தனது வாழ்நாளில் அன்றுதான் கடைசிநாள் என்பதை உணராமல் அவன் நாட்டியத்தைக் கண்டுகளித்துக் கொண்டிருந்தான். அவன் ரசிப்பது நாட்டியத்தையா அல்லது நடன மங்கைகளையா என்ற கோபம் அவன் மனைவிக்கு. தனிமையில் இருந்திருந்தால் தவறைச் சுட்டிக்காட்டி இடித்துரைக்கலாம். ஆனால் நாடாளும் அரசனை அவை முன்னிலையில் எவ்வாறு கடிந்துகொள்வது? தான் கோபத்திலிருக்கிறேன் என்றுணர்த்த விருட்டென்று எழுந்து சென்றாள் அவள். கோப்பெருந்தேவி கோபப்பெருந்தேவி ஆனாள். அவள் விருட்டென்று போனதும் சுருக்கென்று புத்தியில் உரைத்தது அவனுக்கு. இல்லாளின் உள்ளம் குளிரச்செய்யும் வழியறியாது அரியணை என்னும் தீயில் அமர்ந்திருந்தான் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன். ஆரியர்களைக் கதறவிட்ட நெடுஞ்செழியனுக்கும் மனைவியென்றால் உதறலெடுக்கும் போலும்.
காணாமல் போன கால்சிலம்பை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பது, கோப்பெருந்தேவிக்கு ஏற்கனவே கிடப்பில் கிடக்கும் கோபம். நாட்டுக்கே அரசனென்றாலும், அந்தப்புரத்தில் புருசன் என்ற பதவி மட்டுமே செல்லுபடியாகுமா? இதில் அரசனுக்குக்கூட விதிவிலக்கு இல்லையா? நாட்டிய மங்கைகளும், நாடாளும் நங்கையும் அவன் மனதை சற்றுத் தடுமாறச் செய்திருந்தார்கள். சில மங்கைகள் மரணத்தின் தங்கைகள் என்பதை அவன் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. கலங்கியிருந்த அவன் உள்ளத்தை மன்னா! என்ற குரல் கலைத்தது. அங்கு நின்றிருந்தவன் அரண்மனைக் காவலன். அவன் கையில் ஒரு சிலம்பு. காணாமல் போன மனைவியின் காற்சிலம்புதான் கிடைத்து விட்டதென்று அகமகிழ்ந்தான் நெடுஞ்செழியன். மனைவியை அமைதிப்படுத்த ஒரு காரணம் கிடைத்ததை எண்ணிப் பூரித்தான். அந்த பூரிப்பில் ஒருகணம் தன்னை மறந்தான். குற்றம் சாட்டப்பட்டவன் புகார் நாட்டைச் சேர்ந்த கோவலன் என்றறிந்தான். அவன் மாசாத்துவன் மகனென்று அறிந்திருந்தால் விசாரணை திசைதிரும்பியிருக்க வாய்ப்புண்டு. ஆனால் மனைவியின் கோபம் மன்னனின் கண்களை சிறிது நேரம் மறைத்திருந்தது, ஆகையால் விசாரணை ஏதுமின்றி கோவலனைக் கொண்டுவா என்பதற்குப் பதிலாக கொன்றுவா என்று உத்தரவிட்டான். உணர்ச்சியின் வேகத்தில் மாமன்னனும் மதிமயங்கினான். வாக்குத்தவறினான் மதுரை வேந்தன்.
கண்ணகி வாய்ச்சொல்லில் வீரரில்லை. ஆனால் கணவனை இழந்த மன அழுத்தம், பாண்டிய நாட்டு அரசனை, அவன் அவையிலேயே “தேரா மன்னா” என்று சொல்ல வைத்தது. கள்வனல்ல அவள் கணவன் என்று நிரூபிக்கப் பணித்தான் மன்னவன். “மாணிக்கப்பரல் என் சிலம்பு, உடைத்துணர்க சிலம்பை” என்று வெடித்து நின்றாள் மாநாய்கன் மகள். வெடித்துச் சிதறிய மாணிக்கப்பரல் கண்ட மன்னன் மனம் உடைந்தான். “யானோ அரசன் யானே கள்வன், மன்பதை காக்கும் தென்புலம் காவல் என் முதல் பிழைத்தது கெடுகவென் ஆயுள்” என்றுரைத்து உயிரை விட்டான் “ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்”.
சிலப்பதிகாரம் கதையல்ல, இந்த தமிழ்மண்ணின் வரலாறு. அறம் தவறிவிட்டோம் என்றுணர்ந்த மறுநொடி உயிரைவிட்ட மன்னன் வாழ்ந்த மண்ணின் வரலாறு. “அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்று நம்பிய மன்னர்கள் வாழ்ந்த நாட்டில் பிறந்தவர்கள் நாம். மன்னராட்சியில் சிறப்புடன் வாழ்ந்த நாம் மக்களாட்சியில் ஏன் சிறுமைப்பட்டுக் கிடக்கிறோம்? மக்களாட்சியின் மாபெரும் ஆயுதம், நமது வாக்கு. அன்று நம் வாக்குத் தவறானதால் நமது வாழ்க்கைத் தவறானது. ஒரு வாக்கு வாழ்க்கையின் போக்கையே மாற்றும். இனி என் வாக்கு என்றுமே தவறாதென்று உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள். வாக்குத் தவறிய ஒரே காரணத்தால் உயிரையே விட்ட நெடுஞ்செழியனை மனதில் ஒருகணம் நினைத்துக் கொள்ளுங்கள். மறக்காமல் மனசாட்சியுடன் வாக்களியுங்கள்.
வாக்குத் தவறானால் வாழ்க்கைத் தவறாகும்.
வாக்கு முறையானால் தலைமுறை வாழும்.
அருமை தோழர்..
நற்பதிவுகள்
LikeLiked by 1 person
மிக்க நன்றி தோழர்.
LikeLike
Nalla irukku Rajesh
LikeLike
நன்றி கௌரிசங்கர். தியானத்தில் ஆழம் தொட்ட நண்பனின் வாழ்த்து மகிழ்ச்சியடைய வைக்கிறது.
LikeLike