத்திலும் கோடிக்கணக்கான கருந்துளைகள் இருப்பதும் கண்டுபிடிக்க பட்டிருக்கிறது. இவற்றின் எண்ணிக்கையும் கூடிய வண்ணமே உள்ளது. கருந்துளையின் பிறப்பை எளிதாக சொல்ல வேண்டுமென்றால் சூரியன் போன்ற பெரிய நட்சத்திரங்கள் தனது எரிபொருள் அனைத்தும் தீர்ந்து ஒரு விவரிக்க முடியாத நிலையில் வெடித்து சிதறி பின்பு மீண்டும் ஒரு முறையில் குவிந்து கருமை நிறமுள்ள சுழலில் மீழ முடியாத நிலைக்கு அதாவது non return cell stage க்கு சென்றுவிடும். இவ்வாறு ஏற்ப்படுவதே கருந்துளை. இதுதான் குவாண்டம் இயற்பியலின் புரிதல்.
  ஆனால் இந்த குவாண்டம் இயற்பியலுக்கும் வெடி வைத்தாற்போல் இருக்கிறது ஒருவரின் கூற்று. கூறுபவரும் சாதாரண மனிதரில்லை. ஆம் அவரேதான் Stephen Hawkins.
  இவர் தனது ‘காலம்’ என்ற புத்தகத்தில் ‘கருந்துளைகள் ஒன்றும் அவ்வளவு கருப்பில்லை’ என்ற பகுதியில் இவ்வாறு விவரிக்கிறார். அவர் ஒரேடியாக கருந்துளைகள் பற்றிய புரிதலை மறுக்கவில்லை.. அவர் கருந்துளைகள் உண்மையில் கருந்துளைகள் சாம்பல் நிறமுடையவை என்கிறார். மேலும் நாம் உண்மையில் புரிந்து கொண்ட கருந்துளைகளுக்கும் உண்மையில் அதன் செயல்பாட்டிற்க்கும் நிறைய வேறுபாடு உள்ளது என்கிறார். அதற்கு ஆதாரமாக அவர் முன் வைக்கும் அறிவியல் சமன்பாடுகளை பார்த்து அறிவியல் உலகம் அதை ஏற்பதா மறுப்பதா என்று குழம்பிப்போய் கிடக்கிறது.. உண்மையில் அறிவியலின் நிலைப்பாடு இதுதான். இது மேலும் வளரும்.
  மேலும் கருந்துளை என்பது ஒன்றல்ல. இன்று வரையான கருந்துளைகளின் எண்ணிக்கை நூறு மில்லியன்களை தாண்டும் என்கிறது குவாண்டம் இயற்பியல்.
  ஆனால் கருந்துளைகள் பற்றிய சித்தர்களின் பார்வை இங்கு முற்றிலும் வேறுபட்டது. கருந்துளைகளை ஒர் உலகத்தில் இருந்து மற்றொரு உலகத்திற்கு செல்லும் குறுக்கு வழி என்கிறார்கள். அதன் ஆய்வில் நான் தொடர்ந்த வண்ணம் இருக்கிறேன்.
  இந்த கருந்துளைகளின் அமைப்பை விவரிக்க வேண்டுமென்றால் பல குதிரைகள் பூட்டிய தேரை உதாரணமாக கொள்ளலாம். ஒவ்வொரு கருந்துளையும் ஒரு குதிரை.. அவற்றின் மொத்த கடிவாளமும் ஒரு தேரோட்டின் கையில் இருப்பதுபோல் விரிகிறது அதன் விளக்கம். இங்கு நமது அறிவியல் நிலைப்பாடு கருந்துளைகளை இன்னும் தாண்டவில்லை.. நமது இரு புறமான தேடுதல் கருந்துளைகளோடு நின்று விடாமல் இன்னும் தூரமாக பயணப்பட வேண்டும் என்பது எனது திண்ணம்.
  அந்த பயணத்தின் முடிவு கருந்துளைகள் அல்ல அவற்றையும் தாண்டியது என்ற நிலையில் மேலும் பயணிக்க வாழ்த்துகிறேன். நன்றி.

  Like

  1. அறிவியல்பூர்வமான பதிலுரை. அறிவியல் இன்று உச்சத்தை எட்டியதற்கு நிச்சயம் நமது முன்னோர்கள் ஒரு காரணம் என்பது நிச்சயமான உண்மை. திருவிழாவில் அப்பாவின் தோளில் அமர்ந்துகொண்டு, அப்பாவுக்குத் தெரியாத சாமி தனக்குத் தெரிவதாக மகிழ்ச்சியடைவது போன்றதுதான் இன்றைய அறிவியல் வளர்ச்சி. மூடநம்பிக்கைகளற்ற ஆன்மீகம் என்பது அறிவியலுக்கு தொலைவில் இல்லை. அதை எதிர்ப்பது தேவையற்ற ஒன்று என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். கருந்துளை பற்றிய தங்கள் கருத்துக்கள் ஆச்சர்யமளிக்கின்றன. அது நிச்சயம் எனது கட்டுரைக்கு வலு சேர்க்கும். பதிலுரைக்கு நன்றிகள் பல.

   Liked by 1 person

 2. சிவன் {~ ஆதியந்தம் ~ } எனும் பெயர் வரக்காரணம் சித்தர்களா ! தேவர்களா ?
  அகிலாண்டகோடிபிரம்மாண்ட நாயகன் என நாரயணரை காப்பதால் (நிர்வாகம் எங்கும் எதிலும் என்றென்றும் இயற்கையோடு இயைந்திருப்பதே இயற்கையாக தானே ஓரிரவு பின் பகல் …..) அழைக்கிறோம் அல்லது அறிவியல் கடந்து அருள்வேண்டி துதிக்கின்றோம் மனம் ஒன்றி பக்தியுடன் .
  பிரம்மா படைக்கின்ற கடவுள் இங்கனம் ஆக்கமென்றும் ஆக்கபூர்வமான பாதுகாப்பென்றும் அழித்தொழிக்க மீண்டும் பிளாஸ்டிக் மறுசுழற்சி போல உயிர் பிறப்பும் புண்ணிய பாவ கர்மவினை சுழற்சியினூடே வருவதே பக்தியால் உணர்ந்த சிவன் துதி போற்றிய ராஜராஜசோழனும் சிவனடிமையே ~ ராமானுஜரும் நாராயண வழி கருணையே ~ எங்கும் எதிலும் நாம் நம்பி துதிக்கின்ற தத்துவமாக ஆன்மீக தேடலுக்கு விடையா விதியா கடவுள் என்பதே ஒரு பதம் ஒரு பானை சோறு பதம் கடவுள் நம்பிக்கை 🙏

  அறிவியலே கணக்கிலடங்காத போது படைப்பியலின் நிர்வாக திறமது புல்லாகி பூண்டாகி பல்விருகமாகி பறவையாய் பாம்பாய் கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாகி வல்லசுரராகி முனிவராகி தேவராய் எல்லா பிறப்பும் பிறந்திழைக்க …., எம்பெருமான் சிவனருள் கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் ~ கருந்துளையும் கருவறையும் (தாயின் கருவறை = கோயில் கருவறை) வெடிப்பின் சித்தரகசியமேவாத பூரணதத்துவம் அற்புதமாவது நமசிவாய பஞ்சபூத பிரபஞ்ச நியமம்👍 சிறு புரிதலும் ஆழ்ந்த தேடலும் கடந்த விஞ்ஞானமே கடந்த மெய்ஞான பக்திக்கு எனது கருத்துக்கள் புதுபுதுஅர்த்தங்களாகிடும் 🙏 ௐ நமசிவாய வாழ்க தமிழ்

  Like

  1. கருத்துக்களுக்கு நன்றி நண்பரே.மெய்ஞ்ஞானம் என்பது விஞ்ஞானத்தைக் கடந்தது என்பது, தங்களைப் போன்ற ஆனமீகவாதிகளின் வாதம். மெய்ஞ்ஞானத்தை, விஞ்ஞானத்துக்குள் தோய்த்தெடுத்தால் ஆன்மீகத்தின் மர்மமுடிச்சுகள் அவிழ்ந்துவிடும் என்பது என் போன்ற கடவுள் மறுப்பாளர்களின் வாதம்.

   மெய்ஞ்ஞானமும், விஞ்ஞானமும் சங்கமிக்கும் இடங்கள் பல உண்டு. தமிழ்நாட்டில் கோயில்கள் அமைந்த இடம், கருவறையின் அமைப்பு, கோபுரக்கலசம் என்று அனைத்திலுமே விஞ்ஞானத்தின் சாயல் உண்டு. ஆகையால் தமிழ்நாட்டில் நிலவிய ஆன்மீகத்தை, மூடநம்பிக்கை என்று ஒட்டுமொத்தமாக புறந்தள்ளிவிட முடியாது. அதற்குள் விஞ்ஞானம் ஒளிந்துகிடக்கிறது.

   ஆக விஞ்ஞானம், ஆன்மீகத்தின் எதிரி என்று முத்திரை குத்த வேண்டியதில்லை. ஆன்மீகத்தின் சில மூடப்பழக்கங்களை களைந்தெறிய விஞ்ஞானம் உதவும் என்பது எனது கருத்து.

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.