நான் என்பது தனிமனிதனல்ல, சமுதாயத்தின் ஓர் அங்கம்.
சமுதாயம் என்பது மக்கள்தொகையல்ல, அறவோர் வாழும் கூட்டமைப்பு.
அறம் என்பது சட்டதிட்டமல்ல, மனதளவில் தூய்மையாய் வாழ்தல்.
மனம் என்பது மூளையின் பரிணாமமல்ல, ஐம்புலன்களின் கட்டுப்பாடு.
ஐம்புலன்கள் என்பது சுகங்களை நுகர்வதற்கல்ல, இயற்கையின் இயல்பை உணர்ந்து போற்றுவதற்கு.
இயற்கை என்பது நம் தலைமுறை மட்டும் வாழ்ந்து தீர்ப்பதற்கல்ல, வருங்காலத்தை வாழவைப்பது.
வருங்காலம் என்பது கனவல்ல, நிகழ்காலத்தின் தொடர்ச்சி.
நிகழ்காலம் என்பது நிகழ்வுகளின் தொகுப்பல்ல, சந்ததிகளின் தலையழுத்து.
தலையெழுத்து என்பது விதிக்கப்பட்டதல்ல, சுற்றுப்புறச்சூழலின் இயல்புணர்ந்து செயல்படுதல்.
சுற்றுப்புறச்சூழல் என்பது மனிதர் மட்டுமல்ல, பல்லுயிர்களின் கூட்டுறவு.
பல்லுயிர்ப் பாதுகாப்பு என்பது பிறருக்கே உரியது என்பதல்ல, நான் என்றுணர்தல்.
Like this:
Like Loading...
Related
Published by ராஜேஷ் லிங்கதுரை
ராஜேஷ் லிங்கதுரை என்னும் நான் பிறந்தது தூத்துக்குடிக்கு அருகில் இருக்கும் முள்ளக்காடு என்னும் கிராமம். கல்லூரியில் சேர்ந்த முதல் நாள், ஆசிரியர் உனக்கு எந்த ஊர் என்று கேட்டபோது, எனது ஊர் முள்ளக்காடு, எனது ஊருக்கு அருகிலேதான் தூத்துக்குடி இருக்கிறது என்று சொன்னேன். அவருக்கு நினைவிருக்கிறதோ இல்லையோ உடன்படித்த நண்பர்கள் அனைவரிடமும் எனது பெயர் முள்ளக்காடு என்று பதிவாகிப்போனது. எனது ஊரின் பெயர் என்னை விட்டுப் பிரிக்க முடியாதது.
பொறியாளர் பட்டம் பெற்று பின்பு வணிகவியல் மேலாண்மையும் படித்து, இரண்டுக்கும் தொடர்பில்லாத மென்பொருள் துறையில் வேலை. சாதி, மதம் போன்ற அடையாளங்கள், அரசாங்க அடையாள அட்டைகளுக்கு மட்டும்தான். வாழ்வில் சாதி, மதம் இரண்டையும் வெறுத்து ஒதுக்கி பல ஆண்டுகள் ஆகிறது. பகுத்தறிவாளன் என்ற சொல்லாடலைப் பயன்படுத்த விரும்பவில்லை. பகுத்தறிவு மனிதனாய்ப் பிறந்த எல்லோருக்கும் பொதுவானது. நான் கடவுள் மறுப்பாளன். ஆனால், இல்லாத கடவுளும், இருக்கின்ற கோவில்களும் சமூகத்துக்குத் தேவைதானா என்றால், ஆம் என்பதே எனது பதில்.
சங்க இலக்கியங்களைப் பொருத்தவரை, நிலம், பொழுது ஆகிய இரண்டும் முதற்பொருள். ஆனால், என்னைப் பொருத்தவரை, முதற்பொருள் மொத்தம் மூன்று. நிலம், பொழுது, மொழி. மொழியென்ற ஒன்று இல்லையென்றால், நாமும் விலங்குகளும் ஒன்றுதான். நம்மை மனிதன் என்று உணர வைப்பது நம் தாய்மொழிதான். ஆகவே, தாய்மொழி தாயினும் மேலானது. என் உயிரின் வேர் தமிழ்தான்.
நேற்று பெய்த தொழில்நுட்ப மழையில் முளைத்த இணையத்தில், இன்று தளிர்த்த புது எழுத்தாளர்களில் நானும் ஒருவன். எழுத்து என் முழுநேரப் பணியல்ல. எனது சில ஆசைகளுக்கும், பல ஆற்றாமைகளுக்கும் வாய் முளைக்கும்போது, கட்டுரைகளாக மலர்கின்றன. அதில் அறமும் இருக்கும், அறச்சீற்றமும் இருக்கும்.
எனக்கு தமிழ்த்தாய் மட்டுமே. இந்தியத்தாய் வேண்டுமானால் செவிலித்தாயாக இருந்துவிட்டுப் போகட்டும். வாழ்க தமிழ். வளர்க தமிழ்.
View all posts by ராஜேஷ் லிங்கதுரை