பழமொழிகளும் அதன் உண்மை அர்த்தங்களும்

1) அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல.

இங்கு அரசன் என்பது அரசமரத்தைக் குறிக்கும். பொதுவாகப் பெண்கள் குழந்தைப் பேறு வேண்டி அரசமரத்தை சுற்றுவது வழக்கம். அரசமரத்தை சுற்றினால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. என்னதான் நம்பிக்கையுடன் அரசமரத்தை சுற்றினாலும், கணவனை சுற்றி வந்தால்தானே குழந்தை பிறக்கும். கணவனை சுற்றாமல், அரசமரத்தைச் சுற்றுவதில் ஒரு பயனில்லை என்பதை உணர்த்தச் சொல்லப்பட்டதுதான்  இந்தப் பழமொழி.

“அரசனை நம்பி, கட்டியக் கணவனைக் கைவிட்டுப் போனவள்” என்று ஒரு இழிவான தகவலைப் பழமொழிகள் நமக்கு ஒருபோதும் தராது. ஆகையால், பழமொழியைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். இங்கு அரசன் என்பது அரசமரத்தை மட்டுமே குறிக்கும்.

2) அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்

இது பழமொழி என்று சொல்வதை விட ஒரு விடுகதை என்று சொல்லலாம். மழை பெய்து ஒரே நாள் இரவில், பல இடங்களில் காளான்கள் முளைத்திருக்கும். “நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்” என்ற சொல்லாடலைக் கேட்டிருப்போம். ஒருநாள் மழையில் முளைத்த காளான், சீக்கிரம் அழிந்தும் போகும், அதனால்தான் அற்பன் என்ற சொல். கிராமத்துப்பக்கம் அதனை குடைக்காளான் என்று சொல்வார்கள். பார்ப்பதற்கு குடை போலவே இருக்கும். அந்தக் காளானுக்காக சொன்ன விடுகதைதான் இது.

“அர்ப்பணித்து வாழ்பவன் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்” என்பதுதான் உண்மையான பழமொழி என்று வாதிடுவோரும் உண்டு.  இரண்டு விளக்கங்களுமே சரியென்றே தோன்றுகிறது. ஆகையால் நாம் விடுகதை, பழமொழி இரண்டையும் ஏற்றுக்கொள்வோம்.


3) ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் ஆவான்.

சித்த வைத்தியம் தொடர்பான பழமொழி இது. சித்த வைத்தியத்தில் வேர்தான் மூலாதாரம். பல வேர்களைப் பற்றி அறிந்து கொண்டால்தான் வைத்தியம் கற்றுக்கொள்ள முடியும். “ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்” என்று இருந்த பழமொழிதான் காலப்போக்கில் மருவி வைத்தியரைக் கொலைகாரர் ஆக்கிவிட்டது. ஒருவேளை ஆங்கில மருத்துவம் படித்து வந்தவர்கள், சித்த மருத்துவத்தை ஒழிப்பதற்காக கிளப்பி விட்ட வதந்தியாக இருக்குமோ? எது எப்படியோ உண்மையில் அது வேர்தான் என்பதை நாம் புரிந்துகொண்டால் சரிதான்.

4) ஆயிரம் முறை பொய் சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம்.

“ஆயிரம் முறை போய் சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம்” என்பதுதான் பொய் என்று மாறிப்போனது. காதோரம் நரைமுடி எட்டிப்பார்த்தும் கல்யாணம் ஆகவில்லையே என்று வருத்தப்பட்ட யாரோ ஒரு சிலர்தான் தங்கள் வசதிக்காக பழமொழியை மாற்றியிருக்கக் கூடும். இந்தப் பழமொழியைக் காரணம் சொல்லி இனிமேல் யாரும் பொய் சொல்லி கல்யாணம் பண்ண முடியாது.

5) ஆறிலும் சாவு நூறிலும் சாவு.

இந்தப் பழமொழியின் விளக்கம் மிகவும் எளிதானது. சேர, சோழ, பாண்டியர்கள் முதல் தமிழகத்தை ஆண்ட சிற்றரசர்கள் வரை அனைவருமே எந்நேரமும் போரிட்டுக்கொண்டுதான் இருந்தார்கள். போர் வீரர்களுக்கு மரணபயம் இருக்கக்கூடாது. மரணபயம் இருப்பவன் போர்வீரன் ஆக முடியாது. ஆகையால் வீரர்களுக்கு உற்சாகமூட்டும் விதமாக சொல்லப்பட்டதுதான் இந்தப் பழமொழி. இதற்கு வேறு ஒரு விளக்கமும் சொல்லப்படுகிறது. அது உண்மைதானா என்று தெரிந்து கொள்வோம்.

இந்தப் பழமொழி கர்ணன் சொன்னதென்று பலர் விளக்கம் சொல்கிறார்கள். உண்மையில் கர்ணனுக்கும் இந்தப் பழமொழிக்கு ஒரு தொடர்பும் கிடையாது. பாண்டவர்களோடு சேர்ந்து 6 பேராக வந்தாலும் சாவு நிச்சயம், கௌரவர்கள் 100 பேரோடு சேர்ந்தாலும் சாவு நிச்சயம் என்று கர்ணன் சொன்னானாம். கர்ணன் சாவைக் குறித்து அவ்வளவு வருந்தியிருந்தால் போர்க்களத்துக்கு வந்திருக்க மாட்டான். மகாபாரதக் கதையில் கர்ணன், அர்ஜுனனை விட வீரன், அவன் சாவுக்கு அஞ்சி பேசுவது போல அர்த்தம் சொல்வது இந்தப் பழமொழிக்கு பொருந்தாது. ஆகையால் இது  நமது போர் வீரர்களை உற்சாகப்படுத்த சொல்லப்பட்ட பழமொழிதான். சாவு ஆறு வயதிலும் வரலாம், நூறு வயதிலும் வரலாம், சாவைக்கண்டு அஞ்சுவதில் ஒரு பயனில்லை என்பதுதான் பழமொழியின் அர்த்தம்.

6) ஆனைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கும் ஒரு காலம் வரும்.

இந்தப் பழமொழிக்கு பல பொருள் உண்டு. யானை போல பலமானவர்களுக்கு ஒரு காலம் வந்தால், பூனை போன்ற பலம் குறைந்தவர்களுக்கும் ஒரு காலம் வரும் என்பது நேரடியாக நாம் புரிந்து கொள்ளும் பொருள். ஆனால் பூனையின் பலத்தை யானையோடு ஒப்பிட்டுக் கூறுவது பொருத்தமற்றது. எலியைக் கேட்டால், பூனைதான் பலசாலி என்று தலையில் அடித்து சத்தியம் செய்யும். ஆகையால் இது சரியான பொருள்தானா என்று புரியவில்லை. இன்னொரு விளக்கத்தைப் பார்க்கலாம்.

ஆ நெய் என்பதுதான் ஆனை என்று மருவியதாக சொல்லப்படுகிறது. ஆ நெய் என்றால் பசுவின் நெய் என்று பொருள். அதே போல பூ நெய் என்ற சொல்தான் பூனை என்று காலப்போக்கில் மாறிவிட்டதாக சொல்கிறார்கள்.  பூ நெய் என்றால் தேன் என்று அர்த்தம். “ஆநெய்க்கு ஒரு காலம் வந்தால், பூநெய்க்கும் ஒரு காலம் வரும்” என்று வைத்துக்கொண்டால், இந்த பழமொழிக்கு இன்னொரு அர்த்தம் வரும். பசு மாட்டு நெய் அதிகமாக சேர்த்துக் கொண்டால் உடலில் கொழுப்பு சேரும், அந்தக் கொழுப்பைக் குறைக்க தேன் உதவும் என்பது அந்தப் பழமொழியின் அர்த்தம்.  இந்தப் பழமொழிக்கு மற்றுமொரு பொருளும் இருக்கிறது.

யானை கட்டிப் போரடித்தப் பரம்பரை என்ற சொல்லைத் திரைப்படங்களில் சொல்லக் கேட்டிருப்போம். பொதுவாக அறுவடைக் காலங்களில் போரடிக்க யானையைக் கூட்டி வருவார்கள். அறுவடை எல்லாம் முடிந்து நெல்லை சேமித்து வைத்ததும், நெல்லைத்தின்பதற்கு எலிகள் நிறைய வரும். அந்த எலிகளை வேட்டையாடப் பூனைகளைக் கொண்டுபோய் விடுவார்கள்.  ஆகையால் “ஆனைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கும் ஒரு காலம் வரும்”. என்றும் பொருள் கொள்ளலாம்.

7) ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.

மருமகளுக்கும் மாமியாருக்கும், கல்தோன்றி, மண்தோன்றாக் காலத்திலிருந்தே ஒத்துவராது என்பது வரலாறு. ஆனால் “வரலாறு முக்கியம் அமைச்சரே” என்று மருமகளைக் கொடுமைப்படுத்தினால், மாமியாரின் மகன் தலையில் பூரிக்கட்டை விழுவதை யாராலும் தடுக்க முடியாது. தனது மகனைப் பூரிக்கட்டையிலிருந்துக் காப்பாற்ற வேண்டுமென்று விரும்பினால், இன்னொரு வீட்டிலிருந்து தன் வீட்டிற்கு வாழவந்த மருமகளை, மாமியார்  நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை செய்யும் பழமொழி. மாமியாருக்கு மட்டுமல்ல, அவர் மகனுக்கும் சேர்த்தே எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது இந்தப் பழமொழி மூலம்.

மனைவி கருவுற்றிருக்கும்போது, அவளை நன்றாக கவனித்துக் கொண்டால், அவள்  வயிற்றில் வளரும் தனது  குழந்தை நன்றாக வளரும் என்ற பொருளும் உண்டு. இது கணவனுக்கு அறிவுரை சொல்லும் வகையில் சொல்லப்பட்டுள்ளது. பிறர் வீட்டிற்கு வாழச்செல்லும் பெண்ணை, நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக மாமியாருக்கும், அந்த பெண்ணின் கணவருக்கும் சொல்லப்பட்ட அறிவுரைதான் இது.

8) கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே

கப்பல் விடும் அளவுக்கு பெரும் பணக்காரராய் வாழ்ந்து, ஒருவேளை கப்பலே கவிழ்ந்தாலும், அதை எண்ணிக் கவலைப்பட்டு கன்னத்தில் கை வைத்துக் கொண்டு உட்காருவதால் ஒரு பயனில்லை என்பது நாம் நேரடியாக புரிந்து கொள்ளும் செய்தி. ஆனால் இதற்கு வேறு ஒரு பொருளும் உண்டு.

“கன்னமிடுதல்” என்றால் திருடுதல் என்று பொருள். ஒருவேளை கப்பலே கவிழ்ந்து செல்வத்தை எல்லாம் இழந்து வறுமையில் வாடும் நிலை வந்தாலும், திருடும் எண்ணம் வரக்கூடாது என்பதுதான் இந்தப் பழமொழியில் மறைந்திருக்கும் உண்மையான செய்தி.

9) கல்லைக் கண்டால் , நாயைக் காணோம்! நாயைக் கண்டால் , கல்லைக் காணோம்!!

இந்த பழமொழி திருமந்திரப் பாடலிலிருந்து உருவாக்கப்பட்டது.

“மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்”

இது திருமூலர் பாட்டு. மரத்தால் அழகிய யானை உருவம் செய்து வைக்கப்பட்டிருக்கிறது. அதை வெறும் மரம் என்று பார்ப்பவர்களுக்கு யானை தெரியாது. யானை என்று பார்ப்பவர்களுக்கு மரம் தெரியாது. இந்தப் பாடலை வைத்துதான் பல்வேறு சொல்லாடல்கள் உருவாக்கப்பட்டன. “தெய்வம் என்றால் அது தெய்வம், சிலை என்றால் வெறும் சிலைதான்” என்ற கண்ணதாசன் பாட்டுக்கும், “கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது” என்று வாலி பாடிய பாடல் வரிகளுக்கும் கடன் கொடுத்தவர் திருமூலர்தான். அந்த வரிசையில் உருவானதுதான் இந்தப் பழமொழி. கல்லினால் செய்து வைத்த நாய் சிலையில் கல்லை மட்டும் பார்த்தால், அதில் நாய் தெரியாது, நாயாகப் பார்த்தால் கல் தெரியாது என்பதுதான் பொருள். அடுத்த முறை நாயைப் பார்க்கும்போது, தேவையில்லாமல் கல்லைத் தேடாதீர்கள்.

10) களவும் கற்று மற.

“களவும் கத்தும் மற” என்பதுதான் உண்மையான பழமொழி என்று பல குறிப்புகள் கிடைக்கின்றன. “கத்து” என்ற சொல்லுக்கு பொய் என்று அர்த்தமும் உண்டு. களவும், பொய் சொல்வதையும் தவிர்த்து விடு என்பதை வலியுறுத்தும் பழமொழி இது. இதற்கு இன்னொரு பொருளும் உண்டு.

சங்க இலக்கியங்களில், அகவாழ்க்கையை இரண்டு விதமாகப் பிரித்துச் சொல்வார்கள். களவு வாழ்க்கை, கற்பு வாழ்க்கை என்ற, அந்த இரண்டும் காதல் வாழ்க்கையையும், திருமண வாழ்க்கையையும் குறிக்கும். திருக்குறளில் கூட களவியல், கற்பியல் என்ற அதிகாரங்கள் உண்டு. ஆகையால் இங்கு களவு என்பது காதல் வாழ்க்கையைக் குறிக்கும். காதல் வாழ்க்கையைக் கடந்து இல்லற வாழ்க்கைக்குள் நுழைய வேண்டுமென்று அறிவுறுத்தும் பொருளில் இந்தப் பழமொழி அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் பழமொழியை சாக்காக வைத்து எத்தனைத் திருடர்கள், அரசியல்வாதிகள் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தார்களோ தெரியவில்லை. பழமொழி சற்று மாறினால், அது எத்தனை பேருக்கு தவறான உதாரணமாக மாறிவிடுகிறது. இனியாவது பழமொழிகளை சரியாகப் புரிந்துகொள்ள முயற்சிப்போம்.

11) கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.

கோரைப் புல்லில்தான் பாய் தைப்பார்கள். கழு என்பது ஒருவகை கோரைப்புல். அந்த கழு என்ற கோரைப்புல்லைப் பயன்படுத்தித் தைக்கப்பட்ட பாயில் கற்பூர வாசனை வருமாம். இதைச்  சொல்வதற்குதான் “கழு தைக்கத் தெரியுமாம் கற்பூர வாசனை” என்று சொன்னார்கள். காலப்போக்கில் கழுதை உள்ளே வந்துவிட்டது. இனி ஒருபோதும் கற்பூரத்தைக்  கழுதையிடம் கொண்டுபோய் காட்டி உதை வாங்கிக் கொள்ளாதீர்கள்.

12) கோத்திரம் அறிந்து பெண் கொடு பாத்திரம் அறிந்து பிச்சை இடு.

இது மன்னர் பரம்பரையில் வந்தவர்கள், வள்ளல்கள் ஆகியோருக்காக சொல்லப்பட்ட பழமொழி. உண்மையில் அது “கோத்திறம் அறிந்து பெண் கொடு பாத்திறம் அறிந்து பிச்சை இடு”  என்று இருக்க வேண்டும். “கோத்திறம் அறிந்து பெண் கொடு” என்றால், அரசனுடைய திறமை அறிந்து பெண்ணைக்கொடு என்று அர்த்தம். “பாத்திறம் அறிந்து பிச்சை இடு” என்றால், புலவர்களின் பாடல் திறமையைப் பார்த்து அன்பளிப்புக் கொடு என்று அர்த்தம். காலப்போக்கில் இது கோத்திரம், பாத்திரம்என்று மாறிப்போய் விட்டது.


13) தை பிறந்தால் வழி பிறக்கும் 

தை மாதம் பிறந்தால், வயலில் அறுவடை ஆகும். உழவர்கள் கையில் செல்வம் புரளும், வாழ்க்கை செழிக்கும் என்பது நாம் நேரடியாக புரிந்துகொள்ளும் பொருள். இந்தப் பழமொழிக்கு மேலும் சில அர்த்தங்களும் உண்டு.

வயற்காட்டில் விளைந்திருக்கும் நெல்மணிகள், முழு வளர்ச்சி அடையும் போது, அவை வரப்புகளில் சாய்ந்து கிடக்கும். அப்போது வரப்புகளில் நடப்பதற்கு வழி இருக்காது. தை மாதம் அறுவடையான பின், மீண்டும் வரப்புகளில் நடப்பதற்கு பாதை கிடைக்கும். இதையும் குறிப்பிடுவதுதான் இந்தப் பழமொழி.

இந்தப் பழமொழி குறித்து இன்னொரு புதுத்தகவல் உண்டு. மார்கழி மாதம் பெண்கள் பொதுவாக வீட்டு முன் கோலம் போடுவார்கள். கோலம், வீடு துவங்கி, சாலை வரை நீளும். தப்பித்தவறி கோலத்தில் கால் வைத்தவர் நிலைமை அலங்கோலமாகி விடும். கோலம் சாலையை மறைப்பதால் நமக்கு நடப்பதற்கு பாதை  இருக்காது. தை மாதம் பிறந்தவுடன் கோலத்திற்கு முடிவு வரும். நமக்கும் நடந்து செல்ல வழி பிறக்கும்.

14) புண்பட்ட மனதை புகை விட்டு ஆத்து.

பழமொழி ஒருவரை நல்வழிப்படுத்துமே தவிர, தீய வழியை ஒருபோதும் காட்டாது. மனம் புண்பட்டால், புகை பிடிக்க வேண்டும் என்பது போல அனைவரும் அர்த்தம் புரிந்து கொள்கிறார்கள். உண்மையான அர்த்தம் அதுவல்ல. “புண்பட்ட மனதை புக விட்டு ஆற்று” என்பதுதான் உண்மையான பழமொழி. மனம் புண்பட்டிருக்கும் நேரம், துன்பத்தை எண்ணியெண்ணி வருந்திக் கொண்டிருக்காமல், மனதைத் திசைதிருப்பித் துன்பத்தை போக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் அதன் உண்மையான விளக்கம்.


15) மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?

இதுவும் சற்றே திரிந்த பழமொழிதான். “மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா?” என்பதுதான் பழமொழி. குதிர் என்றால், ஆற்று வெள்ளத்தில் தற்காலிகமாக ஏற்பட்ட மணல்மேடு. அதில் கால் வைத்தால், நாம் ஆற்றில் மூழ்கி விடுவோம். அதனால் மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கக்கூடாது என்ற எச்சரிக்கைதான் இது. மற்றபடி, குதிரைக்கும் இந்தப் பழமொழிக்கும் ஒரு தொடர்பும் கிடையாது.


16) முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டதைப் போல.

ஒருவரின் குறையைச் சொல்லி இழிவுபடுத்துவது பழமொழியின் நோக்கமல்ல. இந்தப் பழமொழி காலப்போக்கில் மருவியிருந்தாலும் அது கண்டிக்கத்தக்கது. உண்மையான பழமொழி “முயலான் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டதைப் போல” என்பதுதான். முயற்சியே செய்யாமல் ஒருவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படலாமா? என்பது அதன் உண்மையான அர்த்தம். முயலான் என்ற சொல் முடவன் என்று மாறிப்போய் விட்டது.

17) நாற்பது வயதில் நாய் குணம் அறுபது வயதில் பேய் குணம் 

இந்தப் பழமொழி உண்மையென்றால், நமது நாட்டை ஆளும் அரசியல்வாதிகள் அனைவரும் நாய் குணம், பேய் குணம் கொண்டவர்களாகத்தான் இருக்க வேண்டும். பழமொழி கொஞ்சம் மாறிவிட்டது, அதனால் பொருளும் மாறிவிட்டது. “நாற்பது வயதில் நா குணம் அறுபது வயதில் அரிய  குணம்” என்பதுதான் உண்மையான பழமொழி.

நாற்பது வயதை எட்டியவர்களுக்கு, உலக அறிவு நிறைய இருக்கும், அவர் பேச்சில் உறுதி இருக்கும், நாவண்மை நிரம்பியிருக்கும். அதனைக் குறிப்பிடுவதற்குதான் “நாற்பது வயதில் நா குணம்”. அறுபது வயதைக் கடந்தவர்கள் அனுபவ அறிவில் திளைத்திருப்பார்கள். வெறும் ஏட்டில், எழுத்தில் வரும் அறிவல்ல அது. அந்த அரிய அனுபவத்தைக் குறிப்பிடும் விதமாக சொல்லப்பட்டதுதான் “அறுபது வயதில் அரிய  குணம்”. இனிமேல் யாரையும் “நாற்பது வயதில் நாய் குணம் அறுபது வயதில் பேய் குணம்”என்று சொல்லாதீர்கள். ஏனென்றால் நானும் சில ஆண்டுகளில் நாற்பது வயதை எட்டிப்பிடிக்க் காத்திருக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அண்மைக்கால வலைப்பதிவுகள்
தொடர்புடைய வலைப்பதிவுகள்