பட்டாம்பூச்சியில் ஏன் பாகுபாடு

ஆண்குழந்தைகள் விதிவிலக்கல்ல

நம் சமூகத்தில், பெண்களுக்கெதிரான குற்றங்களுக்கு சமூகக் குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கியிருக்கிறது. அது கட்டாயத் தேவையும் கூட. உயர்ந்த பண்பாடு, கலாச்சாரம் கொண்டவர்கள் என்று பெருமை பேசிக்கொள்ளும் நாடுகளில் கூட பெண்கள் இரண்டாம் தர குடிமக்களாகத்தான் பார்க்கப்படுகிறார்கள் என்பது அருவெறுப்பான உண்மை. சினிமாக்களில் குத்துப்பாடல்களில் அரைகுறையாக ஆட விடுவதில் துவங்கி, விளையாட்டு மைதானங்களில்  உற்சாகமூட்டும் பெண்கள் என்று கீழ்த்தரமான ஆடைகளுடன் ஆட விடுவது  வரை பெண்களை ஒரு போதைப் பொருள்போல பயன்படுத்தும் அவலம் இன்றும் நிகழ்வது கொடுமை. பெண்களுக்கென்ன, பெண் குழந்தைகளுக்கே பாதுகாப்பற்ற சூழல்தான் நம் நாட்டில் நிலவுகிறது. இவற்றுக்கெதிராக நம் குரல்கள் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருக்கட்டும். குற்றவாளிகள் பாகுபாடில்லாமல் தண்டிக்கப்பட வேண்டும்.

பெண்களுக்கெதிரான குற்றங்களைக் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்து வருவது மகிழ்ச்சி. அதே நேரம் ஆண்கள் மீதான கொடுமைகள், ஆண் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள், வன்புணர்வுகள் குறித்து விழிப்புணர்வு இருக்கிறதா என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பெண் குழந்தைகளைப் பாதுகாத்துக் கொள்ளும் பெற்றோர்கள் ஆண் குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்துவதில்லை என்பதை சிந்தித்து உணர வேண்டும். ஆண் குழந்தைகள் விதிவிலக்கல்ல. அவர்களும் பெண் குழந்தைகளைப் போல கவனிக்கப்பட வேண்டும். குழந்தைகளில் ஆண் என்ன, பெண் என்ன. இரண்டு பேருமே  சிறகடித்துப் பறக்க வேண்டிய பட்டாம்பூச்சிகள்தான். பட்டாம்பூச்சியில் ஏன் பாகுபாடு?

ஆண் குழந்தைகளின் கதறல்

பெண் குழந்தைகளை நாம் அவ்வளவு எளிதில் பக்கத்துக்கு வீட்டுக்கோ, தெருவில் நின்று விளையாடவோ அனுமதிப்பதில்லை. ஆனால் ஆண் குழந்தைகள் பெரும்பாலும் அனுமதிக்கப்படுகிறார்கள். அங்குதான் பிரச்னை துவங்குகிறது. காமவெறியர்களுக்கு பலியாகும் ஆண் குழந்தைகள் ஏராளம். நம் நாட்டில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் ஆண் குழந்தைகள்தான் என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். 2007ம் ஆண்டு குழந்தைகள் மற்றும் பெண்கள் முன்னேற்ற அமைச்சரவை சார்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 12,447 குழந்தைகள் வன்கொடுமை வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்களில் 53 சதவீதம் பேர்  ஆண் குழந்தைகள் என்று தெரிய வந்தது. தலைநகர் டெல்லியில், குழந்தைகள் வன்கொடுமை, வன்புணர்வு வழக்குகளில் 60 சதவீதம் ஆண் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புள்ளி விபரம் தெரிய வேண்டுமென்பதில்லை. முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டியது நம் கடமை.

வெளியில் நடந்த சம்பவங்களை வீட்டில் சொல்ல வேண்டுமென்று பெண் குழந்தைகளுக்கு சொல்லித்தரும் பெற்றோர்கள், ஏனோ அந்த பாடத்தை ஆண் குழந்தைகளுக்குப்  புகட்டுவதில்லை. ஆண் குழந்தைகளும் பெற்றோரிடம் சொல்லத் தயங்கி எதையும் சொல்வதில்லை. ஏனென்றால் பெண் குழந்தையை விட ஆண் குழந்தை பெற்றோரிடம் அதிகம் அடிவாங்கி வளர்கிறது. அதனால் பெற்றோரை அணுகுவதில் ஆண் குழந்தை அதிக தயக்கம் காட்டுகிறது. இது குற்றவாளிகளுக்கு இன்னும் வசதியாய்ப் போகிறது. இன்றைய சூழலில் பெண் குழந்தைகளுக்கு நடக்கும் கொடுமைகள் அனைத்தும் ஆண் குழந்தைகளுக்கும் நடக்கிறதென்பதை பெற்றோர் உணர வேண்டும். பெண் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கப்படும் தவறான தொடுதல் என்ன என்பதை ஆண் குழந்தைக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பது நிதர்சனம்.

ஆணுக்கும் உண்டு கற்பு

ஆண் குழந்தைகள் பெரும்பாலும் தனக்கு நடந்த வன்கொடுமைகளை வெளியில் சொல்வதில்லை. வெளியில் சொல்லாமல் மனதுக்குள் அழுதுகொண்டே வளரும் குழந்தைகள் வருங்காலத்தில் குற்றவாளிகளாக மாறுகிறார்கள். கற்பழிப்பு, கொலை போன்ற குற்றங்களில் ஈடுபட்டு, குற்றவாளியாக சமூகத்தின் முன் நிற்கும்போது நமக்கு குற்றவாளி மட்டுமே கண்ணுக்குத் தெரியும். இளம் வயதில் அந்த குழந்தை அனுபவித்தக் கொடுமைகள் உலகத்தின் கண்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அதற்காக குற்றவாளிகளைத் தண்டிக்கக்கூடாதென்று சொல்ல முடியாது. ஆனால், ஒரு குழந்தையின் கதறல் நம் காதுகளுக்கு சரியான நேரத்தில் எட்டியிருந்தால் அவன் வருங்காலத்தில் குற்றவாளியாக மாறியது தடுக்கப்பட்டிருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

பாதிக்கப்பட்ட அனைத்துக் குழந்தைகளுமே குற்றவாளிகளாக மாறுகிறார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் கற்பழிப்பு போன்ற குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சிறுவயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள் என்பது உண்மை. வீட்டுக்குளேயே குழந்தைகளைப் பூட்டி வைக்க வேண்டுமென்று சொல்லவில்லை. ஆனால் பாலியல் கல்வி  கட்டாயம் என்று சொல்கிறேன். பத்து வயது பெண் குழந்தைக்கு நடந்தால் அது பாலியல் வன்கொடுமை என்று ஏற்றுக்கொள்ளும் நாம், அதுவே பத்து வயது பையனுக்கு நடந்தால் கொடுத்து வைத்தவன் என்று கூறும் ஒரு கேவலமான கூட்டத்தைப் பார்க்கிறோம். இந்த பார்வை மாற வேண்டும். கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் உண்டென்பதை சொல்லி வளர்க்கத் தவற வேண்டாம்.

கிகாலோஸ் (Gigolos)

ஆண் குழந்தைகளுக்கு நடக்கும் வன்கொடுமைகள் எவ்வாறு நம் கவனத்துக்கு வருவதில்லையோ, அதேபோல ஆண்களுக்கு நடக்கும் சில கொடுமைகளும் நமக்குத் தெரிவதில்லை. ஆண் விபச்சாரத்தைப் பற்றி நம்மில் எத்தனை பேர் அறிவோம். அவர்களைப் பொதுவாக கிகாலோஸ் என்று அழைக்கிறார்கள். இது போன்ற குற்றச்செயல்களில் பொதுவாக வாலிபப் பருவத்தை எட்டிய ஆண்கள் ஈடுபடுவதால் பெரியவர்கள் என்ற ரீதியில் அதன் குற்றப்பின்னணியை யாரும் கண்டுகொள்வதில்லை. இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் பணத்துக்காக ஈடுபடுகிறார்கள். ஆனால் அவர்கள் தொடர்பு வைத்திருப்பது பணக்கார வீட்டுப் பெண்கள். ஒருவேளை அந்த ஆண்கள் தாங்கள் வைத்திருக்கும் தொடர்பை வெளியில் சொன்னாலோ, வேறு பிரச்னைகளுக்காகவோ கொலை செய்யப்படுகிறார்கள். பெரிய இடத்துக் கொலைகள் என்பதால் அந்தக்கொலைகள் வெளியில் தெரிவதில்லை.

சட்டமும் ஆண்களுக்கு சாதகமாக இல்லாததால், ஒருவேளை குற்றத்தில் ஈடுபடும் பெண்களே, இவன் என்னைக் கற்பழிக்க முயற்சி செய்தான் என்று புகார் அளித்தால், ஆணுக்கு உதவ சட்டத்தில் இடமிருக்கிறதா என்று தெரியவில்லை. வறுமைக்கு பயந்தோ, காசுக்கு ஆசைப்பட்டோ இது போன்ற தொழில்களில் ஈடுபட்டு தங்கள் வாழ்க்கையை இழந்த இளைஞர்கள் எத்தனை பேரென்று தெரியவில்லை. இவை பெரும்பாலும் நம் கண்ணுக்கு தெரிவதில்லை. பசிக்குப் பொங்கல் திருடுபவனையும், ருசிக்குப் பாயாசம் திருடுபவனையும் ஒன்றாகப் பார்க்க முடியாது. பணத்துக்காக செய்யக்கூடாத செயல்களை செய்து வாழ்க்கையை இழந்து நிற்கும் ஆண்களும் இருக்கிறார்கள். அவர்களைக் கண்டறிந்து வேண்டிய உதவிகளை செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை.

ஆண்களுக்கான குரல்

ஆண் அழுதாலே, ஏன் பெண்போல அழுகிறாய் என்று பெண்ணையும் இழிவுபடுத்தி, ஆணுக்கும் அழுகையை மறைக்கக் கற்றுக்கொடுக்கிறது நம் சமுதாயம். அவன் அழுகையை மட்டுமல்ல, தனக்கு நேர்ந்த அவமானங்களையும், வன்கொடுமைகளையும் சேர்த்தே மறைத்துக் கொள்கிறான். ஆண் குழந்தைகள் அழுதால் தவறில்லை. அவனுக்கு நேரும் கொடுமைகள்தான் தவறு. காமவெறி பிடித்த மிருகங்கள் ஆண் குழந்தை, பெண் குழந்தை என்று பாகுபாடு பார்ப்பதில்லை. மனிதப் போர்வையில் வாழும் அது போன்ற மிருகங்களிடமிருந்து நம் பிஞ்சுக் குழந்தைகளைக் காப்பது நம் ஒவ்வொருவருடைய கடமை. இந்த குரல் ஆண்களுக்கானது மட்டுமன்று. பெண்களுக்கு ஒலிக்கும் குரல்கள், ஆண் குழந்தைகளுக்காகவும், ஆண்களுக்காகவும் சேர்த்து ஒலிக்கட்டும் என்ற வேண்டுகோள்.

உதவிய நூல்களும் இணையதளங்களும் 

 1. https://www.hindustantimes.com/india-news/in-india-stories-of-boy-victims-of-sex-crimes-are-lost-in-the-crowd/story-9QfRjwfTwD7LpAAKaii7hK.html
 2. http://indianexpress.com/article/india/sexual-abuse-of-boys-shame-poor-awareness-behind-under-reporting-4786889/
 3. https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC5547862/
 4. http://foreignpolicy.com/2008/01/08/male-prostitution-spreading-in-india/
 5. http://zeenews.india.com/home/the-indian-gigolo-exposed_126518.html
 6. https://timesofindia.indiatimes.com/Dialogue-with-a-gigolo/articleshow/2695473.cms

4 Comments Add yours

 1. முதலில் இத்தகைய சமூக விழிப்புணர்வு பதிவிற்க்கும் அதற்கு பொருத்தமான தலைப்பு இட்டதற்க்கும் வாழ்த்துக்கள்.
  இலைமறைவு காயாக ஆண் குழந்தைகள் மீதான பாலியல் தொந்தரவுகள் அனைவருக்கும் தெரிந்தாலும் யாரும் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் பிரச்சனைகளை மட்டும் விவாதிப்பதிலும் நமது சமூகம் திருப்தி கொள்கிறது என்பதும் கசப்பான ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய உண்மை.
  அந்த வகையில் இந்த விழிப்புணர்வு பதிவு நமது சமூகத்திற்கு அவசியமான ஒன்று.
  விழிப்புணர்வு பதிவிற்கு நன்றியும், வாழ்த்துக்களும்…

  Like

 2. மிகவும் பயனுள்ள பதிவு பாராட்டுகள். பெண் கொடுமை மீதான குரல் மட்டுமே ஒலிக்கின்ற வேளையில் ஆண் குழந்தைகளின் மீதான தாக்குதல் குறித்தும் பதிிிவிட்டமைக்கு பாராட்டுகள்

  Like

  1. பாராட்டுக்களுக்கு நன்றிகள். சில கணக்கெடுப்புகளைப் பார்க்கும்போது, பாலியல் தொந்தரவால் அதிகம் பாதிக்கப்பட்டது ஆண் குழந்தைகள் என்று அறிந்தபோது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. மக்கள் நடுவே ஆண் குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வும் குறைவாகவே இருக்கிறது. ஆகையால் இப்படி ஒரு கட்டுரை நிச்சயம் தேவை என்றே தோன்றுகிறது.

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.