ஏன் கடவுள்?

பெரியாரை விமர்சிப்போம் 

கடவுள் இல்லை இல்லை இல்லவே இல்லை! கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்! கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்! கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி! என்று பெரியார் சொன்னதை, பகுத்தறிவேயில்லாமல் ஏற்றுக்கொண்டு, பெரியாரைக் கடவுள் போலவே சித்தரிக்க முற்படும் ஒரு கூட்டம் இன்றும் தமிழகத்தில் உண்டு. கூடியவிரைவில் அந்தக்கூட்டம், கடவுள் ஈரோட்டில் பிறந்தார் என்று சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. எனக்கு பெரியார் மீது நிறைய நன்மதிப்பும்  உண்டு, நிறைய விமர்சனங்களும் உண்டு. திருவள்ளுவரையே விமர்சனத்தோடு அணுகலாம் என்ற பார்வை கொண்ட தமிழகத்தில், பெரியாரை விமர்சனம் செய்தால் மட்டும் கொந்தளிக்கிற முட்டாள்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது வருத்தப்பட வேண்டிய உண்மை. நான் எழுத வேண்டிய தலைப்புக்கும் பெரியாருக்கும் பெரிய தொடர்பில்லை என்றாலும், கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்று மிகக்கவனமாக வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிற பெரியாரைத் தொட்டுவிட்டு கட்டுரைக்குள் நுழைவது பொருத்தமாக இருக்கும். ஏனென்றால், கடவுளைப் படைத்தவன் முட்டாள் என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தியிருந்தால், அந்த வார்த்தையின் வீரியம் குறைந்திருக்கும், ஆனால் கற்பித்தவன் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார். அந்த வார்த்தைப் பயன்பாட்டிற்காக நிச்சயம் பெரியாரைப் பாராட்டியே ஆகவேண்டும். ஆனால், பெரியாரை விமர்சனத்தைக் கடந்த ஆளுமையாகப் பார்க்க முடியாது. நான் நிச்சயமாக விமர்சிப்பேன். அதனால் என் மீது வரும் விமர்சனங்களை எதிர்கொள்ள ஆயத்தமாகவே இருக்கிறேன். 


கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்! கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி! என்று பெரியார் சொன்ன  விமர்சனத்துக்கு எதிராகத்தான் இந்த கட்டுரை அமையவிருக்கிறது. பெரியார் சொன்ன நான்கு வரிகளில், கடைசி மூன்று வரிகளின் மீதுதான் எனக்கு விமர்சனம் உண்டு. ஏனென்றால் முதல் வரியை நானும் உறுதியாக நம்புகிறேன். கடவுள்  இல்லவே இல்லையென்று ஆழமாக நம்பும் ஒருவன், கடவுள் நிச்சயம் தேவைதான் என்ற வாதத்தை முன்வைக்கும் போது, அது பலருக்கும் ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கலாம். ஒரு கடவுள் மறுப்பாளனாக, மனித சமுதாயத்திற்கு கடவுள் ஏன் தேவை என்ற வாதங்களை முன்வைக்க விரும்புகிறேன். கடவுளையும் விமர்சிப்போம், பெரியாரையும் விமர்சிப்போம் என்ற விமர்சனப் பார்வையோடு கட்டுரைக்குள் நுழைவோம். 

ஏன் கடவுள்

கடவுள் என்ற கற்பனை கதாபாத்திரம் சமுதாயத்திற்கு ஏன் தேவை என்ற விளக்கத்தை ஆராய முற்படுவதற்கு முன்பாக, மனித சமுதாயத்தின் சில இயல்புகளைப் புரிந்து கொண்டால், கடவுள் தேவைதானா என்ற கேள்விக்கு விடை கிடைக்குமென்று நம்புகிறேன். டார்வின் வந்து சொல்லும் வரை, நாம் குரங்கிலிருந்து வந்தோம் என்று யாரும் நம்பவில்லை. சொன்னபிறகும் பலர் நம்புவதற்கு ஆயத்தமாகயில்லை. அது ஒருபுறம் இருக்கட்டும். நாம் அறிவியலை சார்ந்தே நகர்வோம். நாம் விலங்கிலிருந்து வந்தவர்கள், அதுதான் உண்மை. விலங்குகளின் குணம் இன்னும் நமக்குள் ஊறிக்கிடக்கத்தான் செய்கிறது. விலங்குகளில், வலிய விலங்குதான் காட்டை ஆளும். ஏனென்றால் ஒரு வலிமைமிக்க விலங்கிலிருந்து உருவாகும் தலைமுறை, அந்த விலங்கை விட இன்னும் வலிமையாக இருக்கும். ஒவ்வொரு உயிரினமும் தான் வாழுமிடத்திற்கு ஏற்றாற்போல தன்னைத் தகவமைத்துக் கொள்ள, இயற்கையாக நிகழும் போராட்டங்கள்தான் அவை. மனிதர்களுக்குள்ளும், யார் வலியவன் என்ற போராட்ட குணம் இயல்பாகவே இருக்கும். 

மனித இனம் குழுக்களாக வாழத்துவங்கியபோது, உணவுக்காக பிற குழுக்களைத் தாக்கிக் கொல்வது வழக்கமாக இருந்தது. மனிதர்கள் மற்றும் விலங்குகளின் தாக்குதலிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள, வலிமையான ஒருவர் தேவைப்பட்டார். அன்றுதான் காவல் பிறந்திருக்க வேண்டும். சிறந்த காவலாளிக்கு சிலை வைக்க வேண்டுமென்ற கோரிக்கை, நடுகற்களை உருவாக்கியது. நடுகற்கள்தான் முதல் கோயில், முதல் கடவுள் என்று சொல்லலாம். நாளாக நாளாக, அந்த நடுகற்களின் மீது ஒரு மரியாதை கலந்த பயம் உருவாகத் தொடங்கியது. அந்த மரியாதை கலந்த பயம் ஒருவித சமூக ஒழுக்கத்தை உருவாக்கியிருந்தது. இது கடவுளின் தேவையை உணர்த்தியது. கடவுள் ஒரு கற்பனைதான் என்றாலும், அந்த கற்பனை ஒரு சமூகத்தையே கட்டிப்போடும் வல்லமை கொண்டது என்பதை மறுக்க முடியாது.

சமுதாய ஏற்றத்தாழ்வு

சமுதாய ஏற்றத்தாழ்வுகள் தவிர்க்க முடியாதவை. சமூகத்தில் தாழ்ந்த நிலையில் வாழும் மனிதர்களுக்கும், ஏற்றத்தில் வாழும் மனிதர்களுக்குமிடையே மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமிருக்கும். ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்குமிடத்தில், வன்முறைகளும், போர்களும், கலகங்களும் தவிர்க்க முடியாதவை. ஒரு கற்பனைக்கு, சொர்க்கம், நரகமென்றெல்லாம் ஒன்றும் கிடையாது; கடவுள் தண்டிப்பார் என்பதெல்லாம் பொய்தான்; என்று ஒட்டுமொத்த உலகமும் நம்புகிறதென்று வைத்துக்கொள்வோம். அதன்பிறகு இந்த உலகத்தில் நடக்கும் நிகழ்வுகளை ஒரு நொடி எண்ணிப்பாருங்கள். அப்படி ஒரு சூழ்நிலையைக் கற்பனை செய்வது கூட கடினமாக இருக்கும். 700 கோடி பேர் கொண்ட இந்த மனிதக் கூட்டத்தைக் கட்டுப்படுத்த நம்மிடம் என்ன இருக்கிறது?

சட்டம், ஒழுங்கு, தனிமனித ஒழுக்கம் எல்லாம் ஓரளவுதான் மனிதர்களைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் கடவுள் என்ற பிம்பம் இவற்றை கட்டுக்குள் வைக்கிறது. அதற்கு முதன்மையான காரணம், இறந்த பிறகும் கூட கடவுள் என்ற ஒருவர் நம்மை தண்டிப்பார் என்ற உள்ளுணர்வு, தவறு செய்தால் நீ நரகத்துக்குப் போவாய் என்ற பயம், ஒழுக்கமாக வாழ்ந்தால் வாழ்க்கைக்குப் பிறகு சொர்க்கம் கிடைக்கும் என்ற ஆசை, போன்ற கடவுளைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் மாயத்தோற்றத்தால் உருவாகும் சமூகக்கட்டுப்பாடுதான். ஆனால் இவற்றை  சட்டம், ஒழுங்கு மூலம் கொண்டுவருவது சாத்தியமில்லை. விலங்கிலிருந்து பிறந்த மனிதர்களுக்குள், யார் வலிமையானவன் என்ற போட்டி இயல்பாகவே இருக்கும், இவற்றையெல்லாம் கட்டுப்படுத்த, கடவுள் என்ற மாயை கட்டாயம் தேவை. 

வாழ வழியில்லாதவர்கள்

வயோதிகர்கள், பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள், உடல்நலக் குறைபாடு உடையவர்கள்,  மேலும் பல காரணங்களால் உழைக்க இயலாமல் இருப்பவர்கள் அனைவருமே சமூகத்தின் ஒரு அங்கம். அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது யார், பசிக்கு உணவளிப்பது யார்? அன்னதானம் அளித்தால் உனக்கு சொர்க்கம் கிடைக்கும் என்ற ஆசை, ஒரு பணக்காரனை பிறருக்கு உணவளிக்கத் தூண்டுகிறது. கோயில் கட்டினால் வம்சம் தழைக்குமென்ற நம்பிக்கை, காசு படைத்தவர்களைக் கோயில் கட்ட வைக்கிறது. அந்த கோயில் வீடிழந்தவர்கள் பலருக்கு வீடாக இருக்கிறது. ஒருவேளை, கோயில்களில் அன்னதானம் இல்லையென்றால், உணவுக்கு வழியில்லாத பலகோடி மக்களுக்கு உணவளிக்க நம்மிடம் என்ன திட்டம் இருக்கிறது? எண்ணிப்பாருங்கள்!!

சில ரகசியங்களும், பாரங்களும்  

சில உண்மைகள் பலருக்குத் தெரிந்தால் மனம் புண்படும். ஆனால் அவற்றை மனதுக்குள்ளேயே வைத்திருந்தால் மன அழுத்தம் உண்டாகும். அப்படி ஒரு நிலையில் யாரிடமும் சொல்லமுடியாத பல ரகசியங்களையும், மனதை உறுத்தும் பாரங்களையும் கடவுளிடம் சொல்லிவிட்டோம் என்ற எண்ணம் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். பலகோடி மக்களின் மனதில் தேங்கி நிற்கும் பாரங்களைக் குறைக்க நம்மிடம் எத்தனை மனோதத்துவ நிபுணர்கள் இருக்கிறார்கள். ஆனால் இவற்றையெல்லாம் கடவுள் என்ற சிலை சத்தமின்றி செய்து முடிக்கிறது. 

கைவிடப்பட்ட நிலை

நாம் நேசிக்கும் ஒருவருக்கு முடியாத நிலையில், மருத்துவர்களும் கைவிட்டபின்பு, சாமானியர் ஒருவருக்கு கடைசியாக கடவுள் மட்டுமே துணைநிற்பது போன்ற எண்ணத்தை, நம்மால் கொடுக்க முடியுமா என்பது சந்தேகமே. அப்படியொரு கைவிடப்பட்ட நிலையிலும், வேறு ஒரு மருத்துவரையோ, வேறு சிகிச்சை முறைகளைத் தேடிச்செல்வதுதான் பகுத்தறிவுக்கு உகந்தது என்பதுதான் எனது பொதுவான வாதமாக இருக்கும். இருப்பினும் கைவிடப்பட்ட நிலை என்பது வாழ்வில் ஏதோ ஒரு சூழலில் நம்மை ஆட்கொள்ளவே செய்கிறது, அந்த சூழ்நிலையில் கடவுள் என்ற கருத்தாக்கம் தரும் ஆறுதல் பலரால் தர இயலாதென்பது உண்மைதான். ஒருவேளை நாம் நேசிக்கும் மனிதர்கள், இறந்துபோகும் தருவாயில், அவர்கள் சொர்க்கத்தில் கடவுளின் அரவணைப்பில் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள் என்ற எண்ணம், பிரிவினால் உண்டான ஆற்றாமையைக் குறைக்க உதவுகிறது.

மதம் என்னும் நிறுவனம் 

கடவுள் என்ற கருப்பொருள், தான் உருவாக்கப்பட்ட வேலையைக் கச்சிதமாக செய்தாலும், மதம் என்ற பெயரில் அது நிறுவனமயமாக்கப்பட்டபோது, அதன் எதிர்மறைப் பாதிப்புகளையும்  மனித சமூகம் அனுபவித்திருக்கிறது. மதம் என்ற பெயரில்  இந்த பூமியில் நடந்த வன்முறைகளும், கொலைகளும் கணக்கிட முடியாதவை. தீமை செய்தால் கடவுள் தண்டிப்பார் என்ற எண்ணம் இருந்தவரை, கடவுள் பயமும் மிகுதியாக இருந்தது, ஆனால் பாவத்துக்கு பரிகாரம் செய்கிறோம், பிராயச்சித்தம் செய்கிறோம் என்று ஒரு கூட்டம் கிளம்பியது, அந்தக்கூட்டத்தின் கைகள் கடவுள் மேல் பட்டதும், அதன் உருவச்சிலையில் அழுக்குப்படிய துவங்கியது. அதன் பிறகு கடவுளின் மேலிருந்த பயம் கொஞ்சம் குறைந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஊருக்குள் அனைத்துக் குற்றங்களையும் செய்துவிட்டு உண்டியலில் காசுபோட்டால் கடவுள் மன்னித்துவிடுவார் என்ற நம்பிக்கை துளிர்விட்ட பின், கடவுள் என்ற கொள்கை கொஞ்சம் நீர்த்துப்போனது என்பது உண்மை. இருப்பினும், கடவுள் என்ற பின்னணியில் நடந்த நன்மைகளையும், தீமைகளையும் ஒரு தராசுத்தட்டில் வைத்துப்பார்த்தால், நிச்சயம் நன்மைகளே அதிகம் என்று சொல்லலாம். ஆனால், விமர்சனமென்று வந்துவிட்டால் கடவுள் நம்பிக்கையுள்ள திருவள்ளுவர் கூட கடவுளை விமர்சிக்கத் தயங்கியதில்லை. 


கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். (குறள்: 2) 


என்று கடவுளின் காலடியைத் தொழ வேண்டுமென்று துவக்கத்தில் சொல்லும் வள்ளுவர், யாரேனும் பிச்சையெடுத்து வாழும் நிலை ஏற்பட்டால், கடவுள் அலைந்து கெடட்டுமென்று சாபமிடுகிறார்.


இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான். (குறள்: 1062)


இந்த விமர்சனப்பார்வை, தமிழர்களுக்கு திருவள்ளுவர் அளித்த கொடை. ஆகையால் பெரியார் சொன்னாரென்றால் விமர்சனமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற பார்வையை விடுத்து, கடவுள் என்ற பிம்பத்தில் அப்பியிருக்கும் அழுக்குகளைக் களைந்தால் சமூகத்திற்கு நன்மை விளையும். 

சமூக விஞ்ஞானி

ஒருவேளை உணவுக்கான உத்தரவாதம் முதல், இறக்கும் தருவாயில் ஆறுதலளிக்கும் வரை மனித சமுதாயத்திற்கு கடவுள் என்ற கட்டமைப்பு மிகப்பெரிய உதவி செய்கிறதென்பதை மறுக்க முடியாது. இவற்றையெல்லாம் எண்ணிப்பார்க்கும்போது, கடவுளைக் கற்பித்தவன் சமூக விஞ்ஞானி! கடவுளைப் பரப்பியவன் ஞானி! கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டியல்ல! என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. 

மனதளவில் தூய்மையாக வாழும் எவருக்கும்

கடவுள் என்ற காட்சிப்பிழை

தேவையில்லை.

2 Comments Add yours

  1. Ljp says:

    Nice message but why we divide history into Bc and Ad?

    Liked by 1 person

  2. Ljp says:

    Nice 👌 message friend.we didn’t expect u had this much of knowledge keep it up.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.