தமிழை மறந்த தமிழர்களுக்கு ஒரு கடிதம்

தமிழை மறந்து போன தமிழர்களுக்கு, பச்சைத்தமிழனின் கடிதம். மடல் என்ற வார்த்தையைப் பயன்படுத்த சிறு தயக்கம். ஏனென்றால், சங்க காலத்தில் மடலேறுதல் என்பது காதலை ஏற்றுக்கொள்ளாத பெண்ணிடம் ஊரறிய பகிரங்கமாக தனது காதலை சொல்வதற்கு பயன்படுத்தும் ஒரு செயல். அது ஐந்திணை ஒழுக்கத்தில் வராது, அதனால் மடல் என்பதை விட கடிதம் என்ற வார்த்தையைக்  குறிப்பிட விரும்புகிறேன். இது தாய்த்தமிழை நேசிப்பவர்களுக்கு எழுதப்பட்ட கடிதமல்ல என்பதையும் பதிவு செய்கிறேன்.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நீங்கள் யாரும் தமிழன் கட்டிய கோயிலில், தமிழில் வழிபாடு செய்ய வேண்டுமென்று ஒருபோதும் ஆசைப்பட்டு விடாதீர்கள்; இறந்து போனவரின் உடலை கோயில் அருகில் கொண்டு செல்வதை பெரும் குற்றம் என்று கருதும் நீங்கள், இறந்து பல நூற்றாண்டுகள் ஆகியும் கோயிலின் கருவறைக்குள் குடிகொண்டிருக்கும் சமஸ்கிருதத்தை குழிதோண்டிப் புதைத்த பாவத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும். மேலும் அங்கு கருவறைக்குள் உல்லாசமாக இருக்கும் பல தேவநாதன்களின் சாபம் வேறு வந்து சேரும். போதாக்குறைக்கு தமிழ் வேறு வளரத்தொடங்கி விடும். அந்த பாவத்தையெல்லாம் தயவுசெய்து நீங்கள் சம்பாதித்துக் கொள்ளாதீர்கள்.

ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் வாழ்ந்த தமிழர்கள், தென்னிந்தியா வரைக்கும் துரத்தப்பட்டார்கள். அதன் பிறகு திட்டமிட்டு நமது மொழி பல நூறு மொழிகளாக பிரிக்கப்பட்டது. தமிழ் பேசும் மக்களின் எண்ணிக்கை கால்வாசியானது.  ஆனால் அதுபற்றியெல்லாம் நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும். அங்கு மோடி ஒலிப்பெருக்கியில் தமிழில் பொங்குவார், இங்கு ஒரு கூட்டம் திருவள்ளுவருக்கு பூணூல் மாட்டி விடும், ஆனால் எங்கோ வடநாட்டில் அவரை தாழ்த்தப்பட்டவர் என்று சொல்லி, மூலையில் கிடத்திவிடுவார்கள். திருக்குறள் சொல்லும் மோடிக்கு திருவள்ளுவர் என்றால் யாரென்றே தெரியாது. இதைப்பற்றியெல்லாம் கூட நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். இருக்கவே இருக்கிறது இந்தி. தமிழ் நாட்டில் இருந்தாலும் தமிழ் பேசமாட்டேன் என்று சொல்லும் வட இந்தியாக்காரனிடம் பேசுவதற்கு நிச்சயம் அது உதவும். கோவிலில் சின்னஞ்சிறு சிறுமியைக் கற்பழித்துக் கொன்றுவிட்டு, கைது செய்தால் கத்துவார்கள் “பாரத் மாதாகி ஜே” என்று. நீங்களும் கூடவே சேர்ந்து நின்று இந்தியில் கூச்சலிடலாம் “பாரத் மாதாகி ஜே”. 

இந்தியா பலவித கலாச்சாரம், பண்பாடுகளை உள்ளடக்கிய நாடு, ஆகையால் கலாச்சாரக் கலப்பு என்பது இங்கு தவிர்க்க முடியாதது. எனவே  உங்கள் பிள்ளைகளுக்கு மறந்தும் தமிழில் பெயர் வைத்து விடாதீர்கள். ஆனால் தமிழ்நாட்டின் இட்லியைத் தவிர வேறு ஏதேனும்  தமிழ் கலாச்சாரம் இந்தியாவில் பரவியிருக்கிறதா? வேறு எந்த மொழி பேசுகிற மக்களாவது தமிழ்ப்பெயர்களை வைத்துக் கொள்கிறார்களா? நாம் இங்கே இந்தி படிப்பதைப் போல வேறு எந்த மாநிலத்திலாவது தமிழ் படிக்கிறார்களா? என்றெல்லாம் ஒருபோதும் சிந்தித்து விடாதீர்கள். ஒருவேளை சிந்தித்தால், தமிழ் வளர்ந்துத் தொலைத்துவிடும். உலகின் மூத்தமொழி தமிழ்தான் என்று தமிழர்கள் அனைவருக்கும் தெரிந்துவிட்டால், 100 ஆண்டுகள் கூட ஆகாத இந்தியின் நிலைமை என்னாவது. ஆகையால் தப்பித்தவறி கூட உங்கள் குழந்தைகளுக்கு தமிழ்ப்பெயரை மட்டும் வைத்துவிடாதீர்கள். 

தமிழ் தெரிந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பது போன்ற வேலைகளில், தமிழே தெரியாத இந்திக்காரன் எப்படி வேலைக்கு சேர்ந்தான் என்றெல்லாம் ஒருபோதும் யோசிக்காதீர்கள். தமிழ்நாட்டைத் தவிர பிற மாநிலங்களில், தனியார் மற்றும் அரசாங்க வேலைகளுக்கு, 80 சதவீதத்துக்கு மேல்  அந்தந்த மண்ணின் மைந்தர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு அளிக்க வேண்டுமென்றுமென்று சட்டம் இயற்றியிருக்கிறார்கள். அது போன்ற சட்டம் தமிழ்நாட்டிலும் இயற்றப்பட்டால், தமிழ்நாட்டில் வந்து குடியேறிய ஒரு கோடி வடநாட்டுக்காரன் நிலைமை என்னாவது. நமது அரசாங்கத்தில், சாராயம் ஊற்றிக் கொடுப்பவனுக்கே அரசாங்க வேலை கிடைக்கிறது. நீங்கள் ஏன் நமது மக்களின் வேலைவாய்ப்பைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்.

ஏதோ ஒரு மாநிலத்தில் எங்கோ பிறந்த, யார் யாருடனோ நட்பாகப் பழகுங்கள். ஏனென்றால் யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று கணியன் பூங்குன்றனார் 3000 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி விட்டார். ஆனால் இன்னும் 3000 ஆண்டுகளானாலும்  தமிழனை என்ன சாதி, என்ன குலம் என்றெல்லாம் விசாரித்து அறிந்த பின்பே வீட்டுக்குள் அனுமதியுங்கள். ஒருவேளை, நீங்கள் எல்லா தமிழ் சாதியினரையும் உடன்பிறந்தவர் போல நடத்தத் துவங்கிவிட்டால், MGR, கருணாநிதி போன்ற பிற மொழியினர் எப்படித் தமிழ்நாட்டை ஆள முடியும். சாதியை ஒழிக்கிறோம் என்று கூவிக்கொண்டு, சாதிச்சங்கங்களோடு கூட்டணியும் வைத்துக்கொண்டு, இந்த திராவிட கட்சிகள் 60 ஆண்டுகளாகக் தேர்தலில் வெற்றி பெறுகிறார்கள் என்றால், உங்களைப் போன்ற சாதி வெறிபிடித்த உத்தமர்கள் மீது வைத்த நம்பிக்கைதான் காரணம் . அவர்களின் நம்பிக்கையை ஒருபோதும் சிதறடித்து விடாதீர்கள். இல்லையென்றால் சாதி செத்துவிடுமல்லவா. சாதியா, சொரணையா என்றால் சாதிதானே முக்கியம். 

தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களுக்குக் கொடுத்த  இட ஒதுக்கீடுதான் எங்கள் வேலைவாய்ப்பைப் பறித்துவிட்டது என்று ஒரு கூட்டம் கூவிக்கொண்டே இருந்தது. அப்படியா சங்கதியென்று தமிழக சாதிப்பட்டியலைப் புரட்டினால் அதில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக சாதிகள், தமிழ் சாதிகளே இல்லையென்று தெரிய வந்தது. ஆனால் நீங்கள் இதற்கெல்லாம் அலட்டிக்கொள்ள வேண்டாம். நாம் வழக்கம்போல கூவுவோம், இட ஒதுக்கீடு வேண்டாம். 

வீரன் அழகு முத்து கோனார் சாதி, தீரன் சின்னமலை கவுண்டர் சாதி, சுந்தரலிங்கம் பள்ளர் சாதி, வ.உ.சிதம்பரனார் பிள்ளைமார் சாதி, ஐயா முத்துராமலிங்கம் தேவர் சாதி, கக்கன் பறையர் சாதி, காமராஜர் நாடார் சாதி. இப்படி தமிழகத் தலைவர்கள் அனைவரையும் ஒரு சாதி வட்டத்துக்குள் அடைத்து விடுங்கள். இந்தத்  தலைவர்கள் அனைவருமே நாட்டுக்காகவே வாழ்ந்து மடிந்தாலும், அவர்களைத் தமிழர்கள் என்று பொதுவாக எண்ணி விடாதீர்கள். இதில் எங்கள் சாதித்தலைவர் பெயரை விட்டுவிட்டீர்களே என்று கவலைப்படுங்கள். ஏனென்றால் இந்திய வரலாற்றிலேயே, வெள்ளையனை சிறைபிடித்து, உயிர்ப்பிச்சை கொடுத்து, பிழைத்துப்போ என்று  விரட்டிய வேலுநாச்சியாரின் வரலாறு உங்களுக்கு முக்கியமில்லை. வெள்ளைக்காரன் அளிக்கும் மானியத்துக்காக வயதான ஒருவரைத் திருமணம் செய்து, மானியத்துக்காக ஒரு குழந்தையையும் தத்தெடுத்துக் கொண்டு, அதன்பின்னும் மானியம் தர மறுத்ததால் வேறு வழியின்றி வெள்ளைக்காரனிடம் சண்டையிட்டு செத்துப்போன ஜான்சிராணியின் வரலாறுதான் முக்கியம். சிறையில் செக்கிழுத்த செம்மலின் வரலாறு முக்கியமில்லை. ஜாலியன் வாலாபாக்கில் ஆயிரம் பேரைக் கொல்லலாம், ஆனால் மாட்டுக்கொழுப்பை எப்படி தோட்டாவில் தடவலாம் என்று பொங்கி எழுந்து கொலை செய்த மங்கள் பாண்டேவின் வரலாறுதான் முக்கியம்.  

அரசாங்க வேலைக்கு தேர்வு எழுத வந்த பிற மாநில மக்களை அடித்து விரட்டிய சிவசேனா கட்சிக்காரர்களைப் பார்த்து, யார் மராட்டியர் என்று ஒருவரும் கேட்கவில்லை. மரம் வெட்டியதற்கு சுட்டுத்தள்ளிய ஆந்திராவிலும், யார் தெலுங்கன் என்ற சந்தேகம் வருவதேயில்லை. தண்ணீர் தாருங்கள் என்று கேட்ட குற்றத்திற்காக, ஒரு முதியவரை ஜட்டியோடு நிற்க வைத்த கர்நாடகாவிலும், யார் கன்னடன் என்ற சந்தேகம் ஒருவருக்கும் வந்தபாடில்லை. கோயிலுக்குப் போனவன் மேல் வெந்நீர் ஊற்றிக்கொன்ற கேரளாவில் கூட யார் மலையாளி என்ற கேள்வி பிறக்கவேயில்லை. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும், தமிழன் என்ற சொல்லை சொன்னாலே  பாதிக்கும் மேற்பட்டவர்கள் வாயிலிருந்து  யார் தமிழன் என்ற கேள்வி தவறாமல் வந்து விடுகிறது. ஒன்று மட்டும் புரியவில்லை, இந்த கேள்வி கேட்கும் அனைவருக்கும், தங்கள் தாய்மொழி எதுவென்று புரியவில்லையா அல்லது தந்தை பெயர் தெரியவில்லையா? அவர்கள் தான் விளக்க வேண்டும். 

இலங்கையில் மூன்று வயது பிஞ்சுக் குழந்தையை கொதிக்கிற தாரில் மூழ்கடித்துக் கொல்வார்கள். பிஞ்சுக்குழந்தைகள் மீதும் ராணுவ டாங்கிகளை ஏற்றிக் கொல்வார்கள். பெற்றவர்கள் முன்பே இளம்பெண்களை கற்பழித்துக் கொல்வார்கள். போர் என்று சொல்லி பல இலட்சம் மக்களைக் கொத்துக்கொத்தாக கொன்று குவிப்பார்கள். இதையெல்லாம் பார்த்து ரசித்துவிட்டு, மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்று ஒருவன் கவிதை சொல்லுவான். கட்டாயம் அவனது கட்சிக்கே தங்கள் பொன்னான வாக்குகளை செலுத்துங்கள். நீங்கள் அப்படி வாக்கு செலுத்தினால்தான் உங்களை நம்பி தமிழ்த்தேசியம் பேசுகிறவனெல்லாம், வாக்குகள் ஏதும் வாங்காமல் பேசிப்பேசியே செத்துப்போவான். அந்த புண்ணியங்கள் எல்லாம் உங்களைத் தவறாமல் வந்துசேரும். 

இது போன்ற கேள்விகள் உங்கள் மனதில் இன்றும் தோன்றவில்லையென்றால், “ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்” என்ற குறளைப் படியுங்கள். என் மனதில் என்றும் ஒலிக்கும் பாவேந்தரின் வரிகளைச் சொல்லி முடிக்க விரும்புகிறேன்.

“தமிழரெல்லாம் தமிழரையே சார்தல் வேண்டும் 
தமிழரல்லார் தமைச்சார்தல் தீமை செய்யும்.”


“எங்குப் பிறப்பினும் தமிழன் தமிழனே! 
இங்குப் பிறப்பினும் அயலான் அயலனே! 
செங்குருதி தன்னில் தனித்தன்மை வேண்டும் 
சிறிதும் அயலான் கலப்பின்மை வேண்டும்.”

2 Comments Add yours

  1. Ljp says:

    Your thoughts correct but how to implement to your society.writing only not enough try to do something .so friend, come to politics we will give support to you …

    Like

  2. Josely Samdas says:

    On Fri, Aug 21, 2020 at 1:42 AM ராஜேஷ் லிங்கதுரை wrote:

    >
    >
    >
    >
    >
    >
    > ராஜேஷ் லிங்கதுரை posted: ”
    > தமிழை மறந்து போன தமிழர்களுக்கு, பச்சைத்தமிழனின் கடிதம். மடல் என்ற
    > வார்த்தையைப் பயன்படுத்த சிறு தயக்கம். ஏனென்றால், சங்க காலத்தில் மடலேறுதல்
    > என்பது காதலை ஏற்றுக்கொள்ளாத பெண்ணிடம் ஊரறிய பகிரங்கமாக தனது காதலை
    > சொல்வதற்கு பயன்படுத்தும் ஒரு செயல். அது ஐந்”
    >
    > ஐயன்மீர் ,
    >
    அருமையான தெளிவுரை. இந்திய கூட்டமைப்பின் எதிர் கால விளைவு, தமிழர் நாடு
    காணாமல் போகும் நிலை ,என்பதுவே உண்மை.
    அதைத் தடுப்பதற்கான பெரும் திட்டம் ஒன்றை வரைவு செய்ய வேண்டிய கட்டாயம்
    எழுந்துள்ளது. சிறு பொறியாக பற்றவையுங்கள் .விடுதலைத்” தீ”
    பரவட்டும்.

    >
    >
    >

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.