அவர் காலடிகளில் காத்துக்கிடந்த பதவிகள் அத்தனை. நினைத்திருந்தால், உலகின் அனைத்துவித சுகங்களையும் ஒரே இடத்தில் கொண்டுவந்து குவித்துவிடும் அளவுக்கு செல்வச்செழிப்போடு வாழ்ந்திருக்க முடியும். பெற்ற பிள்ளைகளை உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் படிக்க வைத்திருக்க முடியும். மனைவியோடும், பிள்ளைகளோடும் மாடமாளிகையில் காலம் கழித்திருக்க முடியும். ஆனால், காடுதான் பெரும்பாலும் அவருக்கு வீடாக இருந்தது. பிறந்த நாட்டின் விடுதலை நெருப்பு ஒன்றே அவர் நெஞ்சில் பற்றி எரிந்தது.
முதுகுக்குப் பின்னால் இந்தியா என்ற மாபெரும் துரோகத்தை சுமந்து கொண்டு, முகத்துக்கு நேரே அரக்கர்களுடன் போராட வேண்டிய கட்டாயம். இந்தியா, ஈழத்தமிழர்களுக்கு, மன்னிக்க முடியாத குற்றங்கள் ஆயிரம் செய்திருந்தாலும், வாழ்வின் கடைசிநாள் வரை இந்தியாவுக்கு எதிராக செயல்படும் எண்ணம் கடுகளவு கூட அவருக்கு இருந்ததில்லை. புத்தனைப் பெற்றெடுத்ததால் இந்த நாட்டுக்கு சேர்ந்த பெருமை, புகழ் அனைத்துமே என் தலைவனைக் கொன்ற ரத்தக்கறையால் அழிந்துபோனது. இந்தியா என்ற துரோக வாள் மட்டும் அவர் முதுகில் குத்தவில்லையென்றால், இலங்கை என்ற இலையை, களைபோல பிடுங்கி எறிந்திருப்பார்.
நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட மனிதர்களை மட்டுமே இந்த பூமி இதுவரை பார்த்திருக்கிறது. ஆனால், பிறந்த மண்ணின் விடுதலைக்காக, தன்னையும், தான் பெற்ற பிள்ளைகளையும் பலிகொடுத்த ஒரு மாபெரும் தியாகச்செம்மலை இந்த பூமி இதுவரை கண்டதில்லை. அவரைப் பற்றி எழுத, வள்ளுவனும், இளங்கோவடிகளும், கம்பனும்தான் மீண்டும் தமிழ்நாட்டில் பிறந்துவர வேண்டும். பலர் வரலாற்றின் பக்கங்களில் இடம்பிடிப்பார்கள். ஆனால் என் தலைவனின் வாழ்க்கை முழுவதுமே வரலாறுதான்.
வாழ்க பிரபாகரன்.
Like this:
Like Loading...
Related
Published by ராஜேஷ் லிங்கதுரை
ராஜேஷ் லிங்கதுரை என்னும் நான் பிறந்தது தூத்துக்குடிக்கு அருகில் இருக்கும் முள்ளக்காடு என்னும் கிராமம். கல்லூரியில் சேர்ந்த முதல் நாள், ஆசிரியர் உனக்கு எந்த ஊர் என்று கேட்டபோது, எனது ஊர் முள்ளக்காடு, எனது ஊருக்கு அருகிலேதான் தூத்துக்குடி இருக்கிறது என்று சொன்னேன். அவருக்கு நினைவிருக்கிறதோ இல்லையோ உடன்படித்த நண்பர்கள் அனைவரிடமும் எனது பெயர் முள்ளக்காடு என்று பதிவாகிப்போனது. எனது ஊரின் பெயர் என்னை விட்டுப் பிரிக்க முடியாதது.
பொறியாளர் பட்டம் பெற்று பின்பு வணிகவியல் மேலாண்மையும் படித்து, இரண்டுக்கும் தொடர்பில்லாத மென்பொருள் துறையில் வேலை. சாதி, மதம் போன்ற அடையாளங்கள், அரசாங்க அடையாள அட்டைகளுக்கு மட்டும்தான். வாழ்வில் சாதி, மதம் இரண்டையும் வெறுத்து ஒதுக்கி பல ஆண்டுகள் ஆகிறது. பகுத்தறிவாளன் என்ற சொல்லாடலைப் பயன்படுத்த விரும்பவில்லை. பகுத்தறிவு மனிதனாய்ப் பிறந்த எல்லோருக்கும் பொதுவானது. நான் கடவுள் மறுப்பாளன். ஆனால், இல்லாத கடவுளும், இருக்கின்ற கோவில்களும் சமூகத்துக்குத் தேவைதானா என்றால், ஆம் என்பதே எனது பதில்.
சங்க இலக்கியங்களைப் பொருத்தவரை, நிலம், பொழுது ஆகிய இரண்டும் முதற்பொருள். ஆனால், என்னைப் பொருத்தவரை, முதற்பொருள் மொத்தம் மூன்று. நிலம், பொழுது, மொழி. மொழியென்ற ஒன்று இல்லையென்றால், நாமும் விலங்குகளும் ஒன்றுதான். நம்மை மனிதன் என்று உணர வைப்பது நம் தாய்மொழிதான். ஆகவே, தாய்மொழி தாயினும் மேலானது. என் உயிரின் வேர் தமிழ்தான்.
நேற்று பெய்த தொழில்நுட்ப மழையில் முளைத்த இணையத்தில், இன்று தளிர்த்த புது எழுத்தாளர்களில் நானும் ஒருவன். எழுத்து என் முழுநேரப் பணியல்ல. எனது சில ஆசைகளுக்கும், பல ஆற்றாமைகளுக்கும் வாய் முளைக்கும்போது, கட்டுரைகளாக மலர்கின்றன. அதில் அறமும் இருக்கும், அறச்சீற்றமும் இருக்கும்.
எனக்கு தமிழ்த்தாய் மட்டுமே. இந்தியத்தாய் வேண்டுமானால் செவிலித்தாயாக இருந்துவிட்டுப் போகட்டும். வாழ்க தமிழ். வளர்க தமிழ்.
View all posts by ராஜேஷ் லிங்கதுரை